திராவிட மாடல்; மாற்றத்தை ஏற்படுத்துமா?

சரியான திட்டமிடல் என்பது பாதி பணி சிறப்பாக நடைபெறுவதற்கு சமம் என்று சொல்வார்கள். அந்த வகையில் சமீபத்தில் வளர்ச்சியை நோக்கிய ஒரு நிகழ்வு தமிழகத்தில் நடைபெற்று உள்ளது. மாநில திட்டக்குழு ஆய்வு கூட்டம் நடைபெற்று முடிந்தது. அதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு ஆய்வு செய்தார். துணைத் தலைவரான பேராசிரியர் ஜெயரஞ்சன் திட்டக்குழுவின் செயல்பாடுகள், புதிய கொள்கைகள், புத்தாக்க திட்டங்கள், இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட துறைவாரியான ஆய்வுகள், அந்த ஆய்வுகள் செயலாக மாறிட ஆலோசனைகள் பற்றி விளக்கினார்.

எடுத்தோம், கவிழ்த்தோம் என்று திட்டங்களை தொடங்குவதும், கைவிடுவதும் எப்பொழுதும் மக்களாட்சியில் நல்லதல்ல. இது போல ஒரு ஆலோசனைக் கூட்டம் நடப்பதும், அதற்கு ஆய்வு நடப்பதும் பாராட்டுக்குரியது. இதனால் மக்கள் வரிப்பணம், நேரம், அரசின் நேரம் எல்லாம் மீதம் ஆகிறது.

இந்த மாநிலத் திட்டக் குழுவை ஒரு கை காட்டியாக, கலங்கரை விளக்கமாக ஒப்பிட்டு கூறிய தமிழக முதல்வர் ஸ்டாலின் மேலும் கூடுதல் ஆலோசனைகள், செயல்பாடுகள் குறித்த தனது எதிர்பார்ப்புகளை விளக்கினார். மேலும் இது தொடர்பாக திட்டக் குழுவுக்கு தோன்றும் எண்ணங்களை செயல்பாடுகளாக மாற்றும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள துறை அதிகாரிகளிடமும், வல்லுநர்களுடனும் ஆலோசனை  செய்து அதாவது சுருக்கமாகச் சொன்னால் A முதல் Z வரையிலான ஒரு செயல்திட்டத்தை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

எவ்வித பாசாங்கும் இன்றி, முழுமையான முன்னேற்றத்தை நாம் இன்னும் அடையவில்லை என்பதை நேர்மையாக ஒப்புக் கொண்டு அத்தகைய முன்னேற்றத்தை அடைய தேவையான திட்டங்கள் குறித்து சிந்திக்குமாறு அவர் கேட்டுக்கொண்டது பாராட்டுக்குரியது.

மனிதவள மேம்பாடு, வாழ்க்கைத்தரம், மனித ஆயுள்,  கல்வி கற்றல், குழந்தை வளர்ப்பு, வறுமை ஒழிப்பு, மக்களின் நல வாழ்வு, மனித உரிமை, சமூக நீதி, விளிம்புநிலை மக்கள் மேம்பாடு என அனைத்து தரப்புகளும் மேம்பட வேண்டும். அதற்கான வழிமுறைகளை வகுத்து தருமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

எல்லாவற்றுக்கும் மேலாக மாநில முன்னேற்றத்திற்காக அவர் வலியுறுத்திய இரண்டு முக்கிய அம்சங்கள் மிகவும் பாராட்டுக்குரியவை. முதலாவது அனைத்து மாவட்டங்களுக்கும் ஆன ஒரு முழுமையான வேலைத்திட்டம். அதாவது தொழில் வளர்ச்சியில் மாவட்டத்துக்கு மாவட்டம் வேற்றுமை உள்ளது, கல்வி வளர்ச்சியிலும் மாறுபாடுகள் உள்ளன, சில மாவட்டங்களில் வறுமை குறைவாக உள்ளது, சில மாவட்டங்களில்  வறுமை அதிகமாக உள்ளது. இந்த மாறுபாடுகளையும் வேறுபாடுகளையும் அகற்ற வேண்டும். அதற்கான திட்டத்தை கேட்டு அவர் வலியுறுத்தினார்.

தமிழக அரசின் நிதி நிலைமை அனைவரும் அறிந்ததே. அதற்காக அரசின் செலவுகளை குறைக்கவும், வருமானத்தை அதிகரிக்க வழிவகைகள் கண்டறியப்பட வேண்டும் என்றும், அதை உருவாக்குவதற்கு திட்டக்குழு உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ஒரு திட்டத்தை உருவாக்குவதற்கும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான கால இடைவெளி குறைக்கப்பட வேண்டும். அனாவசிய செலவுகளை குறைக்கவும் ஆலோசனை தேவை. முக்கியமான நிதி ஆதாரங்களான வரிவசூல், பத்திரப்பதிவு, ஆயத்தீர்வை போக இன்னும் பல புதிய வழிமுறைகளை கண்டறிய வேண்டும். சுற்றுச்சூழல், சிறு குறு தொழில்கள், கைவினைப் பொருட்கள், கைத்தறி போன்ற துறைகளில் கூடுதல் வருமானம் ஈட்டும் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

தொழில்கள் உருவாக்கப்படும் போது அவை நிதி உருவாக்குபவையாகவும், வேலைவாய்ப்புகளை அளிப்பதாகவும் அமைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். எல்லாவற்றுக்கும் மேலாக இது கொண்டு வரும் வளர்ச்சிதான், வளர்ச்சிக்கான திராவிட மாடல் என்றும் கூறியிருக்கிறார். அதாவது பொருளாதாரம், கல்வி, சமூகம், சிந்தனை, செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒருசேர வளர வேண்டும். அந்த வளர்ச்சி தான் திராவிட மாடல்  என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

வெறும் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல், அரசாங்க எந்திரத்தின் கேப்டனாக மட்டுமல்லாமல் அடுத்த தலைமுறைக்கான தொலைநோக்கு திட்டங்களை கேட்டு வாங்கி செயல்படுத்தக் கூடிய ஒரு தலைவராக ஸ்டாலின் பரிணமித்து இருக்கிறார் என்று இதன் மூலமாக தெரிந்து கொள்ள முடிகிறது.

காலத்துக்கேற்ற புத்தாக்க திட்டங்களை திட்டக்குழு வகுக்கவும், அவற்றை  மாநில அரசு பெற்று சிறந்த முறையில் பயனுற செயல்படுத்தவும் தி கோவை மெயிலின் வாழ்த்துகள்!