சிக்கலான அறுவை சிகிச்சை செய்து கேஎம்சிஹெச் மருத்துவர்கள் சாதனை

65 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவருக்கு பழுதடைந்த இருதய வால்வுக்கு பதில் டிரான்ஸ்கதீட்டர் அயோர்டிக் வால்வு பொருத்தி கேஎம்சிஹெச் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

இருதய நோய்க்கான அறுவை சிகிச்சை முறையில் டிரான்ஸ்கதீட்டர் வால்வு பிளேஸ்மெண்ட் என்பது சமீபத்தில் அறிமுகமான புதிய சிகிச்சை முறையாகும். இம்முறையில் நோயாளியின் பழுதடைந்த இருதய வால்வுக்கு பதில் மாற்று வால்வை ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சை இல்லாமல் பொருத்துவார்கள். ஏற்கனவே பொருத்தப்பட்ட வால்வை மாற்றுவது என்பது மிகவும் சிக்கலானதும் அபாயம் நிறைந்ததும் ஆகும். இதற்கு விரிவாக திட்டமிட வேண்டும் என்பதால் இதை அவசரகால சிகிச்சையாக மேற்கொள்வது மிகவும் அரிதான விஷயமாகும்

65 வயது மதிக்கத்தக்க நபர் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது ஒரு கனமான பொருளை தூக்கியுள்ளார். அப்போது அவருக்கு நெஞ்சுவலியும் மூச்சுவிடுவதில் சிரமமும் ஏற்பட்டுள்ளது. இவருக்கு 11 வருடங்களுக்கு முன்பு வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஈசிஜி மற்றும் ஸ்கேன் எடுத்துப் பார்த்தபோது முன்பு மாற்றியிருந்த வால்வில் இரத்தக்கசிவு கண்டறியப்பட்டது, கனமான பொருளை சட்டெனத் தூக்கும்போது சிலருக்கு இதுபோன்று ஏற்படக்கூடும். இதுபோன்ற நோயாளிகளில் சிலருக்கு மருத்துவமனைக்கு வருவதற்கு கூட அவகாசம் இருக்காது.

நோயாளி மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததாலும் அவருக்கு திரும்பவும் ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்வது மிகவும் ஆபத்தாய் முடியும் என்பதாலும் அவருக்கு டிரான்ஸ்கதீட்டர்
அயோர்டிக் வால்வு பொருத்துவது என முடிவு செய்யப்பட்டது, இந்த முறையில் அவரது மார்பை திறக்கத் தேவையில்லாமலும் அல்லது ஹார்ட் லங் இயந்திரம் பயன்படுத்தாமலும் தொடையில் ஒரு சிறுதுளை மூலம் முன்பிருந்த வால்விலேயே ஒரு புதிய வால்வு பொருத்தப்படும்.

கேஎம்சிஹெச் இருதய நோய் நிபுணர்கள் டாக்டர் தாமஸ் அலெக்ஸாண்டர், டாக்டர் பாலகுமரன் மற்றும் டாக்டர் பிரசாந்த வைஜ்யநாத் ஆகியோர் உடனடியாக செயல்பட்டு இந்த சிகிச்சையை 2 மணி நேரத்தில் வெற்றிகரமாக செய்துமுடித்தனர். நோயாளிக்கு அடுத்த நாளே வெண்டிலேட்டர் அகற்றப்பட்டது, நான்காவது நாள் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்தப் புதுமையான மற்றும் சிக்கலான சிகிச்சையை வெற்றிகராமக செய்துமுடித்த கேஎம்சிஹெச் இருதய நோய் மருத்துவத் துறை மருத்துவ நிபுணர்களுக்கு கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.

நோயாளிகளின் விலைமதிப்பற்ற உயிர்காத்திட கேஎம்சிஹெச் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்றும் இதுபோன்ற புதுமையான மற்றும் சிக்கலான சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்வதில் கேஎம்சிஹெச் மருத்துவமனை முன்னோடியாகத் திகழ்கிறது என்றும் குறிப்பிட்டார்.