பெட்ரோல், பேட்டரி மூலம் இயங்கும் வாகனம்: ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மாணவர்கள் சாதனை

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் இயந்திரவியல் மற்றும் மின்னியல், மற்றும் தொடர்பியல் துறை சார்ந்த இறுதி ஆண்டு மற்றும் முன்னாள் மாணவர்கள் பேட்டரி மற்றும் பெட்ரோல் மூலமாக இயங்கக்கூடிய இருசக்கர வாகனத்தை தயாரிக்கும் முயற்சியில் வெற்றி கண்டு சாதனை படைத்துள்ளனர்.

இந்த இரு சக்கர வாகனத்தில் ஓட்டுநர் தனது விருப்பப்படி பேட்டரி மூலமாகவோ அல்லது பெட்ரோல் மூலமாகவோ வாகனத்தை இயக்கிக் கொள்ளலாம். ஒருமுறை சார்ஜ் செய்தால், பேட்டரி மூலம் சுமார் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில், 100 கிலோ மீட்டர் வரை செல்லக்கூடியது. மேலும் பேட்டரியில் இருந்து பெட்ரோலுக்கும், பெட்ரோலில் இருந்து பேட்டரிக்கும் எளிய வகையில் மாறும்படி இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த தொழில்நுட்பத்தை அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் “மெக்கட்ரான் மோட்டார்ஸ்” என்ற ஸ்டார்ட் ஆப் ஆக நிறுவ மாணவர்களும் ஆசிரியர்களும் விரும்பினர். இந்த மெக்கட்ரான் மோட்டார்ஸ் என்ற ஸ்டார்ட் அப் இன் தொடக்க விழாவும் ஹைபிரிட் ஸ்கூட்டர் உயர் தொழில்நுட்ப இருசக்கர வாகனம் அறிமுக விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு (Greenera Energy India Pvt Ltd) நிறுவனத்தைச் சார்ந்த வள்ளியப்பன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மேலும் கல்லூரி முதல்வர் பால்ராஜ் கண்டுபிடிப்புகளின் அவசியம் மற்றும் அதன் முக்கியத்துவம் ஆகியவற்றை எடுத்துரைத்து மாணவர்களை வாழ்த்தி பாராட்டினார்.

இறுதியாக மெக்கட்ரான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் வீரக்குமார் நன்றியுரை வழங்கினார். நிறுவனத்தைச் சார்ந்த தலைமை நிர்வாக அதிகாரி சேது மாதவன் நிறுவனத்தின் ஆரம்பம், நோக்கம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து விவரித்தார். இந்நிகழ்ச்சியில் இயந்திரவியல் துறை தலைவர் சொக்கலிங்கம், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை தலைவர் ஹேமா, நிறுவன இயக்குனர்கள் வருண், ஜெரிராஜ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களை பாராட்டினர்.