வெற்றியெனும் தொடுவானத்தையும் தொடுவோம் வீரர்களாய்!

எந்த துறை சார்ந்த வெற்றியாக இருந்தாலும் அது ஒரு குறிப்பிட்ட நபரை அல்லது குழுவையே பெரும்பாலும் சேரும். ஆனால் ஒருவரின் வெற்றியை நாடே தன் வெற்றியாக நினைத்து பெருமையும், கர்வமும் கொள்வது விளையாட்டு போட்டிகளில் மட்டும் தான். அப்படி பெருமை கொள்வதற்கு பல விளையாட்டு வீரர்கள் நமக்கு அந்த வாய்ப்பினை அளித்துள்ளார்கள்.

பயிற்சியும், முயற்சியும் கொண்டு எத்தனை முறை ஒரே இடத்தில் விழுந்தாலும் மீண்டும் சளைக்காமல் வெற்றியின் கதவை பல முறை தட்டுபவர்கள் இவர்களே.  உடல், மனம் இவை இரண்டில் ஒன்று காயம் கண்டாலும் தாங்க முடியாத ஒன்றாக இருக்கும்போது இரண்டும் ஒரு சேர பலமுறை காயம் கண்டிருக்கும் இத்துறை சேர்ந்த பலருக்கு.  தோல்வி தரும் வலியோ, வெற்றி தரும் களிப்போ எதுவாக இருப்பினும் இதற்கடுத்து எந்த  நிலைக்குச் செல்ல வேண்டும் என்பதே உடனடி எண்ணமாக இருக்கும்.

ஹாக்கியில் சிறந்த வீரராகக் கருதப்பட்ட தயான் சந்த்தின் பிறந்த நாளில் (ஆகஸ்ட் 29) கொண்டாடப்படும் தேசிய விளையாட்டு தினத்தில் கோவையைச் சேர்ந்த சில கல்லூரியில், விளையாட்டு துறையில் சாதித்தும், சாதனை படைக்கத் துடிக்கும் மாணவ மாணவியர்களிடம் நாம் உரையாடிய போது அவர்கள் பகிர்ந்து கொண்ட கருத்துக்களைக் காண்போம்:

சூழலே குறிக்கோளுக்கான முன்னுதாரணம்!

அபிநயா  ரகுபதி, தமிழ்நாடு வேளாண் பல்கலை

இவரைப் போல ஆக வேண்டும் என பொதுவாக ஒரு குறிப்பிட்ட நபரை மட்டுமே முன்னுதாரணமாக வைத்து அதற்கான செயல்களைச் செய்வோம். ஆனால் பார்க்கக் கூடிய ஒவ்வொரு மனிதரிடமிருந்தும் அவர்களின் நல்ல குணத்தை எடுத்து அதைத் தான் அடைய நினைக்கும் குறிக்கோளுக்கு முன்னுதாரணமாக கொண்டிருக்கிறார் ரோலர் ஸ்கேட்டிங்கில் சர்வதேச அளவில்  நான்காவது இடம்பெற்றுள்ள அபிநயா ரகுபதி.

கோவை மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப், தமிழ்நாடு அளவில் தங்க பதக்கம், தேசிய அளவில் வெண்கலம், சர்வதேச அளவில் நடைபெற்ற ரோலர் ஸ்கேட்டிங்கில் இந்திய அணியின் சார்பாக பங்கேற்று  நான்காவது இடம் என பல வெற்றிகளை இவர் பெற்றுள்ளார்.

“நான் பயிற்சி எடுத்துக் கொள்வதற்காக அதிகாலையில் எழுந்து 4 மணி நேரம் பயிற்சியில் ஈடுபடுவேன்.  விளையாட்டையும் படிப்பையும் ஒரே நேரத்தில் கவனித்துக் கொள்வது கடினமாக இருக்கும். ஆனால் நான் விளையாட்டில் ஈடுபட என் குடும்பம், பள்ளி, கல்லூரி என என்னைச் சுற்றியுள்ளவர்கள் ஒத்துழைப்பும், ஆதரவும் அளித்தனர். குறிப்பாக, என் குடும்பத்தார் எனக்கு அளித்த பேராதரவினால் தான் என்னால் இந்த இடத்திற்கு வர முடிந்தது”.

விளையாட்டுக்கு அடுத்தபடியாக நான் அடைய நினைக்கும் என் லட்சியம் ஐபிஎஸ் ஆக வேண்டும் என்பதுதான். அதற்கும் என்னைச்  சார்ந்தவர்கள் எனக்கு ஆதரவு தருகிறார்கள்.

“சர்வேதச அளவிலான ரோலர் ஸ்கேட்டிங்கில் இப்பொழுது நான்  நான்காம் இடம் பெற்றுள்ளேன். இனி வரும் போட்டிகளில் முதலிடம் பெறவேண்டும்  என்பதே என் இலட்சியம்”.

வலிகளுக்கு பின் வெற்றியே!

ரம்யா, தமிழ்நாடு வேளாண் பல்கலை

கடின உழைப்பிற்கு பின் கிடைக்கும் வெற்றியினால் இதற்கு முன் ஏற்பட்ட வலிகள் இல்லாமல் போகும் என்பது வெற்றியாளர்களின் வார்த்தையாக உள்ளது. விளையாட்டின் ஆரம்பத்தில் தோல்விகள் ஏற்பட்டு மனம் சிறிது தளர்ந்தாலும் இன்னும் சிறிது முயற்சி எடுக்கலாம் என தோன்றும். இப்படி தன்னைத் தானே தயார்படுத்திக் கொண்டு தேசிய, மாநில அளவில் டென்னிகாய்ட்   (ஜிமீஸீஸீவீளீஷீவீt) என்று சொல்லப்படும் வளைய பந்து விளையாட்டில் பல வெற்றிகளை கண்டுள்ளார் ரம்யா.

“என் தந்தை உடற்பயிற்சி ஆசிரியர் என்பதால் எனக்கு விளையாட்டு மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது.  படிக்கும் நேரம் தவிர்த்து விளையாட்டில் ஈடுபடவும்  எனக்கு அதிக நேரமும் கிடைத்தது. அதனால் இந்த விளையாட்டைக் கற்று கொண்டேன்”.

முதலில் விளையாட வேண்டும் என்ற ஆசை மட்டும்  இருந்ததே தவிர உடலளவில் நான் அதற்கு தயாராகவில்லை.  அதிகாலை சீக்கிரம் எழுவது, உடற்பயிற்சிகள், ஆரோக்கிய உணவுகள் என முதலில் என்னை நான் தயார்படுத்திக் கொண்டேன்.  பின்  அதற்கான விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்தேன். “ஆரம்ப கால கட்டங்களில் போட்டியில் கலந்து கொண்ட உடனேயே தோற்று விடுவேன். இதனை விட்டு விடலாமா என்ற எண்ணம் கூட எனக்கு தோன்றியது. அதோடு பயிற்சியின் போது உடல்வலியும் ஏற்படும்.  ஆனாலும் முயற்சி செய்யலாம் என்றே எனக்கு தோன்றும்“

ஒவ்வொரு போட்டியிலும் நான் கலந்து கொண்ட பின் இன்னும் இதை விட பெரிய போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமே ஏற்படும்.

விளையாட்டில் ஈடுபடும் போது நம்மை ஒரு கட்டத்தில் இருந்து அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். பிறர் உதவியும் ஆதரவும் இல்லையென்றாலும் நமக்குள் ஏற்படும் தன்னம்பிக்கையே முன்னோக்கி அழைத்து சென்றுவிடும்.

எனக்கு நானே பலம்…

தினேஷ்,  கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி

விளையாட்டில் வெற்றி கண்ட பின் குதூகலமான கொண்டாட்டம் அல்லது தோல்வி ஏற்படும் சமயத்தில் உருவாகும் வலி என்பது இயல்பாகவே தோன்றுபவை தான். எதுவாக இருந்தாலும் தன்னைச் சுற்றியுள்ளவர்கள் தரும் ஊக்கத்தை விட, மனம் சோர்வடையும் போது மட்டுமல்லாமல் எல்லா நேரத்திலும் தனக்குத் தானே பெரிய பலமாகவும், ஊக்கமாகவும் இருந்து வருவதாக கூறுகிறார் தடகள விளையாட்டுகளில் ஒன்றான வட்டு எறிதலில் மாநில அளவில் தங்கம் வென்ற தினேஷ்.

“பள்ளியில்  படிக்கும் போது மற்ற மாணவர்களுடன் சேர்ந்து யார் அதிக தொலைவில் வட்டை  வீசுகிறோம் என பொழுதுபோக்காக விளையாட ஆரம்பித்தோம். இருந்தாலும் நாளுக்கு நாள் இந்த விளையாட்டின் மீது ஆர்வம் கூடியது. அந்த ஆர்வமே  இதனை முறையாகக் கற்றுக் கொள்ளவேண்டும் என தூண்டியது. கற்றுக்கொள்ள ஆரம்பித்து ஆறு வருடமாக இதற்கான பயிற்சியை எடுத்து வருகிறேன்”.

“எல்லா விளையாட்டு வீரர்களின் ஆசையாகவும், கனவாகவும் இருப்பது நாட்டிற்காக சர்வதேச அளவில் வெற்றி பெற்று பதக்கம் பெறவேண்டும் என்பதாகத் தான் இருக்கும். 2028 ல் நடைபெறும் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளத் தயாராகி வருகிறேன், அதில் என் கனவு நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது”.

வலியும் தடையும் சகஜமே!

கிருஷ்ணகுமார்,  கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி

“விளையாட்டைப் பொறுத்த வரை வலி மற்றும் தடைகள் போன்றவை இருப்பது சகஜமே. அவற்றையெல்லாம் தாண்டி வெற்றிபெறும்போது இதற்கு முன் நடந்த நிகழ்வுகள் எல்லாம் பெரிய வலியாக தெரியாது” என்கிறார் டைக்குவாண்டோ தற்காப்புக் கலையில் தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் தங்க பதக்கம் வென்ற கிருஷ்ணகுமார்.

இந்த விளையாட்டிற்கான பயிற்சியில் நான் ஈடுபடும்போது மனதளவில் ஒரு உற்சாக உணர்வு ஏற்படும். அந்த உற்சாகமே நான் சாதிக்க காரணமாக இருந்தது.  டைக்குவாண்டோ கலையில் சர்வதேச அளவிலான போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்பதே என் ஆசை.

அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் இருக்கும் சவால்கள் தான் என் முன்னும் இருந்தது. ஆரம்பத்தில் விளையாட்டு மற்றும் படிப்பு இரண்டையும் ஒரே சமயத்தில் எதிர்கொள்வது கடினமாக இருந்தது. தடைகளை நினைத்து நான் வருந்தினால் எதையும் சாதிக்க முடியாது என தோன்றியது. கல்லூரியில் படிப்பு மற்றும் விளையாட்டுப் பயிற்சி என இரண்டையும் சமமாக கையாண்டேன். கல்லூரி நிர்வாகம் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவு இல்லையென்றால் இது சாத்தியமில்லை.

இப்பொழுது சில கடினமான சூழ்நிலைகள் இருந்தாலும் எதிர்காலத்தில் அவற்றையெல்லாம் தாண்டி நான் கடந்த வந்த பாதையைப்  பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியாகவே இருக்கும்.

காயங்களுக்கு வெற்றியே மருந்து!

நந்திதா,  ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி

ஒவ்வொரு போட்டியில் கலந்து கொள்ளும் போது காயங்கள் ஏற்படுவது இயல்பான ஒன்று தான். ஆனால் அந்த காயங்கள் ஏற்படுத்தும் வலிகளே வெற்றிக்கு அடித்தளமாக இருக்கும். காரணம், வலியிலும் அடைய நினைக்கும் இலக்கை அடைந்து வெற்றிக் கோப்பையை கையில்  வாங்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கிடைக்கும் வெற்றியே, போட்டியினால் ஏற்பட்ட காயங்களின் வலியைப் போக்கக் கூடியது எனக் கூறுகிறார் வாலிபால் விளையாட்டில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் வெற்றி பெற்றுள்ள நந்திதா.

“விளையாட்டில் ஈடுபட எனக்கு வாய்ப்பினைக் கொடுத்ததோடு மட்டுமில்லாமல் என் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் எனக்கு அதற்கான உத்வேகத்தையும் கொடுத்தனர்.  உன்னால் நிச்சயம் சாதிக்க முடியும், எதையும் கடந்து வர முடியும் என என்னை உற்சாகப்படுத்துவார்கள்”.

“எனக்கு மிகப்பெரிய லட்சியத்தை அடைய வேண்டும் என்றில்லை. நான் அடைய நினைக்கும் குறிப்பிட்ட இடத்தை மட்டும் அடைந்து வெற்றி பெற்றாலே போதும்“.

“பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு என்னால் முடிந்த வரை உதவி செய்து விளையாட்டில் ஈடுபட ஊக்கம் கொடுப்பேன். விளையாட்டின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு உணர்ந்த வேண்டும் என நினைக்கிறன்”.

விளையாட்டும் வாழ்க்கையில் நம்மை அடுத்த நிலைக்கு முன்னோக்கி அழைத்து சென்று விடும். தடைகள் வந்தாலும் முயன்றால் வெற்றி பெற முடியும். நாம் எடுக்கும் முயற்சிகளுக்கு நியாயமான முறையில் நிச்சயம் பலன் கிடைக்கும்.

கடும் முயற்சிக்கான பரிசுகளே இந்த பதக்கங்கள் !

–  தர்சன்,  ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி

எனக்கு குத்து சண்டை மீது ஆர்வம் வரக் காரணம் முகம்மது அலி மற்றும் மைக் டைசன் தான். அவர்களின் திறமையை வீடியோவில் பார்த்தபின் எனக்கும் அவர்கள் போல் வரவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

ஆனால் உள்ளே வந்தபின் எனக்கு வெற்றிகளை விட, தோல்விகள் தான் அதிகம் காத்திருந்தன. நான் பங்குபெற்ற முதல் போட்டியில் தோல்வி தான் கிடைத்தது. தோல்விகளிலிருந்து வெளிவருவது சற்று கடினமாக இருந்தாலும் பின் வந்த நாட்களில் கடும்முயற்சி செய்தேன்.

அதன் விளைவாய் தொடக்கத்தில்  மாவட்ட, மாநில அளவில் வெற்றியை ஈட்டி, 2018ல் நடைபெற்ற தேசிய குத்துசண்டை போட்டியில் வெண்கல பதக்கமும், 2019ல் தேசியப் போட்டியில் தங்க பதக்கமும் வென்றேன்.

என் பெற்றோர் இருவரும் விளையாட்டுத் துறையை பின்புலமாக கொண்டவர்கள் என்பதால் அதிக ஊக்கப்படுத்துவார்கள். இவர்களைப் போல் என் கல்லூரி முதல்வர் சிவகுமார் அவர்களும் எனக்கு நம்பிக்கை தரும் ஆசானாக நான் கல்லூரிக்குள் கால்பதித்த நாளில் இருந்தே இருந்து வருகிறார்.

கல்லூரி சார்பில் படிப்பிற்கும், விளையாட்டுப் பயிற்சிக்கும் தேவையான உதவிகளை அவர் தொடர்ந்து எனக்கு வழங்கி வருகிறார். என் கல்லூரியின் நிர்வாகம் எனக்கு ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் படிக்க வாய்ப்பு வழங்கி என்னை ஊக்குவித்து வருகிறது. இவை அனைத்தும் எனக்கு தொடர்ந்து கிடைப்பதால் என்னால் என் லட்சியத்தின் மீது சீரான கவனத்தை வைக்க முடிகிறது. விடா முயற்சியும், விளையாட்டின் மீது ஆர்வமும் கொண்ட அனைவராலும் வெற்றிக்கனியை பறிக்க முடியும்.

புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் விளையாட்டு!

இலக்கியா,  என்.ஜி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரி

ஓர் இரும்புப் பந்தை எவ்வளவு தூரம் எறிய முடியும் என்று பார்க்கும் தடகள விளையாட்டு தான் குண்டெறிதல். இப்போட்டிகளில் (Shot Put and Hammer Throw) தேசிய அளவில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என பதக்கங்களை வென்றுள்ளார் இலக்கியா. “விளையாட்டைப் பொறுத்தவரை உடலை அதற்கு ஏற்றவாறு எவ்வாறு தயார்படுத்த வேண்டும் என்ற வரையறை நம்மிடம் தான் உள்ளது. விளையாடும் போது புத்துணர்ச்சி ஏற்படுவதோடு உடல் மற்றும் மனதளவில் பலமுள்ளவராக உணர முடியும்“.

கல்லூரியிலும் நான் விளையாடுவதற்கு முழு ஒத்துழைப்பும் ஆதரவும் தந்ததோடு விளையாடுவதற்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தந்தனர். இன்னும் உற்சாகமாக விளையாடுவதற்கு ஆசிரியர்கள் என்னை ஊக்கப்படுத்தியதோடு சிறிது தளர்வுடன் காணப்பட்டாலும் அறிவுரை வழங்குவார்கள். என் குடும்பமும்  எனக்கு முழு ஒத்துழைப்பையும்  வழங்குகிறார்கள்.

வாழ்க்கை முழுவதும் இந்த விளையாட்டில் ஈடுபட்டு சிறந்த நிலையை அடைய வேண்டும் என்பது தான் என் ஆசை. பெற்றோர்களும் தன் குழந்தைகளை விளையாட்டில் ஈடுபடுத்த முன்வர வேண்டும். விளையாட்டின் மூலமும் பெண்களின் எதிர்காலம் சிறந்த நிலைக்கு வரும்.

தடைகளைத் தாண்டினால் சாதனை!

சந்தியா,  இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

சர்வதேச அளவில் நடைபெறும் கபடி போட்டியில் வெற்றி பெற்று தங்கம் வெல்ல வேண்டும் என்பதையே தனது ஆசையாகவும் குறிக்கோளாகவும் கொண்டுள்ளதோடு உறுதியாக அந்த குறிக்கோளை அடைந்தே தீருவேன் எனக் கூறுகிறார் சந்தியா.

“பள்ளியில்  படிக்கும் போது அங்கு பிற மாணவர்கள் கபடி விளையாடுவதைப் பார்த்த பின்புதான்  நானும் கபடி விளையாட ஆரம்பித்தேன்.  கபடி விளையாடும் போது அதில் நாமும் ஏதாவது சாதிக்க வேண்டும் என எனக்குள் தோன்றியது.  விளையாட ஆரம்பித்தபோது எனக்கு எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் இந்த விளையாட்டின் மீதிருந்த ஆர்வத்தினால் காயம் எனக்கு பெரிதாகத் தெரியவில்லை”.

தற்போது தமிழ்நாடு கபடி அணியில் உறுப்பினராக உள்ளேன். 2015 லிருந்து 2021 வரைக்கும்   தேசிய அளவிலான போட்டியில் 5 முறை பங்கேற்றுள்ளேன்.

என் வீட்டில் உள்ளோருக்கு விளையாட்டு குறித்து எதுவும் தெரியாததினால்  பெரியளவில்  ஆதரவு அளிக்கவில்லை. இருந்தும் நான் கபடியில் தொடர பயிற்சியாளரும், கல்லூரியும் தான் முக்கிய காரணம். கல்லூரியில் ஸ்போர்ட்ஸ் கோட்டா கிடைத்ததால் தான் என்னால் அடுத்த நிலைக்குச் செல்ல முடிந்தது.

“விளையாட்டில் சாதிப்பது என்பது எளிதான விஷயம் அல்ல. நிறைய தடங்கல்கள் இருக்கும் அவற்றைக் கடந்து முன்னேறி வரும்போது தான் சாதிக்க முடியும்“.