நீதிக்கான போராட்டத்தில் உடன் நின்றவர்களுக்கு நன்றி – வானதி எம்.எல்.ஏ

மாணவி லாவண்யாவின் தற்கொலை வழக்கை சி.பி.ஐ க்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, நீதிக்கான போராட்டத்தில் உடன் நின்ற அனைவருக்கும் நன்றி என தனது ட்விட்டர் பக்கத்தில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கோவை பா.ஜ.க அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது அவர் கூறியதாவது: சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை, மாணவி லாவண்யா மரணத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்கும் வகையில் இந்த வழக்கை சிறந்த முறையில் கையாண்ட வழக்கறிஞர்கள், உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

தன்னை மதம் மாற்ற முயற்சி செய்யப்பட்டதாக மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார். இத்தகைய சுழலில் தற்கொலை வழக்கை விசாரிக்கும் போது உண்மையான விசாரணை நடத்த வேண்டும் என்பது சட்டத்தின் மாண்பு. ஆனால், எந்த விசாரணையும் இல்லாமல் காவல்துறை மற்றும் அமைச்சர்கள் மாணவி மரணத்திற்கும் மதமாற்றத்திற்கும் சம்பந்தம் இல்லை என சான்றிதழ் கொடுக்கிறார்கள் என்று கூறினார்.

மாணவர்கள் தற்கொலை செய்தால் வீட்டிற்கு செல்லும் முதல்வர் இந்த தற்கொலை வழக்கில் மாணவி வீட்டுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்றும், முறையான விசாரணை நடத்தவும் உத்தரவிடவில்லை என்று கூறிய அவர், இந்த வழக்கின் மூலம் மக்கள் நம்பிக்கையை முதலமைச்சர் இழந்துள்ளார் என குற்றம் சாட்டியுள்ளார்.

கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யக்கூடாது என்பது தங்கள் கோரிக்கை என்றும், கட்டாய மத மாற்ற தடை சட்டம் வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

மேலும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுவதை நாங்கள் கடைப்பிடிப்போம். கோவையில் அனைத்து வார்டுகளிலும் போட்டியிட நாங்கள் தயாராக உள்ளோம் என அவர் கூறினார்.