திருநங்கையாக இருப்பது தவறா?

கேள்வி: “நான் ஒரு திருநங்கை. பெற்றவர்களாலேயே நிராகரிக்கப் பட்டேன். சமூகத்தால் ஒதுக்கப்பட்ட இனத்தில் ஓர் அங்கமாகி, வேதனையுடன் வாழ்கிறேன். கடவுள் என்னை ஏன் இப்படிப் படைத்தார்?”

சத்குரு: பெண்ணின் கருப்பை, மனித உடல்களைத் தயாரிக்கும் அற்புதமான, அதிசயமான தொழிற்சாலை!

பரவலாக நிலவிவரும் கருத்து போல, ஓரிடத்தில் தெய்வம் உட்கார்ந்துகொண்டு ஒவ்வொரு உயிராகப் படைத்து வெளியே அனுப்பிக் கொண்டு இருப்பதில்லை. ஒவ்வொரு உயிரிலும் இருக்கும் அடிப்படைச் சக்தியான உயிர்த்தன்மையே, தத்தமது உடல் தயாரிப்பு வேலையைக் கவனித்துக் கொள்கிறது. இது புரிந்து கொள்ளக் கடினமான, மிகச் சிக்கலான தொழிற்சாலை!

எந்தத் தொழிற் சாலையிலும் குறையுள்ள ஒருசில தயாரிப்புகள் நிகழ்வது உண்டு. கருப்பைத் தொழிற்சாலையிலும் சிலசமயம் தவறுகள் நிகழ்வதுண்டு. எத்தனையோ உயிர்கள், பார்வைக்கோளாறு, கேட்கும் திறன் இன்மை, வளர்ச்சியுறாத மூளை என நம்மிலிருந்து வித்தியாசப்பட்டு இருப்பது நாம் அறியாததல்ல.

ஒற்றைக் கையுடன் ஜனிக்கும் குழந்தை, தலைகள் ஒட்டிப் பிறக்கும் இரட்டைக் குழந்தைகள் போன்ற தீவிரத் தவறுகள் படைப்பில் நிகழ்ந்தால், உடனே அதைப் பெரிதுபடுத்துகிறோம்.

உங்கள் நிலையும் இதுபோன்ற ஒன்றுதான். இதை குறைபாடு என்று பார்க்காமல், மாறுபாடு என்று பார்க்கும் பக்குவம் இங்கே வரவில்லை.

உங்களைப் போன்ற திருநங்கைகளுக்கு மட்டும்தான் வேதனையான நிலை என்பதில்லை; நம்மிலிருந்து மாறுபட்ட தோற்றத்துடன் எது இருந்தாலும், அதைத் தாழ்த்திப் பார்ப்பது நம் பழக்கமாகிவிட்டது. சரும நிறம் மாறினாலே சமூகம் சமமாகப் பார்க்கத் தயாராக இல்லையே!

பல நூறு ஆண்டுகளாக மாறுபட்ட இனத்தினரைத் தாழ்த்தி, சித்ரவதைக்கு உள்ளாக்கி, அடிமைகளாக நடத்துவது இந்தப் பூமியில் நடந்தேறி இருக்கிறது. நாகரிகம் வளர்ந்துவிட்டதாகப் பறைசாற்றிக் கொள்ளும் இன்றைய தினத்திலும், வேறுபாடு காரணமாக நிகழும் கொடுமைகள் உலகெங்கும் அரங்கேறிக் கொண்டிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.

மூன்று தலைகளுடன் கடவுள் இருப்பதாகச் சொன்னால், மண்டியிட்டு வழிபடத் தயாராக இருப்பவர்கள், இரண்டு தலைகளுடன் மனித உயிர் வந்தால், அதை மேம்பட்ட தோற்றமாகப் பார்க்கத் தயாராக இல்லை. கல்லெறிந்து காயப்படுத்தவே முனைகிறார்கள்.

உடல் தோற்றம் என்பது ஒருவித வெளிப்பாடுதான். உள்ளிருக்கும் உயிர்த்தன்மையில் எந்த மாற்றமும் இல்லை. தங்களின் உயிர்த்தன்மையை உணர்ந்து கொள்ளாதவர்கள்தான் குறைபாடு உடையவர்கள். இதைப் புரிந்து கொண்ட பக்குவத்துடன் சமூகம் இயங்கினாலே போதும். எல்லாம் திருந்திவிடும்.

கேள்வி: நான் என்ன பாவம் செய்தேன்? எனக்கு மட்டும் ஏன் இந்தத் தண்டனை?

சத்குரு: உங்களுக்கு நேராமல் இது உங்கள் சகோதரனுக்கோ, பக்கத்து வீட்டுக்காரருக்கோ நேர்ந்திருந்தால் மகிழ்ச்சியாக இருப்பீர்களா? வாழ்க்கையை அந்தக் கோணத்தில் பார்ப்பது தவறு.

வேறொருவருடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இங்கு யார்தான் குறைபாடு இல்லாதவர்? ஓணானைப் போல விழிகளை உருட்டிப் பின்னால் இருப்பதைக் கவனிக்க முடியாதவர்களை, பார்வையில் குறையுள்ளவர்கள் என்று முத்திரை குத்தலாமா? எறும்பைப் போல தலைகீழாக நடக்கத் தெரியாதவர்களுக்குக் கால்கள் ஊனம் என்று தீர்ப்பு எழுதலாமா?

சங்கரன்பிள்ளை ஒரு நேர்முகத் தேர்வுக்குப் போயிருந்தார்.

“உன் பிறந்தநாளைக் குறிப்பிடவில்லையே” என்று அங்கே கேட்டார்கள்.

“செப்டம்பர் 10” என்றார் சங்கரன் பிள்ளை.

“எந்த வருடம்?”

“அட, ஒவ்வொரு வருடமும்தான்!” என்றார் சங்கரன் பிள்ளை.

இப்படிப்பட்டவர்கள் இருக்கும் உலகத்தில், ‘ஜன்ஸ்டீனைப்’ போல சிந்திக்கத் தெரியாதவர்கள், மூளையில் குறைபாடு உள்ளவர்கள் என்று அறிவிக்கலாமா?

இங்கே அனைவரும் ஒற்றைக் காலுடன் பிறந்து இருந்தால் எந்த வருத்தமும் இல்லாமல் சந்தோஷமாக நொண்டியடித்துக் கொண்டு இருப்போம். வேறு ஒருவருக்கு இரண்டு கால்கள் இருப்பதுதான் நம் வேதனைக்கு அடிப்படை.

உங்களுக்கு நேர்ந்தது ஓர் இயந்திரக் கோளாறுதான். இது தாவரங்களில் நேர்ந்திருக்கிறது. மிருக இனத்தில் நேர்ந்திருக்கிறது. யாருக்கு வேண்டுமானாலும் இது நேரலாம். இதைப் பாவம் என்றோ, சாபம் என்றோ, தண்டனை என்றோ பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

பல நூறு ஆண்டுகளாக மாறுபட்ட இனத்தினரைத் தாழ்த்தி, சித்ரவதைக்கு உள்ளாக்கி, அடிமைகளாக நடத்துவது பூமியில் நடந்தேறி இருக்கிறது. நாகரிகம் வளர்ந்துவிட்டதாகப் பறைசாற்றிக் கொள்ளும் இன்றைய தினத்திலும், வேறுபாடு காரணமாக நிகழும் கொடுமைகள் உலகெங்கும் அரங்கேறிக் கொண்டிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.

கேள்வி: என் மன வேதனையில் இருந்து மீள என்னதான் வழி?

சத்குரு: உடல் வேறுபட்டு இருப்பதால் மட்டுமே உங்களைத் தாழ்த்திக் கொள்ளத் தேவையில்லை. இங்கு எதற்கும் உத்திரவாதம் இல்லை. எல்லா உறுப்புகளும் மிகச் சரியாக அமைந்த ஒருவருக்கு நாளை காலையிலேயே பாரிச வாயு தாக்கலாம். உறுப்புகள் இயங்காமல் போகலாம். யார் கண்டது?

நான் ஆண், நான் பெண் என்று ‘உடலளவிலே’ மட்டும் அடையாளம் கொள்வதால்தான், இது இவ்வளவு தூரம் வலி ஏற்படுத்துகிறது.

உண்மையான ஆன்மீகம் இனப்பிரிவைப் பெரிதாக மதிப்பதில்லை.

ஆண், பெண் என்பதில் மட்டும் கவனம் இருந்தால், உடலோடு அடையாளப்படுத்திக் கொள்ளும் ஆபத்து நேர்ந்துவிடும். உடலளவிலான அடையாளத்தைத் தாண்டி இயங்கும் உயிர்த்தன்மையை உணர்ந்து கொள்ளும் அனுபவம் நேராமலேயே போய்விடும்.

உலகில் பிறந்த ஒவ்வொருவரும் ஏதோவொரு தனித்தன்மையுடன் விளங்க வேண்டும் என்று வாழ்நாள் முழுவதும் போராடுகிறார்கள். உங்களுக்குத் தானாகவே ஒரு தனித்தன்மை கிடைத்திருப்பதால் இந்நிலையை ஆரோக்கியமான மனநிலையுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்.

மற்றபடி, உங்களுக்கும், எனக்கும் அடிப்படை உயிர்த்தன்மையில் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். வீண் வேதனையை விட்டெறியுங்கள். உங்கள் உள் சூழ்நிலையை ஆனந்தமாக வைத்துக் கொள்வதில் கவனமாக இருங்கள். அமுதம் நிரம்பியிருக்கும் பாத்திரம் நீங்கள். பாத்திரம் கொஞ்சம் நசுங்கியிருப்பதால், உள்ளே இருப்பது விஷம் என்று ஆகிவிடுமா என்ன?