குறிச்சி பிரபாகரனை பாராட்டிய கலைஞர்

உனது வெற்றிக்குத் தான் நான் ஆவலாகக் காத்திருந்தேன்”

தன் தாத்தா, அப்பா விட்டுச்சென்ற வழியில் இடையறாது தொடரும் மக்கள் பணிகள், குறிச்சி மக்களின் நலனையே தன் பிரதான கொள்கையாகக் கொண்டு செயல்படுபவர். குறிச்சி நகராட்சி தலைவராகத் தொடர்ந்து இருமுறை போட்டியிட்டு மக்களின் மனதில் நாயகனாக நின்ற இவருக்கு இந்த சட்டமன்றத் தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்திலே வெற்றி நழுவியது என்றே சொல்லலாம்.

இருந்த போதிலும் மக்களின் இன்றியமையாத தேவைகளாகக் கருதப்படும் அடிப்படைப் பிரச்சனைகளுக்கு தீர்வைத்தேடி அவர்களின் குறைகளைப் போக்குபவராக தன் பணியைச் செய்து வருகிறார் குறிச்சி பிரபாகரன். குறிச்சி பகுதியில் அவர் ஆற்றும் மக்கள் பணிகள் குறித்தும், இனி நடைமுறைப் படுத்தப்படும் திட்டங்கள் பற்றியும் தி கோவை மெயில் நிகழ்த்திய நேர்காணலின் போது அவர் கூறியவற்றின் தொகுப்பு.

அரசியல் பயணம்:

நான் பள்ளி பயிலும் காலங்களில் இருந்தே கலைஞர் கருணாநிதி மீதும் அவர் பேச்சின் மீதும் அதிக நாட்டமும், ஈடுபாடும் கொண்டிருந்தேன். என் தாத்தா, அப்பா, நான் என தொடர்ந்து திமுகவில் உள்ளாட்சிப் பொறுப்புகளில் இருந்துள்ளோம். மூன்று தலைமுறையாக திராவிட முன்னேற்றக் கழகத்தில் எங்கள் பயணம் தொடர்ந்து வருகிறது. என் தாத்தா 1960 லிருந்து 2001 வரை தொடர்ந்து ஆச்சிப்பட்டி ஊராட்சியின் தலைவராக இருந்துள்ளார். 2001 முதல் 2005 வரை எனது தந்தை குறிச்சி நகராட்சி மன்றத் தலைவராக மக்கள் பணியாற்றியுள்ளார்.

என் தந்தை மறைவுக்குப் பின் வந்த இடைத்தேர்தலில் நான் அந்தப் பதவிக்கு போட்டியிட்டேன். அப்போது அதிமுகவின் ஆட்சிக்காலம் நடைபெற்றதால் அவர்கள் தரப்பில் இருந்தும் இந்தப் பகுதியில் போட்டியிட்டு குறிச்சி நகராட்சியைக் கைப்பற்ற வேண்டும் என முனைப்போடு செயல்பட்டனர். என் தந்தை இந்த பகுதி மக்களுக்கு செய்த நற்பணியின் காரணமாக இடைத்தேர்தலில் 6500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக பொறுப்பிற்கு வந்தேன். 2005 லிருந்து ஒன்றரை வருட காலம் குறிச்சி நகராட்சித் தலைவராக இருந்தேன்.

அதன் பின் 2006ல் மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தப் பின் இரண்டாவது முறையாக குறிச்சி நகராட்சித் தலைவராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

வழிகாட்டுதல்:

இடைத்தேர்தலில் எதிர்க்கட்சியாக இருக்கும்போது வெற்றி பெறுவது என்பது மிகவும் அரிது. குறிச்சி பகுதியில் வெற்றிபெற்ற பின் அண்ணா அறிவாலயத்தில் கலைஞரைச் சந்தித்தேன். அப்பொழுது அவர் “குறிச்சி பகுதியின் வெற்றியை அறியத்தான் நான் ஆவலாகக் காத்திருந்தேன். பிரபாகரன் என்ற பெயருக்கு தகுந்தாற் போல மக்கள் பணி செய்ய வேண்டும். உன் தந்தையைப் போலவே நீயும் நன்றாக மக்களுக்கு பணியாற்ற வேண்டும்“ என்று கூறினார். அவர் கூறிய வார்த்தைகள் எனது அரசியல் வாழ்வில் மிகப்பெரிய வழிகாட்டுதலாக அமைந்தது.

குறிச்சி நகராட்சித் தலைவராக

குறிச்சி பகுதியில் 2005ல் நகராட்சித் தலைவராகப் பொறுப்பிற்கு வரும்போது குடிநீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடியது. மக்களுக்கு 20 அல்லது 25 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் கிடைக்கும் சூழல் ஏற்பட்டது. அந்த சமயத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டினால் சாலை மறியல் போன்றவையும் நடந்தன. அப்பொழுது இருந்த ஆட்சியாளர்கள் மக்களின் அத்தியாவசியத் தேவையான குடிநீர் குறித்து பெரிதளவில் கவலை கொள்ளவில்லை.

2006ல் கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக வந்த பின், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போது அவர்களிடம் இப்பிரச்சனை குறித்து கோரிக்கை வைத்தேன். அதற்கு தீர்வாக ஆழியார் கூட்டு குடிநீர் திட்டத்தை அறிவித்தனர். குறிச்சி, குனியமுத்தூர், கிணத்துக்கடவு ஆகிய பகுதியில் ஆழியார் கூட்டு குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டு ஒன்றரை வருடத்திலே அதற்கான பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.

திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான அரசால் குறிச்சி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு நீங்கியது. அதே போல குனியமுத்தூர், கிணத்துக்கடவு பகுதியிலும் குடிநீர் பிரச்சனை நீங்கியது.

செம்மொழி பூங்கா கலைஞர் அறிவித்து நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் மதுக்கரை சாலையில் உலகத்தமிழ் செம்மொழி பூங்கா ஏற்படுத்தினோம். மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் ஏதுவாக இருப்பதற்காக உழவர் சந்தை, மக்களின் அடிப்படைத் தேவைகளான சாலை வசதி, வடிகால் வசதி, தெருவிளக்குகள் போன்ற வசதிகளை முன்னின்று செய்தோம். நான் செய்த பணிகளுக்காக மக்களின் ஆதரவு இன்றளவும் எனக்கு உள்ளது.

மக்களின் பிரச்சனைக்கு தீர்வு:

நடந்து முடித்த சட்டமன்றத் தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவினாலும் குறிச்சி மக்களின் ஆதரவு எப்போதும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இருந்துள்ளது.

சட்டமன்றத் தேர்தலில் இங்கு போட்டியிட்டு குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை இழந்து அதிகாரத்தில் இல்லையென்றாலும், மக்கள் பிரச்சனை எதுவாக இருந்தாலும் உடனே முன்னின்று செய்கிறேன். சமீப காலமாக மக்களைச் சந்தித்து, பிரச்சனைகளைக் கேட்டு அதற்கான தீர்வினை வழங்கி வருகிறேன்.

அத்தியாவசியத் தேவையாக கருதப்படும் குடிநீர் 30 அல்லது 20 தினங்கள் என கால தாமதமாய் வருவதாக என்னிடம் மக்கள் கூறுகின்றனர். அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளைச் சந்தித்தும், மாநகராட்சி ஆணையாளரிடம் பேசி, குடிநீர் பிரச்சனையைத் தீர்த்து வைத்துள்ளோம். அதுமட்டுமல்லாமல், தெருவிளக்கு கள் இல்லாத காரணத்தினால் இரவு நேரங்களில் வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுகிறது என மக்கள் என்னிடம் கூறியபோது, உடனடியாக அதிகாரிகளிடம் கூறி அதற்கான நடவடிக்கையை எடுத்தேன்.

முதல்வர் ஸ்டாலின் கிராமப்பகுதிகளில் மக்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். கேரளாவின் எல்லைப் பகுதியான மாவுத்தம்பதி போன்ற இடங்களில் மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கின்றனர். ஆனால் இந்த மக்களின் பயன்பாட்டிற்காக பேருந்து வசதிகள் இல்லாத சூழலே இப்பகுதியில் உள்ளது. இதற்கு தீர்வு காணும் விதமாக போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் இதுகுறித்து கூறியுள்ளோம். அவரும் இந்தப் பிரச்சனையை விரைவில் சரி செய்து தருவதாகக் கூறியுள்ளார்.

விவசாயிகள் நிறைந்து இருக்கக் கூடிய பகுதியாக கிணத்துக்கடவு, மதுக்கரை உள்ளது. குறிப்பாக தக்காளி சாகுபடி நாச்சிபாளையம் பகுதியில் அதிகமாக நடைபெறுகிறது. அப்பகுதி சந்தையில் சில நேரங்களில் குறிப்பிட்ட விலை நிர்ணயம் இல்லாமல் உள்ளது. மேலும் இங்கு அதிகமாக தக்காளி சாகுபடி செய்யப்படுவதால் சாஸ் உற்பத்தி செய்யக்கூடிய தொழிற்சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். தொழிற்சாலையை அரசாங்கம் ஏற்படுத்தினால் விவசாயிகளுக்கு பாதிப்பில்லாத வகையில் விலைகள் நிர்ணயிக்கப்பட்டு எந்த நேரத்திலும் தக்காளி சாகுபடி செய்யலாம்.

தொண்டாமுத்தூர் தொகுதிக்குட் பட்ட மாதம்பட்டி, தீத்திபாளையம் பகுதியில் காய்கறிகளை சேமித்து வைப்பதற்கான கிடங்கு வேண்டுமென கேட்டுள்ளார்கள். சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் அதைச் செய்து கொடுப்போம்.

வெற்றி உறுதி:

கொங்கு மண்டலத்தில் திமுகவை இன்னும் பலப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து முதல்வரிடம் பேசியுள்ளோம். அது குறித்து சில யோசனைகளையும், இன்னும் சற்று முனைப்போடு வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறுவதற்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளோம்.

மக்கள் இந்தப் பகுதியில் எங்களைத் தோற்கடித்ததாக நினைக்கவில்லை. வரக்கூடிய உள்ளாட்சி தேர்தலில் 100 % வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. முதல்வரின் திட்டங்களும், அவரின் செயல்பாடுகளும் பயனுள்ள வகையில் இருப்பதால் மக்கள் அவரை விரும்புகின்றனர். எதிர்க்கட்சியினரே பாராட்டும் அளவிற்கு அவரது செயல்பாடுகள் உள்ளன. முதல்வர் அறிவிக்கும் மக்களுக்கான திட்டம் மற்றும் அறிவிப்புகள் வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி பெறுவதற்கு சாதகமாக அமையும்.

மேம்பால திட்டங்கள்:

ஈச்சனாரி மேம்பாலம் மக்களின் பல ஆண்டுகால கோரிக்கையாக இருந்தது. இதனை அப்போதைய முதல்வராக இருந்த கலைஞர் மற்றும் தளபதியிடம் மக்களின் வேண்டுகோளாகவும் மற்றும் அதனால் அவர்கள் படும் அலைச்சல் குறித்தும் கூறினோம். அதற்கு தீர்வு காணும் விதமாக ஈச்சனாரி மேம்பாலம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றன.

அதேபோலப் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த மேற்கு புற வழிச்சாலை அமைத்துத் தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். அப்பொழுதுதான் கோவையில் இருக்கக் கூடிய போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முடியும். இதெற்கென தனியாக நிதி ஒதுக்கீடு செய்தபின் பணிகளை தொடங்குவதாக அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு:

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் குப்பைகளை கொட்டுவதற்கு முன் மக்கும், மக்கா குப்பை என தரம் பிரிக்க வேண்டும். ஆனால் வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் அவ்வாறு பிரிக்காமல் அப்படியே கொட்டி விடுகிறார்கள். அவ்வாறு கொட்டுவதன் மூலம் நிலத்தடி நீர் அப்பகுதியில் மோசமாக பாதித்துள்ளது. அங்கு சுமார் 10 கி.மீ சுற்றளவில் எங்கு ஆழ்த்துளைக் கிணறு தோண்டினாலும் பச்சை நிறமாகத்தான் தண்ணீர் வருகிறது. அந்தக் குடிநீரால் பல வியாதிகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.

அமைச்சர் கே.என்.நேரு கோவைக்கு வந்த போது வெள்ளலூர் குப்பைக் கிடங்கையும் பார்வையிட்டார். இந்த குப்பைக் கிடங்கிற்கு நிரந்தரமாக தீர்வு ஏற்படுத்த வேண்டும் எனக் கூறினார். குப்பைகளைத் தரம் பிரித்து, உரம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுவதோடு, எந்தவித பாதிப்பும் இல்லாமல் மக்கள் அந்தப் பகுதியில் நிம்மதியாக வாழக்கூடிய அளவிற்கு திமுக அரசாங்கம் அதற்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தும்.

புரட்சியும், வளர்ச்சியும்:

மக்களின் முக்கியத் தேவையான குடிநீர் மற்றும் சுகாதாரம் போன்றவற்றை முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளோம்.

திமுக அறிமுகப்படுத்தும் நலத்திட்டங்களினால் மக்களிடம் மாற்றம் வருவதைப் பார்க்க முடிகிறது. இந்த 100 நாட்களில் அவரது செயல்பாடுகள் மக்களை ஈர்க்கக் கூடிய வகையில் உள்ளன. கடந்த தேர்தலின் போது ஏன் திமுகவை வெற்றி பெறவைக்கவில்லை என மக்கள் எண்ணும் அளவிற்கு முதல்வரின் செயல்பாடுகள் உள்ளன.

3 அல்லது 4 வருடம் செய்யக்கூடிய வேலைகளை பதவியேற்ற 100 நாட்களிலே முழுமையாகச் செய்துள்ளார். அதனால் திமுகவிற்கு ஆதரவு அளிக்கக் கூடிய நிலைப்பாட்டில் தான் மக்களும் உள்ளனர். தேர்தல் அறிக்கையில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தி வருவதோடு அறிவிக்காத பல நலத்திட்டங்களையும் செய்து வருகிறார். மக்கள் விரும்பும் படியாக, மக்களுக்கான ஆட்சியாக திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான அரசாங்கம் அமைந்துள்ளது.