எங்கள் நிலத்திற்காக தொடர்ந்து போராடுவோம்

  – ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் உரை

ரஷ்யா படைகள் உக்ரைன் மீது தொடர்ந்து தனது தாக்குதலை நடத்தி வருகிறது. கார்கீவ் நகரத்தையும் ரஷ்யப் படைகள் தொடர்ச்சியாக பீரங்கி, ஏவுகணை மற்றும் வான்வழி குண்டுவீச்சி தாக்கி வருகிறது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. ரஷ்யா-உக்ரைன் இடையே 2ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை போலந்தில் நடைபெறுகிறது; முதற்கட்ட பேச்சுவார்த்தை பெலாரஸ் நாட்டில் நடந்த நிலையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி காணொளி காட்சி வாயிலாக பேசியுள்ளார்.
அதில், எங்கள் நாட்டின் முக்கிய நகரங்கள் முடக்கப்பட்டிருந்தாலும் எங்கள் நிலத்திற்கும், சுதந்திரத்திற்காக தொடர்ந்து போராடுவோம் என்றும் நாங்கள் வலிமையானவர்கள் ஏனென்றால் நாங்கள் உக்ரைனியர்கள் என்றும் பேசியுள்ளார். மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் இருப்பதை அதிகார பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி உரைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கைதட்டல் உடனான பாராட்டு கிடைக்க பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.