‘நம்ம ஊரு திருவிழா’ வை தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடத்த வேண்டும் – வானதி எம்.எல்.ஏ

சென்னையில் நடைபெறுவது போன்று ‘நம்ம ஊரு திருவிழா’வை தமிழகத்தின் முக்கிய மாநகரங்களில் நடத்த வேண்டும் எனவும் இதன் மூலம் கிராமியக் கலைஞர்களும், அவர்கள் குடும்பத்தினரும் பயன்பெறுவார்கள் எனவும் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன், தமிழ் வளர்ச்சி, தமிழ் கலாச்சாரம், தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 14, 15, 16 ஆகிய மூன்று நாட்களும் சென்னையில் ‘நம்ம ஊரு திருவிழா’ என்ற பெயரில் கலை விழா நடைபெறும் என்றும், தமிழகத்தின் பாரம்பரிய கலைகளின் சிறப்புகளை வெளிப்படுத்தும் விதமாக பிரம்மாண்டமாக இந்த கலை விழா நடைபெறும் என்றும் தமிழ் வளர்ச்சி, கலாச்சாரத் துறை அமைச்சரான தாங்கள் அறிவித்திருக்கிறீர்கள். இந்த அறிவிப்பை பாஜக சார்பில் மனமார வரவேற்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று தாக்கத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் கலைஞர்கள் அதுவும் நாட்டுப்புறக் கலைஞர்கள்தான். கோயில் திருவிழாக்கள் உள்ளிட்ட மக்கள் பெருந்திரளாக கூடும் விழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால் அவர்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டது. வேறு எந்த வருமானமும் இல்லாமல் அவர்கள் கூலி வேலை செய்ய வேண்டிய அவலத்திற்கு தள்ளப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமியக் கலைஞர்களை காப்பாற்றும் வகையிலும், அந்தந்த பகுதியின் நாட்டுப்புறக் கலைகளை காப்பாற்றும் வகையிலும் சென்னையில் நடைபெறுவது போன்று ‘நம்ம ஊரு திருவிழா’வை கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, தஞ்சாவூர் போன்ற தமிழகத்தின் முக்கிய மாநகரங்களில் நடத்த வேண்டும். இதன் மூலம் ஆயிரக்கணக்கான கிராமியக் கலைஞர்களும், பல்லாயிரக்கணக்கான அவர்களது குடும்பத்தினரும் பயன்பெறுவார்கள்.

எனவே இந்த ஆண்டு சென்னை தவிர்த்த மற்ற முக்கிய மாநகரங்களிலும் ‘நம்ம ஊரு திருவிழா’வை நடந்த வேண்டும். சென்னை தவிர மற்ற முக்கிய நகரங்களில் குறைந்தபட்சம் இரண்டு நாட்களாவது கலாச்சாரத் துறை சார்பில் ‘நம்ம ஊரு திருவிழா’வை நடத்த வேண்டும் என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.