தமிழக ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்

குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து அனைத்துக் கட்சிகள் இயக்கங்கள் சார்பில் கோவையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குடியரசு தினவிழாவையொட்டி டெல்லியில் நடைபெறும் அணிவகுப்பில் பங்கேற்க இருந்த தமிழக அரசின் ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த ஊர்தியில் வ.உ.சி, வேலு நாச்சியார் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. தேசிய அளவில் பார்க்கும் பொழுது பல மக்களுக்கு அவர்களை யார் என தெரியாது என்பதால் அனுமதி மறுக்கப்பட்டதாக அணிவகுப்பு குழுவிடம் இருந்து கருத்து தெரிவிக்கப்பட்டதாகவும், பெரியார், கருணாநிதி புகைப்படங்கள் இடம்பெற்றதால் நிராகரக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. மத்திய அரசின் தரப்பிலிருந்து இதற்கான விளக்கமும் தரப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பினர் பொதுமக்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதில் கலந்துகொண்ட 20க்கும் மேற்பட்டோர் பாரதியார், வ.உ.சிதம்பரனார், சுபாஷ் சந்திரபோஸ், வேலு நாச்சியார், நாராயண குரு ஆகியோரின் புகைப்படங்களையும், கண்டனங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

இதில் சமூக நீதிக் கட்சி, விடுதலை சிறுத்தைகள், திராவிடர் தமிழர் கட்சி உட்பட பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்கள் பங்கேற்றனர்.