இந்தியாவில் சென்னை உட்பட 13 நகரங்களில் விரைவில் 5ஜி சேவை

5ஜி இணைய சேவை 2022ம் ஆண்டு இந்தியாவில் நடைமுறைக்கு வரும் எனவும், அதில் முதல்கட்டமாக 13 நகரங்களில் 5ஜி சேவை வழங்கப்படும் எனவும் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் செல்ஃபோன் பயனர்கள் தற்போது 4ஜி சேவையை தான் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கடுத்தபடியாக 5ஜி இணைய வசதி, தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டமாக உருவெடுத்திருக்கிறது. 5ஜி எனப்படும் ஐந்தாம் தலைமுறை இணைய சேவையானது 4ஜியை காட்டிலும் பல மடங்கு வேகம் கொண்டது. பதிவிறக்க மற்றும் பதிவேற்ற வேகமானது நொடிக்கு 10 ஜிகாபிட் என்ற அளவில் இருக்கும். மேலும், 5ஜி வசதி கொண்ட மொபைல்களில் மட்டுமே இச்சேவையை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்கட்டமைப்பு வசதிகளை கருத்தில் கொண்டு 13 இந்திய நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்படுகிறது. அதன்படி, சென்னை, பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா, அகமதாபாத், சண்டிகர், காந்திநகர், ஹைதராபாத், ஜாம் நகர், லக்னோ, குருகிராம், புனே மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 13 நகரங்களில் ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ ஆகிய நிறுவனங்கள் 5ஜி சோதனையை நடத்தி வருகின்றன. டிசம்பர் 31ம் தேதி இந்த சோதனை நிறைவு பெற இருக்கிறது. மேலும், வணிக ரீதியாக எந்த நிறுவனம் முதலில் 5ஜி சேவையை வழங்க உள்ளது என்பது தெரிவிக்கப்படவில்லை.