கொடிசியா வளாகத்தில் கொரோனா வார்டு அமைப்பது குறித்து ஆட்சியர் ஆய்வு

கோவையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடிசியா வளாகத்தில் சிறப்பு வார்டு அமைப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்தியா முழுவதும் ஓமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கத் துவங்கியுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடிசியா வளாகத்தில் மீண்டும் படுக்கைகள் அமைத்து வார்டு ஏற்பாடு செய்வது குறித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா நேரில் சென்று, ஆய்வு செய்து ஆலோசனை மேற்கொண்டனர்.

அதேபோன்று கோவை அரசு கலைக் கல்லூரி வளாகத்திலும் சிறப்பு வார்டு அமைப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் கொரோனா கட்டுப்பாட்டு மையத்திலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.