வளர்ச்சிக்கான தொலைநோக்கு பட்ஜெட் – இந்திய தொழில் வர்த்தக சபை வரவேற்பு

இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை  செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார். இரண்டாவது முறையாக காகிதமில்லா முறையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன

இந்நிலையில், இந்திய தொழில் வர்த்தக சபை கோவை, இந்த பட்ஜெட்டை வரவேற்றிருப்பதுடன், வளர்ச்சிக்கான தொலைநோக்கு கொண்ட பட்ஜெட்டாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த பத்திரிகை செய்தியில் இந்திய தொழில் வர்த்தக சபை கூறியிருப்பது, வங்கிகள் கோவிட் காலத்தில் அளித்த கடனுதவி திட்டத்தை ( ECLGS) மார்ச் 2023 வரை நீடித்தது, தொழிற்சாலைகளுக்கான இரும்பு இறக்குமதி வரியை குறைப்பது சம்பந்தமான அறிவிப்பு, மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு பொருட்கள் விற்பனை செய்தால் அதில் 75 சதவீத பணம் 10 நாட்களுக்குள் கொடுக்கப்படும் ஆகிய அறிவிப்புகளை இந்திய தொழில் வர்த்தக சபை கோவை வரவேற்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய அரசு நகர்ப்புற கட்டுமானத்திற்கு அதிக அளவில் நிதி வழங்குவதற்காக அறிவித்திருப்பது கோவைக்கு பயனளிக்க வேண்டும் என்று விரும்புவதாகவும், அரசு அறிவித்து இருக்கின்ற ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டத்தில் கோவைக்கு மெட்ரோ ரயில் மற்றும் சாலை வசதிகள் மேம்படுத்தப்படும் என்று விரும்புவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராணுவ தளவாட உற்பத்தி நம் நாட்டிலேயே மேலும்  ஊக்குவிக்கப்படும் என்ற அறிவிப்பு கோவைக்கு பயனளிக்கும் என்பது உறுதி என்றும், வரும் காலங்களில் மின்னணு பயன்பாடு சம்பந்தமான பல்வேறு அறிவிப்புகள் மக்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்றும் அடிக்கோடிட்டு கூறப்பட்டுள்ளது.

ஆயிரத்துக்கு உண்டான இறக்குமதி வரி குறைப்பு நகை தயாரிப்பு தொழிலில் முக்கிய அங்கம் வகிக்கும் கோவைக்கு பயனுள்ளதாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மாநில அரசுகள்  ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை மூலதன செலவினங்களுக்காக வட்டியில்லா கடனாக பெறலாம் என்ற அறிவிப்பு கோவை போன்ற தொழிற்சாலைகள் மிகுந்த நகரங்களுக்கு பெரிய அளவில் ஊக்குவிப்பாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.