சைக்கிள் எனும் அற்புத வாகனம்

நமது நாடு மிக முன்னேற்றம் அடைந்து வருகிறது. பெரும்பாலும் நகரமயமாகி வருகிறது. பல துறைகளிலும் முன்னேறி இருக்கிறது. குறிப்பாக நாடெங்கும் போக்குவரத்து வசதிகள் பெருகி, சாலைகள் குறுக்கும் நெடுக்கும் உருவாகி இந்தியா முழுவதும் மக்கள் பயணிக்கின்றனர். சாலைகளில் எங்கு பார்த்தாலும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களின் அணிவகுப்பைக் காணமுடிகிறது. வங்கிகளும், தனியாரும் போட்டி போட்டுக் கொண்டு கடன் வசதி அளிப்பதால், தற்போதைய நிலையில் குறைந்தது இரு சக்கர வாகனம் கூட இல்லாதவர்களைக் காண்பது அரிது.

இந்த நவீன போக்குவரத்து போட்டி மற்றும் போராட்டத்தில் காணாமல் போன ஒரு வாகனமும் இருக்கிறது. அதுதான் சைக்கிள் எனும் அற்புத வாகனம். மாட்டு வண்டிக்கு பிறகு மனித குலத்திற்கு அதிகம் பயன்படும் சூழலைக் கெடுக்காத, செலவு குறைந்த ஒரு வாகனம் என்றால் அது சைக்கிள்தான். ஒரு காலத்தில் சாலைகளில் ஹீரோவாக வலம் வந்த சைக்கிள் இன்று காணாமல் மறைந்து வருகிறது.

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரும் சிறிது கூட உடல் உழைப்பு இல்லாமல் பயணிக்க விரும்புகின்றனர். குறைந்தது பைக் போன்ற வாகனமாவது தேவைப்படுகிறது. கடன் வாங்கியாவது வண்டியை வாங்கி, உழைத்து சம்பாதித்த பணத்தில் பெட்ரோல் போட்டு வண்டியை ஓட்டுவது என்பது தற்போது சாதாரணமான ஒன்றாகிவிட்டது. இதனால் நமக்கு என்ன என்று இதனை சாதாரணமாக கடந்து போய்விட முடியாது. ஏனென்றால் இதில் தனிநபர் உடல்நலம் தொடங்கி நாட்டின் பொருளாதாரம் வரை இந்த சைக்கிளின் பெடலில் அடங்கி இருக்கிறது. போக்குவரத்து வசதிக்காக கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்கள் மிகப் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதற்கு ஏராளமான அன்னியச் செலாவணி தேவைப்படுகிறது. ஏதோ உயிர்காக்கும் மருந்து, எல்லை காக்கும் விமானம், உயர் தொழில் நுட்பம் என்றால் அன்னியச் செலாவணி கணக்குப் போட்டுப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் குறுக்கும் நெடுக்குமாக வெறுமனே வாகனங்களை ஓட்டுவதற்கும், நம்முடைய பெருமையை காட்டுவதற்கும், இருக்கின்ற உடல்நலத்தையும் இழப்பதற்கும் என்றால் அதற்காக இவ்வளவு அன்னியச் செலாவணியை செலவிட வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. இன்னொருபுறம் நடப்பதற்கும், சைக்கிள் ஓட்டுவதற்கும் பெட்ரோலும் தேவையில்லை. அன்னியச் செலாவணியும் தேவையில்லை. உடல்நலனுக்கும் மிகவும் நல்லது.

கடந்த 30 ஆண்டுகளில் நாம் சைக்கிள் ஓட்ட மறந்த பிறகுதான் நாட்டில் சர்க்கரை நோய் தொடங்கி பல நோய்கள் அதிகரித்துள்ளன. சுகாதாரத்திற்கும் உடல் நலனுக்கும் மட்டுமே அரசுக்கும் மக்களுக்கும் பல கோடிக்கணக்கான ரூபாய் பணம் செலவாகிறது.

இந்த நிலையை மாற்ற மக்களும் அரசும் முன்வர வேண்டும். அதுதான் வீட்டுக்கும் நல்லது நாட்டுக்கும் நல்லது. வரும் காலங்களில் பெட்ரோல் தீர்ந்து போகும் என்ற அச்சத்தில் மின்சார வாகனத்திற்கு மாறத் துடிக்கின்றோம். அந்த வகையில் குறைந்த தூரம் செல்வதற்கும் உடல் நலனைக் காப்பதற்கும் சைக்கிளை விட்டால் வேறு சிறந்த வாகனம் கிடையாது.

இதற்கான நடவடிக்கைகளில் அரசும் மக்களும் இணைந்து ஈடுபட வேண்டும். அதற்கான மன மாற்றத்தையும், கட்டமைப்பு வசதிகளையும் உருவாக்க வேண்டும். இதைத்தவிர எதிர்காலத்திற்கு வேறு வழியில்லை. இன்றைய காலகட்டத்தில் உள்ளூர் போக்குவரத்திற்கான அற்புதமான வாகனம் என்றால் அது சைக்கிளைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.