தென்னை விவசாயிகளைக் காக்க ரேஷனில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும்

– வானதி எம்.எல்.ஏ கோரிக்கை

தென்னை விவசாயிகளைக் காப்பாற்ற ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசின் பங்காக ஒரு கிலோ கொப்பரைக்கு ரூ. 15 அடிப்படை விலை வழங்க வேண்டும் என்றும் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

தமிழகத்தில் கோவை, திருப்பூர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையின் அருகாமையில் உள்ள பகுதிகளில் தென்னை சாகுபடி, பிரதான விவசாயமாக உள்ளது. இப்பகுதியில், தென்னை சார்ந்த பொருட்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அதிகளவில் நடைபெறுகிறது.

ஆனால்,  தேங்காய், கொப்பரைக்கு நிலையான, நியாயமான விலை கிடைக்காததால் விவசாயிகள் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.  இடைத்தரகர்களும், வியாபாரிகளும் தங்களுக்குள் ‘சிண்டிகேட்’ அமைத்து தேங்காய், கொப்பரை விலையை தீர்மானிப்பதால், விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.

இப்பிரச்சினைக்கு தீர்வு காண கொப்பரைக்கு அடிப்படை ஆதார விலையை அதிகரிக்க வேண்டும் என்று தென்னை விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதனை ஏற்று, மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலையாக, ஒரு கிலோ எண்ணெய் கொப்பரைக்கு ரூ.105.90, ஒரு கிலோ பால் கொப்பரைக்கு ரூ.110 என்று நிர்ணயம் செய்துள்ளது.

தென்னை சாகுபடிக்கான செலவு அதிகரித்துள்ளதால் தமிழக அரசு தனது பங்காக, ஒரு கிலோ கொப்பரைக்கு குறைந்தது ரூ. 15 அடிப்படை ஆதார விலையாக வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்கனவே, வெள்ளை பூச்சிகள் கேரள வாடல் நோய், சிலந்திகள் தாக்கம் என்று பல்வேறு பிரச்னைகளால் பராமரிப்பு செலவு கணிசமாக உயர்ந்து, தேங்காய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ஆதார விலையுடன் தமிழக அரசு தன் பங்காக, ரூ. 15 சேர்த்து ரூ. 120, ரூ. 125 வழங்கினால் விவசாயிகள் பலன் பெறுவார்கள். எனவே, ஒரு கிலோ கொப்பரைக்கு தமிழக அரசு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ. 15 வழங்க வேண்டும்.

தமிழக அரசு ரேஷன் கடைகளில் மிக குறைந்த விலையில் பாமாயில் வழங்கி வருகிறது. மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயிலுக்கு தமிழக அரசு பெரும் தொகையை மானியமாக வழங்குகிறது.

ரேஷன் கடைகளில் பாமாயிலுக்குப் பதிலாக, தேங்காய் எண்ணெய் வழங்கினால், அதற்காக ஒதுக்கப்படும் மானியம், தமிழகத்தில் உள்ள தென்னை விவசாயிகளுக்கு சென்று சேரும். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், திமுக பொருளாளராக இருந்தபோது, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியவர் என்பதை இந்த நேரத்தில் நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்குவதே, தென்னை விவசாயிகளின் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வாக அமையும். எனவே முதலமைச்சர் ஸ்டாலின் இப்பிரச்சனையில் தலையிட்டு, உடனடியாக ஒரு கிலோ கொப்பரைக்கு குறைந்த பட்ச ஆதார விலையாக ரூ.15 வழங்கவும், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னை விவசாயிகளுக்கு புதிதாக கொப்பரை அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதனையும் தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்  எனத் தெரிவித்துள்ளார்.

Source: Press Release