5 மாநில தேர்தல் மாற்றம் வருமா தேசிய அரசியலில்?

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் வரும் வாரத்தில் தேர்தல் பலகட்டங்களாக நடந்து மார்ச் 10 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. உத்தரப்பிரதேசத்தைப் பொறுத்தவரை பாஜக இப்போது அங்கு ஆளும் கட்சியாக உள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக ஆளும் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்ததாக வரலாறு இல்லை. ஆனால், அந்த வரலாற்றை மாற்றி மீண்டும் உ.பி. யில் ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்று பாஜக துடிக்கிறது.

உத்தரப்பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகள் இருப்பதால் அதன் முடிவுகளே தேசிய அரசியலில் போக்கை மாற்றும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். மோடி அரசு 2014, 2019 மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை பெற்றதற்கு உத்தரப்பிரதேசத்தில் கிடைத்த அதிக மக்களவைத் தொகுதிகள் தான் காரணம். உத்தரப்பிரதேசத்தில் மோடிக்கு இருக்கும் செல்வாக்கு, முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு இல்லை என்பதே உண்மை. இதன் விளைவே சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், யோகி ஆதித்யநாத்துக்கு போட்டியைக் கொடுக்கிறார் என்ற தோற்றம் உருவாகியுள்ளது.

பகுஜன்சமாஜ் கட்சி பெரிய அளவில் போட்டியைக் கொடுக்கவில்லை என்பதையே தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுவரை கருத்துக் கணிப்புகளை எல்லாம் மீறி மாயாவதி தனது வாக்கு வங்கியை நிரூபித்திருக்கிறார் என்பதுதான் உண்மை. பிரியங்கா காந்தி தலைமையிலான காங்கிரஸ் எப்படியாவது கணிசமான எம்.எல்.ஏ.க்களை பிடித்துவிட வேண்டும் என்ற முயற்சியில் தீவிர களப்பணியாற்றி வருகிறது. பெண்களுக்கு அதிக எம்.எல்.ஏ.க்கள் சீட் வழங்கி புதிய வியூகம் அமைத்து பிரியங்கா காந்தியும் அரசியல் செய்து வருகிறார். ஆனால், சமூக அமைப்புகளின் பலமோ, கட்சிக் கட்டமைப்போ பலம் இழந்து காணப்படும் காங்கிரசில் எந்த அளவுக்கு வாக்குகளைப் பெற முடியும் என்பது கேள்விக்குறி தான்.

காங்கிரஸ், பகுஜன்சமாஜ் கட்சிகள் வலுவிழந்து இருப்பதால், இதுவரை மும்முனை போட்டியே உருவாகும் உத்தரப்பிரதேசத்தில் இம்முறை இருமுனை போட்டி உருவாகுமோ என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதில் 2019 மக்களவைத் தேர்தலில் மோடிக்கு விழுந்த வாக்குகளை இம்முறை யோகி ஆதித்யநாத் தக்கவைப்பாரா என்பதை பொறுத்து தான் யார் அரியணை ஏறப்போகிறார் என்பதை முடிவு செய்யப் போகிறது.

இப்போதும் பந்தயத்தில் பாஜக முன்னிலையில் இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் ஜாதி அரசியல் தான் தேர்தல் முடிவில் முக்கியப் பங்காற்றி வருகின்றன. தாக்கூர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் யோகி ஆதித்யநாத் என்பதால் அது தாக்கூர்களின் ஆட்சி நடப்பதாக பிற சமூக மக்களின் மத்தியில் ஆழமாக பதிந்துவிட்டது. குறிப்பாக பாஜகவைத் தொடர்ந்து ஆதரித்து வரும் உயர் ஜாதியினருக்கு அதிருப்தி இருப்பது உண்மைதான். ஆனால், யோகி ஆதித்யநாத்துக்காக பாஜகவை கைவிட்டு வேறு கட்சிக்கு வாக்களித்தால் தங்களுக்கு எதிர்நிலையில் இருக்கும் அகிலேஷ் யாதவ் எளிதாக வெற்றி பெற்றுவிடக் கூடும் என்ற அச்சமும் அவர்கள் மனதில் உள்ளது.

மேலும், அவர்கள் ஏற்கெனவே தொடர்ந்து வாக்களித்து வந்த காங்கிரஸ் கட்சியும், 10 ஆண்டுகளுக்கு முன்பு வாக்களித்து அரியணையில் ஏற்றிய பகுஜன் சமாஜ் கட்சியும் களத்தில் போட்டியில் இல்லை என்பதால் அவர்களுக்கு வாக்களித்துப் பயனில்லை என்பது உயர்ஜாதி வாக்காளர்களுக்கு நன்கு புரியும். எனவே, 17 சதவீத உயர்ஜாதி வாக்குகளை மீண்டும் பாஜக தக்கவைக்கப் போவது உறுதி.

அதேநேரத்தில் பாஜகவை கடந்த முறை ஆதரித்த கோரி, குர்மி (பிற்பட்டோர்), ஜாட் சமுதாய வாக்குகள் மீண்டும் அப்படியே பாஜகவுக்கு விழுமா என்பதில் தான் சந்தேகம் உள்ளது. இந்த வாக்குகளை எந்த அளவுக்கு பாஜக தக்கவைக்கிறதோ அதைப் பொறுத்து பாஜகவின் வெற்றி தோல்வி அமையும். ஜாட் சமுதாய வாக்குகளை கவருவதற்காக மேற்கு உத்தரப்பிரதேசத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். ஜாட் சமூக வாக்குகளே 103 பேரவைத் தொகுதிகளில் வெற்றித் தோல்வியை முடிவு செய்யும் என்பதால் இந்த வாக்குகளை பாஜகவும், சமாஜ்வாடியும் குறிவைத்து அரசியல் நகர்வுகளை செய்து வருகின்றனர். அதேபோல, அகிலேஷ் யாதவைப் பொறுத்தவரை எப்போதுமே யாதவ சமுதாயத்துக்கு எதிராக இருக்கும் பிற்பட்ட சமூக வாக்குகளை ஒருங்கிணைத்து, அரவணைத்து வெற்றிபெற வேண்டும் என்பதற்காக இந்த முறை தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார். அது எந்த அளவுக்கு அவருக்கு கைகூடும் என்பது தேர்தல் முடிவில் தெரியவரும். பாஜக இழக்கும் வாக்குகள் பகுஜன் சமாஜ் கட்சிக்கு விழுந்து மும்முனை போட்டி உருவானால் பாஜகவுக்கு சாதகமாகிவிடும். அதேநேரத்தில் பாஜக இழக்கும் வாக்குகளை சமாஜ்வாடி கட்சி பெற்றுவிட்டால் இருமுனை போட்டி உருவாகி அது பாஜகவுக்கு பாதகமாகிவிடும். பாஜக இழக்கப் போகும் வாக்குகள் யாரை நோக்கி நகரப் போகிறது என்பது தேர்தல் நெருங்கும்போது முழுமையாக தெரியவரும்.

பஞ்சாப்: காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிரோன் மணி அகாலிதள், கேப்டன் அமிர்தசிங் – பாஜக கூட்டணி என நான்கு முனை போட்டி என்ற கருத்து இருந்தாலும், உண்மையில் காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே மட்டுமே போட்டி உள்ளது. தற்போது உள்ள முதல்வர் சரண்ஜித் சன்னி, முன்னாள் தலைவர் சித்து ஆகியோர் இடையிலான அதிகார போட்டியால் காங்கிரஸ் கட்சிக்கு சற்று பின்னடைவு இருக்கும் என்றும், இதில் ஆம் ஆத்மி கட்சி சற்று முன்னேறக்கூடும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

அங்கு 38 சதவீதம் தலித் வாக்குகள் இருப்பதால் அச்சமுதாயத்தை சேர்ந்த சன்னியை முதல்வர் வேட்பாளராக காங்கிரஸ் களம் இறக்கியுள்ளது. அதேபோல, கடந்தமுறை எதிர்க்கட்சியாக உருவெடுத்த ஆம் ஆத்மி இந்தமுறை எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற கணக்கில் பல்வேறு அதிரடி வியூகங்களை வகுத்து தீவிர பிரசாரத்தில் உள்ளது. இங்கு 30 சதவீதம் உள்ள ஜாட் சமூக வாக்குகளில் பெரும்பான்மையை யார் பெறப் போகிறார்களோ அவர்களே வெற்றிக்கனியை பறிக்க முடியும் என்ற சூழல் உள்ளது.

அதேநேரத்தில் ஜாட் சீக்கிய வாக்குகளை அடிப்படை வாக்குகளாக வைத்திருக்கும் சிரோண்மணி அகாலிதள் கணிசமான வாக்குகளை பெற்றுவிட்டால் அது காங்கிரஸ் கட்சிக்கும் சாதகமாகி விடும். தலித் முதல்வர் வேட்பாளரை காங்கிரஸ் களம் இறக்கியிருப்பதால் பெரும்பான்மை தலித் வாக்குகளை காங்கிரஸ் பெறும்போது அக்கட்சி முன்னிலை பெற வாய்ப்பு உருவாகிவிடும். தேர்தல் களம் இன்னும் சூடுபிடிக்கும்போது தான் ஜாட் சமூக வாக்குகள் யாரை நோக்கி நகரும் என்பது தெரியவரும்.

உத்தரகாண்ட்: இங்கு காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி உருவாகியுள்ளது. அங்கு மூன்று முறை முதல்வர்களை மாற்றிய ஆளும் கட்சியான பாஜகவுக்கு பின்னடைவாக உள்ளது. காங்கிரஸ் கட்சி முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத்தை முன்னிறுத்தி அரசியல் செய்து வருகிறது.

இதில் பாஜகவுக்கு காங்கிரஸ் கடும் போட்டியை கொடுக்கக்கூடும் எனத் தெரிகிறது. இது சிறு மாநிலம் என்பதால் தேர்தல் நெருங்கும் போதே யாருக்கு வாய்ப்பு என்பதை கணிக்க இயலும்.

கோவா: ஆளும் கட்சியான பாஜகவே இப்போதும் முன்னிலையில் உள்ளது. மேலும், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே 2 வது இடத்துக்கு கடும் போட்டி உள்ளது.

மேலும், திரிணாமூல் காங்கிரஸ், மகாராஷ்டவாதி, கோவிந்தவாதி கட்சியும் கூட்டணியாக களத்தில் இறங்கியுள்ளது. இந்தக் கூட்டணியும் காங்கிரசுக்கு விழும் வாக்குகளை நஷ்டப்படுத்தக் கூடும். எதிர்ப்பு வாக்குகள் சிதறுவதால் பாஜக முன்னிலை பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

மணிப்பூர்: பாஜகவை தவிர மாநில கட்சிகளுக்கும் இங்கு செல்வாக்கு உள்ளது. பாஜகவுடன் கூட்டணியில் இருந்த என்.பி.பி. கட்சி தனியாக போட்டியிடுவதால் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்குமா என்பது கேள்விக்குறி தான்.

இந்த ஐந்து மாநில தேர்தல் முடிவில் அடுத்த 2024 மக்களவைத் தேர்தலுக்கான போக்கை தீர்மானிக்கக் கூடும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

யார் கை ஓங்கும்?

இது குறித்து அரசியல் விமர்சகர் ரிஷி கூறும்போது, நடைபெறும் இந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. காரணம் 80 பாராளுமன்ற தொகுதிகள் இருப்பதால் சிறிய இந்தியா எனவும் இம்மாநிலம் அழைக்கப்படுகிறது. யோகி ஆதித்யநாத் தலைமைக்கு இங்கு எதிர்ப்பு இருக்கிறது என்பது உண்மையே. ஆனால் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கு 200 தொகுதிகள் மட்டுமே கட்டமைப்பு இருக்கிறது என்பதும் உண்மை. இப்படிப்பட்ட சூழலில் அமித்ஷா எவ்வாறு களமாடி பாஜகவை வெற்றி பெறச் செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

பஞ்சாபில் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும், சரண்ஜித் சிங் சன்னிக்கும் இடையிலான போட்டி காங்கிரசை பலவீனப்படுத்தி வருகிறது. இந்த ஐந்து மாநில தேர்தல் முடிவு என்பது தேசிய அரசியலில் யார் கை ஓங்கி இருக்கிறது என்பதைக் காட்டும்.