மாநகராட்சி பள்ளிக்காக புதிய செயலியை வடிவமைத்த ஆசிரியர்கள்

கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளி மாணவர்கள் ஆன்லைன் மூலமாக கல்வி பயின்று வருகின்றனர். எந்த நேரமும் மழலைச்செல்வங்களின் குரல் கேட்ட வகுப்பறைகள் தற்போது அமைதியே உருவாகி நிற்கின்றன.

இந்த காலகட்டத்தில் பல தனியார் பள்ளிகளே மாணவர்களுக்கு முறையாக கல்வி பயிற்றுவிக்க திக்குமுக்காடி வரும் சூழலில் கோவையில் உள்ள மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி பல்வேறு புதுவிதமான யுக்திகளைக் கையாண்டு மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவித்து வருகின்றனர்.

அதன்படி, கோவையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளிலேயே முதன் முறையாக மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க புதிய செயலி ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த செயலி மூலம் மாணவர்களின் செயல்பாடுகளை ஆசிரியர்களும், பெற்றோர்களும் முறையாகக் கண்காணித்து, அவர்களைத் திறம்பட செயல்பட வைக்க முடியும் என்ற நம்பிக்கை உதிர்த்துள்ளது.

இது குறித்து கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா பேசுகையில்: வீட்டுப்பாடம் முதல் வகுப்பறை பதிவேடு வரை அத்தனையும் அடங்கியிருக்கும் இந்த செயலியால் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்குமான வேலைப்பழு பாதிக்குமேல் குறைந்துவிடும் என இதன் வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளதாக கூறினார்.

பள்ளி மாணவரின் தந்தை ஒருவர் கூறுகையில்: பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு சிபாரிசு கடிதங்களுடன் பெற்றோர் அலைந்து வரும் சூழலில், மாநகராட்சி பள்ளிகள் வரலாற்றில் முதல் முறையாக அடுத்தடுத்த புது யுக்திகள் மூலம் மாணவர் நலனுக்காக பாடுபட்டு வரும் இந்த பள்ளியின் ஆசிரியர்களுக்கு பாராட்டுகள் என தெரிவித்தார்.