நேரு கல்வி குழுமம் சார்பில் சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கும் விழா

கோவை நேரு கல்விக்குழுமம் சார்பில் “ஸ்ரீ பிகே தாஸ் நினைவு சிறந்த ஆசிரியர் விருது 2022” வழங்கும் விழா நடைபெற்றது. இந்த வருடத்திற்கான சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கும் விழா திருமலையம்பாளையம் நேரு கார்டன் வளாகத்தில் உள்ள பிகே தாஸ் நினைவு அரங்கத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு நேரு கல்வி குழுமங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் கிருஷ்ணதாஸ் முன்னிலை வகித்தார். தலைமை நிர்வாக அதிகாரியும் செயலாளருமான கிருஷ்ணகுமார் வாழ்த்துரை வழங்கினார். விழாவிற்கு வந்திருந்தவர்களை நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் அனிருதன் வரவேற்றார்.

விழாவிற்கு முதன்மை விருந்தினராக கோயம்புத்தூர் முதன்மை கல்வி அதிகாரி கீதா கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்து பேசியதாவது: மாணவர்கள் அனைவரும் கோவிட்-19 பெரும் தொற்றுக்கு பிறகு மாணவர்கள் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை கையாள்வதில் ஆசிரியர்கள் மிகவும் சிரமப்பட்டனர். அவர்களை ஊக்கப்படுத்தி நல்ல கற்பித்தலையும் பன்புகளையும் அளிப்பது ஆசிரியர்களின் கடமையாகும்.

மாணவர்களை கையாளும் விதத்தில் ஆசிரியர்கள் மிகவும் சிரமப்படுகின்றார்கள். அவர்களுக்கு மாணவர்களும் பெற்றோர்களும் நல்ல ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மாணவர்களுக்கு நம்மிடம் உள்ள அறிவு, மனிதப்பண்பு, கலாச்சாரம் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றை கற்றுத்தர வேண்டியது நமது பொறுப்பு. மாணவர்களை தட்டிக்கொடுத்து நல்ல முறையில் அவர்களுக்கு கற்பிக்க வேண்டும்.

மேலும் சிறப்பு விருந்தினராக பொள்ளாச்சி செண்பகம் மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல் தாளாளர் ஜோசப் ஆன்சன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

தமிழகத்தை சேர்ந்த 64 ஆசிரியர்கள் மற்றும் கேரளாவை சேர்ந்த 10 ஆசிரியர்கள் உட்பட மொத்தம் 74 பள்ளி ஆசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியருக்கான விருது மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. மேலும் விழாவில் சிறந்த தலைமையாசிரியருக்கான விருது ஈச்சனாரியில் உள்ள கேபிஎம் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப்பள்ளி முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும் விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதை மதுக்கரையில் உள்ள ஸ்ரீ பி மல்லையன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் ரேகா மணிகண்டன், பாலக்காடு, செயின்ட் ரஃபேல் கதீட்ரல் பள்ளி, முதல்வர் சனில் ஜோஸ் மற்றும் கென்னடி மேல்நிலைப்பள்ளி, முதல்வர், பாபு மேத்யூ ஆகியோருக்கு வழங்கப்பட்டது.