சி.என்.ஐ ஐந்தாவது சாப்டர் கோயமுத்தூர் சன்ரைஸ் தொடக்க விழா

கட்டுமானத் துறையின் பல்வேறு நிலை தொழிலதிபர்களின் கூட்டமைப்பான சி.என்.ஐ யின் ஐந்தாவது சாப்டர் கோயமுத்தூர் சன்ரைஸ் தொடக்க விழா கோவையில் நடைபெற்றது.

கட்டுமான துறையில் உள்ள அனைத்து நிலை சார்ந்த தொழில் அதிபர்களும் பயன்பெறும் விதமாக நாட்டிலேயே முதன்முறையாக சி.என்.ஐ.எனப்படும் கட்டுமானம் தொடர்பான பரிந்துரை அமைப்பு செயல்பட்டு வருகிறது.

கட்டுமான துறையில் சாதிக்க விரும்பும் புதிய தொழில் முனைவோர்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை வழங்கும் விதமாக தொடங்கப்பட்டுள்ள இந்த அமைப்பில் புதிய உறுப்பினர்கள் அதிகமாக சேர்ந்து வரும் நிலையில், தமிழகம் முழுவதும் புதிய சாப்டர்கள் தொடங்கப்பட்டு வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக கோவை அளவில், சி.என்.ஐ.யின் ஐந்தாவது சாப்டராக கோயமுத்தூர் சன்ரைஸ் சாப்டர் தொடக்க விழா கோவை நஞ்சப்பா சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. சி.என்.ஐ.யின் நிறுவன தலைவர் உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இதில், கோவை மண்டல வழிகாட்டு நிர்வாகி லிங்கராஜ் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக மெட்டிஸ் ஸ்டரச்சர்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் அருண்குமார் கலந்து கொண்டு பேசினார். கோயமுத்தூர் சன்ரைஸ் புதிய தலைமை செயல் அதிகாரியாக ராஜேந்திரன், செயலாளர் கனக சபாபதி, துணை செயலாளர் மனோஜ் குமார், பொது தகவல் தலைவராக சுவாகர், பொருளாளராக விஜய்குமார், உறுப்பினர் மேம்பாட்டு தலைவராக உதயகுமார் ஆகியோர் தலைமை ஏற்று கொண்டனர்.

இதில் சென்னை, மதுரை, திருப்பூர், ஈரோடு, திருச்சி என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சி.என்.ஐ.சாப்டர் நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், கட்டுமான துறை சார்ந்த தொழில் அனுபவங்கள், பரிந்துரைகள் என அவரவர் தொடர்பான துறைகளைப் பகிர்ந்து கொண்டனர்.