மேகதாது அணை : புது தலைவலியா? 

கொரோனா வைரஸ் பரவல், தடுப்பூசி தட்டுப்பாடு, நீட் தேர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, அதிகரிக்கும் வேலையில்லா பட்டதாரிகள் என்று இருக்கின்ற சிக்கல்கள் போதாது என்று புது தலைவலியாக இந்த மேகதாது அணை எனும் மேக்கேதாட் அணை கட்டும் விவகாரம் வந்து சேர்ந்திருக்கிறது. ஆனால் இது ஒன்றும் புதுதலைவலி அல்ல. நூற்றாண்டு காலமாக இருந்து வரும் காவிரி நீர்ச்சிக்கல் குடும்பத்தின் இன்னொரு அவதாரம் தான் இது.

காவிரி நீர் பங்கீட்டில் தமிழகம், கர்நாடகம் என்ற இரு மாநிலங்களுக்கும் இடையே வெகு காலமாக தீர்க்கப்படாமல் தொடர்ந்து வரும் சிக்கல் தான் இது. கர்நாடகாவில் வரும் நதிகளின்  மீது அணைகள் கட்டி நீரைத் தடுத்து நீர்ப்பாசனம் செய்வது கர்நாடகாவின் உரிமை என்றாலும் அந்த நதி, காலம், காலமாக தமிழகத்துக்குள்ளும் பாயும் போது அதற்கான உரிமையில் தமிழகத்துக்கும் பங்குண்டு என்பது சட்டப்படியும், நியாயப்படியும் உறுதியான ஒன்று. ஆனால் அதனை கர்நாடகாவில் இருந்த, இருக்கின்ற எந்த மாநில அரசும் மதித்து நடந்தது இல்லை.

எந்த விதமான ஒத்துழைப்பும் தராமல் சிக்கலை இழுத்தடித்து கடைசியில் மழைக்காலத்தில் கொண்டு போய் முடிப்பது, அல்லது சிக்கலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வது என்பதே அவர்களின் பணியாக இருந்து வருகிறது. காவிரி நீர் அளிப்பது குறித்து கடிதப் போக்குவரத்து, அதிகாரிகள் தொடங்கி, நீர்ப்பாசன அமைச்சர், முடிந்தால் இரு மாநில முதலமைச்சர்கள் சந்தித்து பேசுவது, பிறகு சிக்கல் தீராமல் மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் முன் பேசுவது, வழக்கு போடுவது, காவிரி நீர்த் தீர்ப்பாயம் என்று பலவற்றைப் பார்த்தாலும் ஒரு உறுதியான தீர்வோ, சிக்கலைத் தீர்க்கும் வழியோ தமிழகத்திற்கு கிடைக்கவில்லை. ஆண்டுக்கு ஆண்டு அந்த சிக்கல் அதிகரித்துக் கொண்டே வந்திருக்கிறது. அதில் கூடுதலாக முளைத்திருப்பது தான் இந்த மேகதாது அணைக்கட்டு விவகாரம்.

இந்த அணைக்கட்டு கட்டும் பணி இப்போது தான் தொடங்கி இருப்பது போல யாரும் எண்ணி விடக்கூடாது. அது தொடங்கி பல மாதங்கள் ஆகிறது. அதற்கான கட்டுமானப் பொருட்கள் கூட தமிழகப் பகுதியில் இருந்து பெருமளவு போனதாக கூறப்படும் நிலையில் கர்நாடகா இந்த அணையைக் கட்டுவேன் என்று ஒற்றைக் காலில் நிற்கிறது. முதலமைச்சர், நீர்ப்பாசனத்துறை அமைச்சர், எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி என்று ஒற்றைக் குரலில் பேசுகின்றனர். போதாதற்கு இந்த சட்ட மசோதாவுக்கு ஒப்புதலும் மத்திய அரசால் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் கடைமடை அல்லது இந்த நீரில் உரிமை கொண்ட தமிழகத்திடம் ஒரு வார்த்தை கூட கேட்காமல் செய்தே தீருவேன் என்பது தான் கர்நாடக அரசின் நிலை.

இதற்கு எதிர்வினையாக தமிழகம் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி, தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். போதாதற்கு ஒரு குழுவாக மத்திய அரசைச் சென்று சந்திக்க இருக்கிறார்கள். இதனால் எல்லாம் உடனடி தீர்வு கிடைத்து விடாது. நீதிமன்றத் தீர்ப்பின்படி, இதுவரை தர வேண்டிய காவிரி நீரையே ஒவ்வொரு வருடமும் அவர்களின் நிலைக்கேற்ப மனம் இருந்தால் தருவார்கள், இல்லை என்றால் தர மாட்டார்கள் என்ற நிலைதான் நீடிக்கிறது.

கடந்த பத்தாண்டுகளாக வந்த நீரை கணக்கெடுத்துப் பார்த்தால் இது புரியும்.

இந்த நிலையில் நாம் செய்ய வேண்டியது ஒன்றுதான். சளைக்காமல் நீதிமன்ற தீர்ப்பின்படி நீரைப் பெறுவது, சட்டப்படி கர்நாடக அரசை நடந்து கொள்ள வற்புறுத்தி, நடக்க வைப்பது, அதே நேரத்தில் நீர்வளத்தில் பின்தங்கி இருக்கும் மாநிலமான நாம் எந்த வகையில் எல்லாம் நீராதாரங்களை மேம்படுத்த முடியும் என்று பார்த்து அதில் முழு கவனத்தை செலுத்தி வெற்றி பெறவேண்டும். இதில் மழை நீர் சேமிப்பு தொடங்கி, குளங்கள் போன்ற நீராதாரங்களை மேம்படுத்துவது வரை அடங்கும், இந்த நீர் சேமிப்பு மற்றும் பயன்பாடு என்பது ஒரு மக்கள் இயக்கமாக மாற வேண்டும். ஏனென்றால் தொலைநோக்கில் பார்த்தால் தற்போதைய அரசியல் சமூக சூழலில் மற்றவர்களிடம் கையேந்தும் நிலையில் நமக்கு தேவையான நீருக்கு நமக்கு நாமே எனும் சுயசார்பு திட்டமே உதவிகரமாக இருக்கும்.

ஒரு பக்கம் கேரளா, இன்னொரு பக்கம் ஆந்திரா மற்றும் கர்நாடகா என்ற நிலை மெல்ல மெல்ல மாற வேண்டும். இப்போது வந்துள்ள தமிழக அரசு இதில் சிறப்பு கவனம் செலுத்தி ஒரு தீர்வைக் காண முயல வேண்டும். நீர்வளத்துறை என்ற புதிய துறையை உருவாக்கி இருப்பது ஒரு புதிய நம்பிக்கையை ஒளியைக் காட்டுகிறது. அந்த ஒளியில் தமிழகத்தில்  நீர்த்தட்டுப்பாடு எனும் சிக்கல் ஒழிந்து தீர்வு பிறக்கட்டும். ஏனென்றால் நீரின்றி அமையாது உலகு என்பது தமிழகத்திற்கும் பொருந்தும்.