கீழடியின் பெருமையை பற்றி பாடம் நடத்தும் சீனா ஆசிரியை

கீழடி, அகரம், மணலூர், கொந்தைகை ஆகிய 4 இடங்களில் மத்திய மற்றும் மாநில தொல்லியல் துறை சார்பாக 6 அகழாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ளன.

இதுவரை 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை அனைத்தும் 2,600 வருடங்களுக்கு முற்பட்டது என கூறப்படுகிறது. தற்போது ஏழாம் கட்ட அகழாய்வு பணி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அதற்காக அகரத்தில் 8 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றது.

சுடு மண் பானைகள், உறைகிணறுகள், மதில் சுவர்கள், கல்தூண் போன்ற அமைப்புடைய கல், ஆபரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த நிலையில், தமிழ் நாகரீகத்தை விளக்கும் கீழடியின் பெருமை தற்போது சீனா வரை சென்றுள்ளது.

சீனாவின் யுனான் மின்சு பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை மாணவர்களுக்கு, கீழடி தொல்லியல்துறை ஆய்வுகள் பற்றி சொல்லிக்கொடுத்ததாக ஆசிரியை நிறைமதி கிக்கி ஜாங் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். கீழடியில் கிடைக்கப்பெற்ற பொருட்களின் படங்களைக் கொண்டு மாணவர்களுக்கு அவர் பாடம் நடத்தியுள்ளார். அப்போது கீழடி அகழாய்வின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.