பாதாள சாக்கடை சீரமைப்பு பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவேன் – 49 வது வார்டு திமுக வேட்பாளர் உறுதி

கோவை மாநகராட்சி 49 வது வார்டு பகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் அன்னக்கொடி எத்திராஜ், வார்டு பகுதியில் சாலை வசதி, குடிநீர், பாதாள சாக்கடை சீரமைப்பு போன்ற பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவேன் என உறுதியளித்துள்ளார்.

கோவை மாநகராட்சி 49 வார்டில் தி.மு.க.வேட்பாளராக அன்னக்கொடி எத்திராஜ் போட்டியிடுகிறார். இந்நிலையில் இவர் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பகுதி கழக நிர்வாகிகளுடன் பழையூர், மாரியம்மன் கோவில் வீதி, நியூ சிற்றம்பலம் லே அவுட், செங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய வேட்பாளர் அன்னக்கொடி எத்திராஜ், கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சி செய்த அ.தி.மு.க அரசால் இந்த பகுதியில் எந்த வித அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை எனவும், கடந்த எட்டு மாதங்களாக கழக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்கள் பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து அவர், தாம் வெற்றி பெற்றால் இந்த பகுதியில் சாலை வசதி, குடிநீர், பாதாள சாக்கடை சீரமைப்பு போன்ற பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவேன் என உறுதியளித்தார்.

முன்னதாக,வேட்பாளர் அன்னக்கொடிக்கு கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க.வர்த்தக அணி அமைப்பாளர் சுப்ரமணி தென்னவன், பகுதி செயலாளர் நாகராஜ், தம்பு உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.