கனிமொழி; காலத்தின் கட்டளையா?

50 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக தலைவராக இருந்த மு.கருணாநிதி தீவிர அரசியலில் செயல்படாத நிலையில் இருந்தபோதே, திராவிட இயக்க மூத்தத் தலைவரும், திமுகவின் 2-ஆவது சக்தியாக இருந்த க.அன்பழகனின் ஆசியுடன் செயல் தலைவரானார் மு.க.ஸ்டாலின். கருணாநிதி மறைவுக்குப்பின் திமுக தலைவரான ஸ்டாலின், இப்போது ஆட்சியையும் பிடித்துவிட்டார்.

இந்நிலையில், திமுகவில் ஸ்டாலினுக்குப் பின், திமுகவை வழிநடத்தப் போவது யார் என்ற விவாதம் அரசியல் அரங்கில் எழத் தொடங்கியுள்ளது.

கனிமொழியின் கள வழி:

முன்பு, கருணாநிதி தீவிர அரசியலில் இருந்தபோதே ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டாலும், கனிமொழிக்கு உரிய இடம் கட்சியில் வழங்கப்பட்டே வந்தது. அதிமுகவில் ஜெயலலிதா, தேமுதிகவில் பிரேமலதா விஜயகாந்த் என இரு பெரும் பெண் அரசியல்வாதிகள் 2006 காலகட்டத்தில் கோலோச்சி கொண்டிருந்த நிலையில் திமுகவிலும் ஒரு பெண் அரசியல் முகம் தேவை என்ற அடிப்படையில் கனிமொழியை தீவிர அரசியலில் அறிமுகப்படுத்தினார் கருணாநிதி.

2007 ஆம் ஆண்டிலேயே மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் கொடுத்து அழகுபார்த்தார் கருணாநிதி. பின்னர் கட்சியின் தில்லி முகமாகவே கனிமொழியை மாற்றினார். மாநில அரசியலுக்கு ஸ்டாலின், தில்லி அரசியலுக்கு கனிமொழி என்ற அடிப்படையில் கட்சியை கொண்டுச் சென்றார் கருணாநிதி. இதற்கிடையே 2011 இல் திமுக ஆட்சியை இழந்து 23 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருந்தபோது 2013 இல் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டி ஏற்பட்டது. அதுவே சுவாரசியமான போட்டியாக உருவெடுத்தது.

போட்டி என்னவெனில், ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்வு செய்ய 34 வாக்குகள் தேவை (அதாவது 34 எம்.எல்.ஏ. க்கள் ஆதரவு தேவை). அப்போது திமுக வசம் 23 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருந்தனர். தேமுதிக வசம் 29 எம்.எல்.ஏ.க்கள் இருந்தாலும், அதில் 7 பேர் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களாக அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருந்தனர். மொத்தம் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு 7 பேர் போட்டியிட்டனர். இதில் போதுமான எண்ணிக்கை பலம் அடிப்படையில் அதிமுகவில் 4 பேர் 36 வாக்குகளைப் பெற்று எளிதாக தேர்வாகினர். 5-ஆவது இடத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதிமுக கொடுத்ததில் 34 வாக்குகளுடன் து.ராஜா வெற்றிபெற்றார். 6-ஆவதாக கனிமொழிக்கும், தருமபுரி மாவட்டச் செயலர் இளங்கோவனுக்கும் போட்டி உருவானது.

தேமுதிக வசம் 22 வாக்குகளும், திமுக வசம் 23 வாக்குகளும் இருந்தன. தேர்தல்ஆணைய விதிகளின்படி கடைசி இடத்துக்கு போட்டிப் போடுபவர்களில் யாருக்கு அதிக வாக்குகள் கிடைக்கிறதோ அந்த வேட்பாளரே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்.

அந்த நிலையில், தேமுதிகவை சேர்ந்த சந்திரகுமார், இளங்கோவனுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும்படி சத்தியமூர்த்தி பவனுக்கு நேரடியாக சென்று ஆதரவு கேட்டார். அப்போது திமுக கூட்டணியில் காங்கிரஸும் இல்லை. அப்படிப்பட்ட சூழலில் கனிமொழிக்காக அரசியல் திறனாய்வாளர் ரவீந்திரன் துரைசாமி குழுவினர் நுட்பமாக காய்களை நகர்த்தினர். சோனியா காந்தியிடம் பேசி கனிமொழியின் வெற்றிக்கு காங்கிரஸ் வாக்குகளை கொண்டு வந்தனர்.

அதேபோல புதிய தமிழகத்திடம் இருந்த 2 வாக்குகள், மனிதநேய மக்கள் கட்சியிடம் இருந்த 2 வாக்குகளையும் சாதூர்யமாக பேசி கனிமொழிக்கு ஆதரவாக திருப்பினர். அந்த ஒப்பந்த அடிப்படையில் 2014 மக்களவைத் தேர்தலில் தென்காசி தொகுதி புதிய தமிழகம் கிருஷ்ணசாமிக்கும், மயிலாடுதுறை தொகுதி மனிதநேய மக்கள் கட்சியின் ஹைதர் அலிக்கும் ஒதுக்குவதாக கூறி வாக்குகளைப் பெற்றனர்.

இதுபோக, தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனக் கூறியிருந்த பாமகவும், கடைசி நேரத்தில் முடிவை மாற்றக்கூடும் என்ற தோற்றத்தையும் உருவாக்கினர். ஒருவேளை கனிமொழி தோற்க வேண்டும் என எண்ணியிருந்தால் தேமுதிகவின் 7 அதிருப்தி வாக்குகளை பயன்படுத்தி கனிமொழிக்கு நெருக்கடி கொடுத்திருக்கக் கூடும். ஆனால், ஜெயலலிதாவைப் பொறுத்தவரை அவ்வாறு நினைக்கவில்லை என்பதை ரவீந்திரன் துரைசாமி அணியினர் கண்டுகொண்டனர். இதன் மூலம் மாநிலங்களவை உறுப்பினராக கனிமொழி வெற்றிபெற்றார். இதைத்தொடர்ந்து கட்சிக்குள் கனிமொழிக்கு ஆதரவு வளையம் அதிகரிக்கத் தொடங்கியது.

குறிப்பாக தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் கனிமொழிக்கு பெருங்கூட்டம் கூடியது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி பகுதிகளில் உள்ள பெரும்பான்மை சமூக மக்களின் ஆதரவைப் பெறும் வகையில் முத்துக்கருப்பன், விஜிலா சத்தியானந்த், சசிகலா புஸ்பா ஆகிய 3 பேருக்கு மாநிலங்களவை உறுப்பினராக ஜெயலலிதா வாய்ப்பு அளித்தார். இருந்தாலும் இந்த மூன்று மாவட்டங்களிலும் கனிமொழியும் தொடர்ந்து கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஆதரவாளர்களை திரட்டி வந்தார். இவ்வாறு இருக்கும்போது 2016 பேரவைத் தேர்தலில் திமுக, தேமுதிக கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் கனிமொழி இறங்கியும் அது கைகூடவில்லை. அதேபோல, திமுகவுக்கு சில சமூகங்களின் ஆதரவை திரட்டுவதற்கான திட்டங்களையும் கருணாநிதியிடம் தெரிவித்தார். இதை சரியாக நடைமுறைப்படுத்த முடியாத சூழலில் தான் 2016 பேரவைத் தேர்தலில் ஒரு சதவீத வாக்கு வித்தியாசத்தில் திமுக ஆட்சியை பிடிக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது.

இதன் பிறகு ஸ்டாலினுக்கு ஆதரவாகவே செயல்பட்டார் கனிமொழி. ஸ்டாலின் செயல் தலைவராக, தலைவராக, முதல்வராக, தொடர்ந்து தீவிரமாகவே களப்பணியாற்றினார். 2019 மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் வெற்றிபெற்றார். இதன்பிறகு சோனியா காந்தி, பிரதமர் மோடி ஆகியோருக்கு மிகவும் நெருக்கமான நபராக கனிமொழி மாறினார்.

கோடியில் ஒருவர்:

தமிழக அரசியல் அரங்கில் ‘மக்களின் தலைவன்’ என ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒருவர் தோன்றுவார். ஆனால் அந்த தலைமை பலமுறை ஆண்களிடமிருந்தே தான் உதிக்கிறது என்பதில் இருவேறு கருத்துகள் கிடையாது.

ஒவ்வொரு மாவட்டத்திற்குள்ளும் ஒரு பெண் அரசியல் பிரமுகர் தலைவராக உருவாகி வந்தாலும், ‘செல்வி.ஜெ.ஜெயலலிதா’ போன்ற ஒரு அரசியல் சக்தி, மாநில அளவிலான, ஏன் தேசிய அளவிலான தனிப்பெரும் தலைமை தோன்றுவது கோடியில் ஒருமுறை நடக்கும் நிகழ்வு தான்.

நிகழ்கால அரசியலில் மாநில அளவில் மக்களிடம் சென்று சேர்ந்துள்ள பெண் தலைவர்கள் யாரென்று கேட்டால் கண்டிப்பாக பாரதிய ஜனதா கட்சியின் வானதி சீனிவாசனை மேற்கோள் காட்டலாம். பெரிய அரசியல் பின்புலம் இல்லாமல், உழைப்பால் ஆற்றலால், விடாமுயற்சியால் உயர்ந்துள்ளார்.

தமிழகத்தில் பா.ஜ.க தன் ஆதிக்கத்தை பலப்படுத்த மிக உதவியாக இருந்தவர்களில் வானதியும் முக்கியமானவர், கவனிக்கப்படவேண்டியவரும் கூட. அதுபோல பெரும் அளவில், மாநில அளவில் மக்களால் அறியப்படும் பெண் அரசியல் தலைவர்கள் வேறு கட்சியில் உள்ளனரா என்று பார்க்கும்போது இல்லை என்பது தான் கசப்பான உண்மை.

பொதுவாகவே இந்தியாவில் இதற்கு முன் அரசியல் என்பது ஆண்களின் ஆதிக்கம் கொண்டதாக இருந்தாலும், தற்போது பெண்களின் பங்கீடு அதில் அதிகரித்து வருகிறது. அரசியல் மற்றும் சமுதாய இன்னல்கள் பற்றி விவாதிக்கும் தளம் எதுவாக இருந்தாலும் அவற்றில் பெண்களின் குரல் ஓங்கியொலித்து வரும் காலமாக மாறிவருகிறது.

அதற்கு ஒரு உதாரணம் தான் வரவிருக்கும் உத்தர பிரதேச தேர்தலில் காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள பெண்களுக்கான 40% பிரதிநிதித்துவமும், பிரேத்தியேக வாக்குறுதிகளும்.

வடக்கு வரை பார்க்க கூட வேண்டாம், இங்கு 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் நான், நீ என்று போட்டிபோட்டு கொண்டு அனைத்து கட்சிகளும் ‘குடும்பத் தலைவிகளுக்கான ஊதியத்தொகை திட்டம்’, ‘பெண்கள் பேருந்தில் செல்ல இலவசம்’ என பெண்களை கவரும் வண்ணம் அறிவிப்புகளை வெளியிட்டனரே இவை போதும்.

சூழல் இவ்வாறு இருக்க, தமிழகத்தில் பெண்களுக்கான அரசியல் அசைவுகள் சூடு பிடிக்க துவங்கும்போதே இங்குள்ள கட்சிகள் அதை சாணக்கியத்தனத்துடன் அணுகினால் அது அவர்களுக்கு வலுவை நிச்சயம் சேர்க்கும்.

கலைஞர் கருணாநிதியின் மகள் என்பதை விட ஒரு பெண்ணாக தமிழிலும், அரசியலிலும், மேடையிலும், மக்களிடமும் மாநில அளவில் பரிச்சயமான ஆளுமை கனிமொழி என்றால் அது மிகையாகாது.

பிறக் கட்சிகளை விட திமுகவில் கனிமொழி போன்ற ஒரு பெண் தலைவர் இருப்பது, அந்த கட்சிக்கு அரிய பொக்கிஷம் போன்றது. திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்கு தற்போது எப்படி முக்கியத்துவம் வழங்கப்படுகிறதோ, அதேபோல கனிமொழிக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டால் எதிர்காலத்தில் திமுகவின் பலம் இன்னும் கூடுதல் வலுபெறும். அவருக்கு உரிய அரசியல் பிரதிநிதித்துவத்தை திமுக வழங்கி, எதிர்கால அரசியலில் முன்னிறுத்தும் பட்சத்தில், அது பெண்களுக்கான நல்ல முன்னுதாரணமாக அமையும்.

தோளுக்கு தோழாக:

ஜன.5-ஆம் தேதி நடந்த கனிமொழியின் பிறந்தநாளின் போது மாநிலம் முழுவதும் திமுக நிர்வாகிகள் தன்னெழுச்சியாக விளம்பரங்கள் கொடுத்துள்ளனர்.

கனிமொழியைப் பொறுத்தவரை திராவிட கொள்கை, பெண் தலைவர், கவிஞர் என பன்முகத் தன்மையுடன் இருப்பது, கட்சியில் தொடக்கக் காலத்தில் இருந்தே இருக்கும் கொள்கைப் பற்றாளர்களுக்கு கனிமொழி மீது நல்லெண்ணத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதேநேரத்தில் கட்சியில் அதிகாரத்தைப் பெற வேண்டுமெனில், உதயநிதியே தேவை என்ற நிலை உருவாகி இருப்பதால் அவரைச் சுற்றியே திமுக அரசியல் சுழல்கிறது.

எனவே, அதை மனதில் வைத்துக் கொண்டு கலைஞருக்கு எப்படி அன்பழகன் நண்பனாக உறுதுணையாக இருந்தாரோ அதேபோல உதயநிதிக்கு கனிமொழியும், கனிமொழிக்கு உதயநிதியும் பக்கபலமாக இருந்தால் அது திமுகவிற்கு அசைக்க முடியாத வலிமையை தரும்.

உதயமான உதயா:

அதுவரை பெருமளவில் திரையுலக நட்சத்திரமாக தோன்றி வந்த உதயநிதி, 2018 காவிரி மேலாண்மை வாரியத்தை செயல்படுத்தக்கோரி திமுக நடத்திய போராட்டத்தில் முதல் முறையாக களம் இறங்கி அரசியலில் நுழைந்தார்.

தொடர்ந்து 2019 மக்களவைத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் பிரசாரம் செய்தார். குறிப்பாக பிரதமர் மோடி, முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, பாமகவின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரை கடுமையாக விமர்சனம் செய்து தேர்தல் பிரசாரம் செய்தார்.

40 தொகுதிகளிலும் திமுக வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினின் கை ஓங்கியது. பின்னர் மாநில இளைஞர் அணி செயலர் பதவி உதயநிதியைத் தேடி வந்தது. தொடர்ந்து ஸ்டாலினுக்கு அடுத்து கனிமொழிக்கு நிகராக உதயநிதிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் 2021 பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. ஸ்டாலினும் முதல்வரானார். தனது தாத்தாவின் சேப்பாக்கம் – திருவில்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் சுமார் 69,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார்.

மு.க.ஸ்டாலின் முதல்வரான பிறகு உதயநிதியின் அரசியல் வாழ்க்கையில் நல்ல மாற்றம் ஏற்பட்டது. மூத்த அமைச்சர்கள் பலரும் உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று பேசி வந்தனர். சிலர் துணை முதல்வர் பதவியும் அவருக்கு வழங்க வேண்டும் என கூறி வந்தனர். இதற்கிடையே உதயநிதி தனக்கு அப்படிப்பட்ட ஆசை இல்லை என்பதை வெளிப்படையாகவே தெரிவித்தார். இருந்த போதிலும் தளபதிக்கு பின் உதயநிதி என்று கழகத்தினர் கூறி வருவதை காண முடிகிறது.