பி.எஸ்.ஜி – ஐ டெக் கல்லூரியில் ஒருங்கிணைப்பு விழா

“கேள்வி கேட்கும் தன்மையே உலகின் அடிப்படை”

நீலாம்பூரில் அமைந்துள்ள பி.எஸ்.ஜி தொழில் நுட்பக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தொடக்க விழாவும், ஒருங்கிணைப்பு விழாவும் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பி.எஸ்.ஜி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கோபால கிருஷ்ணன் தலைமைத் தாங்கினார். சிறப்பு விருந்தினராக மா ஃபா மற்றும் சி.ஐ.இ.எல் குரூப்பின் (Ma Foi & CIEL Groups) தலைவர் பாண்டியராஜன் கலந்து கொண்டார்.

மேலும் இதில் கல்லூரி முதல்வர் சந்திரமோகன், செயலர் மோகன்ராம், டீன் சுப்புராஜ் (Research – Electrical Sciences), துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் 2020 – 21ம் கல்வி ஆண்டில் பயின்ற மாணவர்களில், சிறந்த மாணவர்களுக்கான விருதும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பி.எஸ்.ஜி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கோபால கிருஷ்ணன் பேசியதாவது: 2014ம் ஆண்டு தொடங்கப்பட்ட பி.எஸ்.ஜி – ஐ டெக் கல்லூரி ஒவ்வொரு ஆண்டும் ஒரு சாதனையைப் படைத்து வருகிறது. கல்வி ஒன்றே ஒருவரின் எதிர்காலத்தை மாற்றும் சக்தியாக உள்ளது என்பதைக் கருத்தில் கொண்டே பி.எஸ்.ஜி கல்வி நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டது எனப் பேசினார்.

இதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் கூறியதாவது: 2014ம் ஆண்டில் இருந்தே உலகம், தொழில்நுட்ப உலகமாக மாறி விட்டது. உருவாகி வரும் தொழில் நுட்ப முன்னேற்றங்கள் உலகில் பல மாற்றங்களை நிகழ்த்தியுள்ளன. பி.எஸ்.ஜி கல்வி நிறுவனங்கள் தொழில் முனைவோர்களை உருவாக்கி சிறந்த அடையாளங்களை ஏற்படுத்தி வருகிறது.

மேலும், முன்னணியில் உள்ள தொழில் முனைவோர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட சில நிகழ்வுகளை குறிப்பிட்டு பேசினார். நம் சிந்தையில் உதிக்கும் யோசனைகளே தொழில் முனைவோராவதற்கு அடிப்படையாக உள்ளது. பலதரப்பட்ட கருத்துக்களின் உலகமாக இருப்பதால் புதியவற்றை உருவாக்குவதற்க்கான நமது யோசனையே அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல உதவும். அதனால் நமது எண்ணங்கள் சிதையாமல் இருக்க வேண்டும்.

மனித சௌகரியத்தை ஒட்டியே பல முக்கிய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மனித சமூகத்திற்கு தேவையான கருவிகளைக் கண்டறிவதே பொறியியல் எனக் கூறினார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், கேள்வி கேட்கும் தன்மை தான் உலகில் உள்ள எல்லாவற்றிக்கும் அடிப்படை என்பதை மாணவர்கள்  உணரவேண்டும் என்றும் மாற்றத்திற்க்கான முதல் நிலை கேள்வி கேட்பதே, அதனை நினைவில் கொள்ளவேண்டும் என்று அறியுறுத்தினார்.

ஒவ்வொரு மனிதரின் அனுபவங்களும் வேறுபட்டது, உங்கள் அனுபவங்களை நீங்கள் மதிக்கும் போதுதான் உலகத்தின் மீதான உங்களது பார்வை மாறும். உலகத்தில் உள்ள பல விசயங்கள் ஒன்றோடென்று தொடர்புடையது. உலகத்தையே புரட்டிப் போடக்கூடிய தொழில்நுட்பத்தை உருவாக்குபவராக நீங்கள் ஒரு நாள் உருவாகலாம்.

கல்லூரி என்பது வெறும் படிப்பு சார்ந்த இடம் மட்டுமல்ல. திறன்களையும், பண்புகளையும் கற்றுத் தரக்கூடிய இடமாகவும் விளங்குகிறது. மேலும் படிக்கக் கூடிய கால கட்டத்தில் உறவு பாலங்களையும் உருவாக்கி தருகிறது. கல்லூரி காலத்தில் மாணவர்கள் எவ்வாறு தங்களைப் பண்படுத்திக் கொண்டு பண்புகளை வளர்த்துக் கொள்கிறார்களோ அதுவே அவர்கள் வாழ்நாள் முழுவதும் வெளிப்படும் எனக் கூறினார்.