நேரு கல்வி குழுமம் சார்பில் பேராசிரியர் முத்துசாமிக்கு பாராட்டு விழா

கோவை நேரு கல்வி குழுமம் சார்பில் இக்கல்வி குழுமத்தில் கடந்த 17 ஆண்டுகளாக பேராசிரியராக பணியாற்றி பணி நிறைவு செய்யும் பேராசிரியர் முத்துசாமி அவர்களுக்கு பிரியாவிடையளிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு கோவை நேரு கல்வி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியும் செயலாளருமான கிருஷ்ணகுமார் தலைமை வகித்து பேசியதாவது, பேராசிரியர் முத்துசாமி அவர்கள் நமது நேரு கல்வி குழுமத்தில் கடந்த 17 ஆண்டுகளாக மிக சிறப்பாக பணியாற்றி பல மாணவ மாணவர்களை பல பெரிய நிறுவனங்களில் பணி புரியவும், தொழில் முனைவோர்களாகவும் உருவாக்கியதில் மிக முக்கிய பங்குவகித்துள்ளார். இவர் நமது கல்லூரி நிறுவனர் காலம்சென்ற பி.கே.தாஸ் அவர்களின் நிர்வாக காலத்தில் நமது கல்லூரியில் சேர்ந்து இன்று வரை மிக சிறப்பாக தனது கல்வி பணியை தொடர்ந்து செய்து வருகின்றார்.

இவரிடம் பயின்ற மாணவர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமைபடுகின்றேன். இவர் தனது 53 வருட கல்வி பணியில் 20 வருடம் கோவை அரசு கலை கல்லூரியிலும், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டுகளும், நேரு கல்வி குழுமத்தில் 17 ஆண்டுகளும் வி.எல்.பி. ஜானகியம்மாள் கல்வி நிறுவனத்தில் 7 ஆண்டுகளும் பணியாற்றியுள்ளார். மேலும் பாரதியார் பல்கலைக்கழகத்தில் 2 வருடம் பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் பணியாற்றிய 53 வருடங்களில் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஆசிரியரும் நினைவு கூறத்தக்க நாள் இது. எளிமையும் பணிவும் மிக்க இவரைப் போன்ற ஒரு கல்வியாளரை நாங்கள் பெற்றது எங்களுக்கு கிடைத்த வரமாகும். இவர் ஒரு ரோல்மாடலாகக் கருதப்படவேண்டிய கல்வியாளர். இது விடைபெறுதல் நிகழ்வு அல்ல. பெருமையின் தொடர்ச்சிக்கான நிகழ்ச்சியாகும் இது. இவ்வாறு அவர் பேசினார்.

நேரு விமானவியல் கல்லூரியின் டீன் பாலாஜி பேசியதாவது, 53 ஆண்டுகள் கல்விப் பணியில் இருந்து, ஓய்வு பெற்ற பின்னும் 25 ஆண்டுகள் கல்வி பணியில் தொடர்ந்து இருந்திருக்கிறார். இவரது மாணவர்கள் சர்வதேச அளவில் சாதனையாளர்களாக உள்ளார்கள். இனி குடும்பத்துடன் ஓய்வு வாழ்க்கையை மகிழ்ச்சியாகக்  நீண்டகாலம் வாழ வாழ்த்துகிறோம். என்று பேசினார்.

சிறப்பு விருந்தினராக கோவையில் புகழ்பெற்ற நிறுவனமான மில்டெக்ஸ் மற்றும் ஸ்பேரோ சைக்கிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் பேராசிரியர் முத்துசாமி அவர்களின் முன்னாள் மாணவருமான மணிகண்டன் பேசியதாவது, பேராசிரியர் முத்துசாமி அவர்கள் ஒரு போதும் தனது கேபின் கதவை மூடிவைத்ததே இல்லை. எந்த நேரமும் யாருமே அவரைத் தொடர்பு கொள்ளாலாம். ஆசிரியர்கள் தான் என்றுமே எவருக்குமே வழிகாட்டிகள். ஆசிரியர்கள் வெறும் போதிப்பவர்கள் மட்டுமல்ல. நம்மை நம் திறன்களுக்கு என்னேரமும் தொடர்புறுத்திக் கொண்டிருப்பவர்கள். இவ்வாறு அவர் பேசினார்.

கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் முதல்வர் நிர்மலா பங்கேற்றர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை நேரு விமானவியல் கல்லூரியின் டீன் பாலாஜி, நேரு கல்வி குழுமத்தின் மக்கள் தொடர்பு இயக்குனர் முரளிதரன் மற்றும் பேராசிரியர் செய்து இருந்தனர். விழாவில் நேரு கல்வி குழுமங்களின் பேராசிரியர்கள், மாணவ மாணவர்கள் பேராசிரியர் முத்துசாமி முன்னாள் மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.