தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

நீரா பானத்தை நீண்ட காலம் பாதுகாக்கும் தொழில்நுட்பத்தை வணிகமையமாக்குவதற்காக, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் சிறுவாணி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் (SFPC) லிமிடெட், இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக  துணைவேந்தர் நீ. குமார், முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி சார்பில் சிறுவாணி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் (SFPC) லிமிடெட், சார்பாக, தலைவர் மருதாச்சலமூர்த்தி ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வேளாண் வணிக மேம்பாட்டு இயக்குநர், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்ப மையம் ஆகியோர் உடன் இருந்தனர்.

நீரா என்பது தென்னையின் முதிர்ச்சியற்ற பூவிலிருந்து பெறப்பட்ட ஒரு சுவையான ஒளி ஊடுருவக்கூடிய வெள்ளை நிற சாறு ஆகும். குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் (ஜிஐ 35), தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளதால் இது ஒரு சுவையான ஆரோக்கிய பானம். நீரா ஒரு சுவையான பானம் என்றாலும், சாறு பிரித்தெடுத்த சில மணி நேரங்களுக்குள் சுற்றுப்புற வெப்பநிலையில் இயற்கையான நொதித்தலுக்கு உள்ளாக அதிக வாய்ப்புள்ளது. எனவே, ஆல்கஹால் மற்றும் அமிலகரத்தன்மையற்ற புளிக்காத வகையில் “நீரா” பானத்தை பதப்படுத்தும் தொழில்நுட்பம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்ப மையத்தால் உருவாக்கப்பட்டது.

இது நுகர்வோருக்கு நல்ல தரமான “நீரா” பானத்தை அதிக அளவில் வழங்குவதற்கும் விவசாயிகளுக்கு வருவாயை அதிகரிப்பதற்கும் வழிவகுக்கும். இந்த தொழில்நுட்பம் பிரத்தியேகமற்ற அடிப்படையில் வணிகமயமாக்கப்பட்டது. இதன் மூலம் மற்ற உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களும் இந்த தொழில்நுட்பத்தை வணிகமயமாக்கி பயன்பெறலாம்.