அமெரிக்காவில் குழந்தைகளுக்கு அதிகரிக்கும் கொரோனா தொற்று

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் தொற்று இதுவரை 106 நாடுகளுக்கு பரவியுள்ளது. இதையடுத்து இந்தத் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் ஒமைக்ரான் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது அங்கு தினசரி கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 90 ஆயிரமாக உள்ளது. இதைத் தொடர்ந்து கொரோனா சோதனையில் பலருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகி வருகிறது.

மேலும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றால் பெரியவர்களை விட குழந்தைகள் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது அதிர்ச்சி அளிக்கும் தகவலாக உள்ளது. இதனால் அங்குள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே உள்ளது.

கடந்த டிசம்பர் 5-ந் தேதி முதல் தற்போது வரை 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் தொற்றால் பாதிக்கப்படுவது 4 மடங்காக அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் மட்டும் கொரோனா பாதிப்பால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 4 மடங்காக அதிகரித்துள்ளது எனவும் மேலும் முன்பை விட கூடுதலாக பெருமளவு அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

சுகாதாரத்துறை மாகாண வெளியிட்டு அறிவிப்பில், டிசம்பர் முதல் வாரம் தொடங்கி தற்போதுவரை பாதிக்கப்பட்ட 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் 5 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரிவித்திருக்கிறது.