பசுமை இயக்கத்தின் சார்பில் “ஒரு விதை புரட்சி”

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் பசுமை இயக்கத்தின் சார்பில் “ஒரு விதை புரட்சி” என்ற தலைப்பில் மரம் நடும் நிகழ்ச்சி துவக்கி வைக்கப்பட்டது.

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களின் கனவை நனவாக்கும் வகையில் “ஒரு விதை புரட்சி” என்ற தலைப்பிலும் “அப்துல் கலாம் உயிர்த்தெழுகிறார்” என்ற தலைப்பிலும் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நடும் பணியில் பசுமை இயக்கத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இம்மரம் நடும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக பசுமையான, செழிமை நிறைந்த கோவையை உருவாக்கும் வகையில் பெரியநாயக்கன்பாளையத்தில், உள்ள பிகே தோட்டம் பகுதியில் மார்ட்டின் குரூப் ஆப் கம்பெனியின் இயக்குனர் லீமா ரோஸ் மார்ட்டின் இம்மரம் நடும் நிகழ்வை துவக்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பசுமை இயக்கத்தின் தேசியத் தலைவர் சிவக்குமார், வளமான தேசத்தை நம் சந்ததிகளுக்கு கொடுக்கும் வகையில் இந்த பணியை நாங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக கூறினார். மேலும் இப்பகுதியில் மட்டும் இந்த மாதத்திற்குள் 10 ஆயிரம் மரங்கள் வரை நட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட பசுமை இயக்க ஒருங்கிணைப்பாளர் அந்தோணிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.