அரிவாள் மூக்கன் பறவயை மீட்டு மறுவாழ்வு மையத்தில் சேர்த்த ஆர்வலர்

கோவையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அரிவாள் மூக்கன் பறவையை மீட்ட பறவைகள் நல ஆர்வலர் ஒருவர் அதனை சிகிச்சைக்காக மறுவாழ்வு மையத்தில் சேர்த்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

அரிவாள் போன்று நீண்ட மற்றும் வலைந்த அலகையும், வெள்ளை நிறத்தில் உடலையும் கொண்ட நீர்ப்பறவையே அரிவாள் மூக்கன் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் தமிழ் நாட்டுப்பகுதியைச் சார்ந்த பறவையான இது இந்திய துணைக் கண்டப்பகுதி, தென் மேற்கு ஆசியப் பகுதி, வடக்கு இந்தியா, வங்காளதேசம், நேபாளம், இலங்கை, மேலும் ஜப்பான் போன்ற கீழ்திசை நாடுகளில் பரவியுள்ளது. பெரிய மரக்கிளைகளின் மேல் கூடுகட்டி 2 முதல் 4 முட்டைகள் வரை இடும் தன்மையுடையது இப்பறவை.

இந்த இனத்தை சேர்ந்த பறவை ஒன்று கோவை அரசு மருத்துவமனையில் அடிபட்டு கிடப்பதாக கோவையை சேர்ந்த பறவைகள் நல ஆர்வலர் விவேக் என்பவருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற விவேக், எறும்புகள் சூழ்ந்த நிலையில் இருந்த அரிவாள் மூக்கன் பறவையை மீட்டு, கோவை வனத்துறை அலுவலகத்தில் இயங்கி வரும் அனிமல் ரெஸ்க்யூயர்ஸ் பறவைகள் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு பறவைக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது. ஆர்வலர் விவேக்கிற்கு வனத்துறையினர் பாராட்டுகளை தெரிவித்தனர்.