சாகாவரம் பெற்ற சிரஞ்சீவி

சர்வ இடங்களிலும் வியாபித்துள்ள சர்வேஸ்வரனைப் போல உலகில் தற்போது எங்கெங்கு பார்த்தாலும் இந்த பிளாஸ்டிக் பை எனும் கேரிபேக் காணப்படுகிறது. நவீன வணிக கலாச்சாரத்தின் ஒரு அங்கமான இந்த பிளாஸ்டிக் கேரிபேக் ஏதாவது ஒரு பொருளை எ‌ளி‌தி‌ல் எடுத்துச் செல்ல பயன்படுகிறது. இந்த ஒரே ஒரு நன்மைக்காக நாம் அனுபவிக்கும் தீமைகள் ஏராளம்.

இந்த பிளாஸ்டிக் கேரி பேக்குகள், சாகாவரம் பெற்ற சிரஞ்சீவியைப் போல பல நூறு ஆண்டுகளுக்கு மக்காமல் இந்த பூமியில் வாழ்ந்து கொண்டே இருக்கும். இந்த பிளாஸ்டிக் வாழ்வதால் நமக்கு என்ன சிக்கல் என்றால், இவற்றால் பல வகையிலும் பல கொடுமைகளை மனித குலமும் மற்றவர்களும் அனுபவிக்கிறோம். அதில் வாயில்லா ஜீவன்கள் ஆன கால்நடைகள் கூட அடங்கும். மீதமாகும் உணவு பொருளை இந்த பிளாஸ்டிக் கேரி பேக்கில் போட்டு  கால்நடை தின்பதற்கு வைக்கும்  கர்ண மகா பிரபுக்கள் இங்கு ஏராளம். இது போக குப்பையில் மீதமாகும் உணவு, பழம் ஆகியவற்றை தேடி தின்னும்  கால்நடைகள் வயிற்றில் அடைப்பு ஏற்பட்டு சாவது அன்றாட செய்தியாகிவிட்டது.

தற்போது சென்னையில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில்  கூட  நீர் தேங்கி இருப்பதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் ஒரு காரணம் இந்த பிளாஸ்டிக் செய்யும் கைவரிசை என்றால் அது மிகையாகாது. சாக்கடை நீர் செல்லும் வழிகள் மற்றும் மழைநீர் பாதைகளில் கொத்துக்கொத்தாக மற்ற குப்பைகளுடன் இந்த பிளாஸ்டிக் பை சேர்த்து அடைத்துக் கொள்கிறது.

ஆயிரம் நல்லவர்களுக்கு இடையே சில சமூக விரோதிகள் போல இந்த பிளாஸ்டிக் பைகள் ஒரு சங்கிலியை போல மற்ற குப்பைகளை இணைத்து அடைத்துக் கொண்டு இருக்கின்றன. இரண்டு மூன்று நாட்களில் அடைப்பு சரி செய்யப்படுகிறது அல்லது தானாகவே நீரின் வேகத்தில் அகற்றப்படுகிறது. ஆனால் அதற்குள் இந்த நீர் தேங்கிய பகுதிகளில் மக்கள் படும் துயரம் சொல்லி மாளாது. அரசாங்கம்,   உள்ளாட்சி அமைப்புகள்,பணியாளர்கள் என்று அனைவரும் படாதபாடு படும் வகையில் செய்வதில் இந்த பிளாஸ்டிக் பைகளுக்கு மிகப் பெரிய பங்கு உண்டு.

அதுதான் அரசாங்கம் இவ்வளவு மைக்ரான் என்று விதிமுறைகளை வைத்திருக்கிறது, இதுபோன்ற பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்து இருக்கிறது என்றெல்லாம் அப்பாவித்தனமாக நம்மை நாமே நம்பிக்கொண்டு இருக்கக்கூடாது. எப்படி செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் விடுகின்ற நாம் டெங்கு கொசுவை ஒழிக்க முடியவில்லையோ, அதுபோல இந்த ஈஸி டூ கேரி பிளாஸ்டிக் பையை நம்மால் ஒழிக்க முடிய வில்லை என்பது தான் உண்மை.

பள்ளியின் சுவர்களிலும் ஆட்டோவின் பின்புறத்திலும் பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்று எழுதி பிரச்சாரம் செய்வதால் மட்டும் பிளாஸ்டிக் குப்பைகளை ஒழித்துவிட முடியாது. முள் மரத்தை வேருடன் களைவது போல இதன் தொழிற்சாலைகளில் தடுக்க வேண்டும்.  அதற்கு முன்பு அந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு மாற்று பொருட்கள் உற்பத்தி அல்லது மாற்றுத் தொழில் ஏற்பாடு செய்யவேண்டும். கண்டிப்பாக நம்மால் செய்ய முடியும்.

இந்த பிளாஸ்டிக் பைகளை பொருட்களை எடுத்துச் செல்ல உதவுவது என்ற ஒரே ஒரு நன்மைக்காக  பிளாஸ்டிக் குப்பைகளை உருவாக்குவதை  சகித்துக் கொள்வது எந்த வகையிலும் நியாயம் அல்ல.

குப்பை மலைகளை உருவாக்குவது,  அப்பாவி கால்நடைகள் பலியாவது,  கடலுக்குப் போய்ச் சேர்ந்தாலும் கூட அங்கு உள்ள கடல் வாழ் உயிரினங்களை கொல்வது,  பிளாஸ்டிக் குப்பைகளை எரிக்கும் பொழுது அதிலிருந்து வெளியில் வாயுக்களால் தோல் நோய் முதல் புற்றுநோய் வரை பல நோய்களை உருவாக்குவது என்று பல தீமைகளை செய்யும் இந்த பிளாஸ்டிக் பைகளை ஒழித்துக்கட்ட வேண்டும்.  இல்லை என்றால் ஒரு சிறு நெருப்புப் பொறி,  பெரிய காட்டை அழித்து விடுவது போல இந்த கேரிபேக் நம்மையும் பேக் செய்து விடும்.