திமுகவின் கோட்டையாக கோவை மாறும்!

-நா. கார்த்திக், பொறுப்பாளர், கோவை மாநகர் கிழக்கு மாவட்டம்,  திமுக  

பேரறிஞர் அண்ணாவிற்கு அடுத்தபடியாக மிக பிரபலமான பேச்சாற்றல் கொண்டவராக கலைஞர் கருணாநிதி அவர்கள் அறியப்பட்டார். திராவிடக் கட்சிகளுக்கு கூடுதல் வலு சேர்ப்பதற்கு கலைஞரின் பேச்சும், திரைப்பட வசனங்களும் மிகப்பெரிய அளவில் உதவியது. அன்றைய கால கட்டங்களில் இளைஞர்களை திராவிடக்  கட்சிகளின் பக்கம் இழுப்பதற்கு அவரின் பேச்சு ஒன்றே போதுமானதாக இருந்தது. அப்படி அவரின் கருத்துக்களாலும், சிந்தனைகளாலும் சிறு வயதிலேயே ஈர்க்கப்பட்டவர் தான் சிங்காநல்லூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக். திராவிடத்தின் கொள்கைகளால்  கவரப்பட்டு  தன்னை திமுகவில்  இளமையிலேயே இணைத்துக் கொண்டார்.

அடிப்படையில்  கட்சியில் சிறிய பொறுப்புகள் வகித்திருந்தாலும் வெற்றி, தோல்வி போன்றவை அவருக்கு  பல அரசியல் பாடங்களை கற்றுக் கொடுத்திருந்தது. கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில்  சிங்காநல்லூர் தொகுதியில் மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தார். இந்த 2021 தேர்தலில் வெற்றியை எட்ட முடியவில்லை என்றாலும் 70,000க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று  இரண்டாவது இடம் பிடித்தார்.

மக்களுக்கு அவர் செய்ய விரும்பக் கூடிய சேவைகள், அடுத்து வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல் குறித்தும், தளபதி அவர்களின் கனவான கொங்கு மண்டலத்தைக் கைப்பற்றுதல் ஆகியவற்றை பற்றியும் சமீபத்தில் ‘ தி கோவை மெயில்’ நிகழ்த்திய நேர்காணலின் போது நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

திராவிட இயக்கப் பற்று:

திராவிட முன்னேற்றக் கழகத்தில் தொண்டராக இருந்த இவரது தகப்பனாருடன் கோவையில் திமுகவின்  பொதுக்கூட்டங்கள்  நடைபெறும் இடங்களுக்கு  பள்ளிக்கு சென்று விட்டு திரும்பிய பின்  அப்பாவோடு சேர்ந்து கூட்டத்திற்கு சென்றுவிடுவார். அன்றைய திமுகவின் பேச்சாளர்கள் பேசக்கூடிய கூட்டங்கள், கலைஞர் அவர்கள் பங்கேற்க கூடிய கூட்டம், இன்றைய முதல்வர் பேசக்கூடிய கூட்டம் போன்ற எல்லா கூட்டங்களுமே  திராவிடத்தின் மீதான அதீத பற்றை இவருக்கு ஏற்படுத்தியது. அதோடு இதுபோன்ற  தலைவர்களின் பேச்சால் ஈர்க்கப்பட்டு  தானே ஒரு சிறந்த மேடைப் பேச்சாளராகவும் திகழ்ந்தார்.

தீவிரமாக இளைஞர் அணியில் பணியாற்றிக் கொண்டிருந்த சமயத்தில்  சிங்காநல்லூர் தொகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் வெடி குண்டு வைத்ததாக இவர் மீது ஒரு பொய் வழக்கு புனையப்பட்டது.  “அந்த வழக்கு பதிவதற்கு என்ன காரணம் என்றால், மாலை நேரங்களில் பொது கூட்டங்களுக்கு செல்வது மட்டுமின்றி எல்லா பொதுக்கூட்ட மேடைகளிலும் நான் பேசுவேன்”   அதனால் இவ்வாறான பொய் வழக்குகள்  என் மேல் போடப்பட்டது என்று கூறினார். இருப்பினும்,  தான் கொண்ட கொள்கை, தான் சேர்ந்திருக்க கூடிய கட்சி, கட்சியின் மேல் இருக்கக்கூடிய நாட்டம், மற்றும் பிடிப்பினால், இளம் வயதிலே ‘கட்சிக்காக என்ன வழக்குகள் வந்தாலும் சரி, சட்டப்பூர்வமாக என்ன சிக்கல் வந்தாலும் சரி’ என்று அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு செயல்பட்டார்.

கலைஞர் அவர்களின் பேச்சாற்றல், எழுத்தாற்றல், திராவிட முன்னேற்றக் கழகத்தின் உடைய கொள்கை, லட்சியம் போன்றவற்றால் ஈர்க்கப்பட்டு,  இவர் தன்னை திமுகவில் இணைத்து கொண்டு கடந்த 35 ஆண்டுகளாக  மக்கள் சேவகனாக பணியாற்றி வருகிறார்.

தொடக்கமே வெற்றி:

2006 ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் கோவை மாநகர மன்ற தேர்தல் நடைபெற்றது. அந்த மாநகர மன்ற தேர்தலில் கோவை மாநகராட்சி 16 வது வட்டத்தில் மாமன்ற உறுப்பினர் பொறுப்பிற்கு போட்டியிடுவதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது  16 வது வட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக என மும்முனைப் போட்டி நிலவியது.  திமுக சார்பாக 16 வது வட்டத்தில் போட்டியிட்ட நா. கார்த்திக்  தனது  முதல் தேர்தல் களத்திலேயே வெற்றி பெற்றார்.

அதன் பின்பு மேயர், துணை மேயர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்ற போது, அதிலும் மக்கள் சேவை ஆற்றுவதற்காக ஒரு அரிய வாய்ப்பு இவருக்கு கிடைத்து, மாநகராட்சி துணை மேயர் பொறுப்பில் போட்டியிடுவதற்கு இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.  பல  தேர்தல்களில்  இவர் நேரடியாக பணியாற்றிய அனுபவம் கொண்டிருந்தாலும் கூட  அந்த தேர்தலில் இவரே போட்டியிட்டு வெற்றி பெற்றது ஒரு மிகப்பெரிய அனுபவமாக அமைந்தது என தெரிவித்தார்.

பல பொறுப்புகள்:

2016 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கலைஞர் அவர்களும், தற்போதைய முதல்வர் ஸ்டாலின் அவர்களும்  சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடுகின்ற வாய்ப்பினை இவருக்கு வழங்கினார்கள்.  மாநகராட்சி துணை மேயராக, மாமன்ற உறுப்பினராக, திமுகவின் பகுதி கழகச்  செயலாளராக, மாநகர இளைஞர் அணியின் அமைப்பாளராக, துணை அமைப்பாளராக என பல பொறுப்புகளில்  பணியாற்றிய அனுபவம் சிங்காநல்லூர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட  உதவியாக இவருக்கு இருந்தது. திமுகவை முன்னிலைப்படுத்தி பல்வேறு பணிகளை இந்த பகுதியில் செய்துள்ளார்.

குறிப்பாக மாநகராட்சி துணை மேயராக இவர் இருந்த காலத்தில், சிங்காநல்லூர் பகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்காக  பணியாற்றியுள்ளார்.  இப்படி பல்வேறு மக்கள் நலப்பணிகளை முன்னின்று செய்த காரணத்தினால் 2016 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மக்கள் இவருக்கு மிகப்பெரிய ஆதரவை வழங்கி வெற்றி பெற வைத்தார்கள்.

சாமானியனாகவும் பல நற்செயல்கள்:

அரசியலுக்கு அப்பாற்பட்டு இவர் பல  சமூக சேவைகள் செய்துவருகிறார்  என்று சொன்னால் அது மிகையாகாது.  2012 ம் ஆண்டு தளபதி ரத்த தான இயக்கம்  என்ற அமைப்பை  ஏற்படுத்தி, அதன் மூலமாக ஒவ்வொரு ஆண்டும், அதாவது கலைஞர் அவர்களின்  பிறந்த நாள், அதைப்போலவே மு.க ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் என்று வருடத்திற்கு இரண்டு முறை முகாம்கள் அமைக்கப் பெற்று, அரசு மருத்துவமனையில் ரத்த தானம் கொடுக்கும் நிகழ்வு நடைபெறும்.

கோவை மட்டுமல்லாது தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களிலிருந்து இங்கு சிகிச்சைக்காக வரக்கூடிய  நோயாளிகளுக்கு ரத்தம் தேவைப்பட்டால் இந்த அமைப்பை  தொடர்பு கொண்டால்,  தொடர்பு கொண்ட ஒரு மணி நேரத்திற்குள் அவர்களுக்கு தளபதி ரத்த தான இயக்கத்தில் இருந்து,  ரத்தம் தானமாக வந்துவிடும்.  இதுவரை 18,000க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த அமைப்பின் மூலம் உதவி புரிந்துள்ளனர்.

திமுகவின் சார்பாக மரக்கன்றுகளை நட்டு வளர்க்கக் கூடிய செயல்களை தொடர்ந்து இவர் செய்து வருகிறார்.  எப்பொழுது  ஓய்வு நேரம் கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் கால அவகாசத்தை ஏற்படுத்திக் கொண்டு மரக்கன்றுகளை நட்டு வளர்க்கக் கூடிய பணிகளில் தொடர்ந்து தனது கவனத்தை செலுத்துகிறார்.

இந்த தேர்தலில் வெற்றி கிட்டாத காரணம்:

“2019 ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை திராவிட முன்னேற்றக் கழகம் பெற்றது. அதனால் கோவையைப் பொறுத்தவரை மக்கள் மனம் மாறினார்கள் என்று சொல்ல முடியாது”.

“இதற்கு முன் ஆட்சி செய்த அரசு திமுகவின் செயல்பாடுகளை செய்ய விடாமல் தடுப்பது, திமுக மட்டுமல்ல எதிர்க்கட்சிகளின் பணியை தடுப்பது போன்ற செயல்களை செய்து வந்தனர். சாதாரண ஒரு விழாவுக்குக்  கூட கொடிகள் கட்ட முடியாது. திமுகவின் சுவரொட்டிகள் ஒட்ட  முடியாது.”

“நான் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த சமயத்தில் எங்கள் பகுதி மக்களின் குறைகளை தீர்க்க 10,000க்கும் மேற்பட்ட கடிதங்களை மாநகராட்சியில் கொடுத்துள்ளேன். மாநகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து குறைகளையும் கூறியுள்ளேன், பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று பலமுறை முயற்சி செய்து இருக்கிறேன். ஆனால் எந்த வித நடவடிக்கைகளையும் அவர்கள் அப்போது எடுக்கவில்லை.  வளர்ச்சிப் பணிக்கான எங்களது பல திட்டங்கள் கடந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டு இருந்தன.”

“முந்தைய ஆட்சியில் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர் என்ற காரணத்திற்காக என்னுடைய பகுதியில் பணிகள் முழுக்க முழுக்க புறக்கணிக்கப்பட்டன. கடந்த ஆட்சியில் ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் போராடி தான் தீர்வு காண வேண்டும்  என்ற நிலைதான் கோவையில் இருந்தது”. என்ற கருத்தையும் நா.கார்த்திக் முன் வைத்தார்.

கொங்கு மண்டலம் திமுகவின் கோட்டையாக மாறும்:

திமுக ஆட்சி வந்தவுடன் கொரோனா நோயைக் கட்டுப்படுத்த கூடிய செயல்கள் அனைத்தையும் சிறப்பு அதிகாரிகள் நியமித்து கட்டுக்குள் கொண்டு வர முதல்வர் முயற்சி எடுத்தார்.  இதற்கு முன்னதாக ஆட்சி செய்த அரசு கொரோனாவை முறையாகக்  கட்டுப்படுத்தாத காரணத்தினால், தேர்தலுக்குப் பிறகு கொரோனா அதிகமாக பரவியது. திமுக ஆட்சிக்கு வந்த உடனே முதல்வர் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அமைச்சர்களை பொறுப்பாளர்களாக நியமனம் செய்து கொரோனாவை கட்டுக்குள் வைக்க கூடிய செயலில் ஈடுபட்டார். அந்த முயற்சியின் விளைவாக  தொற்றுப் பரவல் குறைந்துள்ளது.

மேலும், கோவையில் கொரோனா அதிகளவு இருந்த சமயங்களில் முதலமைச்சர் கோவைக்கு வருகை தந்து, நேரடியாக ஆய்வு செய்து நோயை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொண்டார்.

“தமிழ்நாட்டில் இதுவரை இருந்த அரசியலைத் தாண்டி, அரசியல் சாயம் இல்லாமல் என்றும் மக்களுக்காக பணியாற்றக் கூடிய ஒரு நல்லாட்சியை தரும் முதலமைச்சராக கழகத் தலைவர்   பணியாற்றி கொண்டிருக்கிறார்.”

அனைத்துத் துறைகளிலுமே ஒரு முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ வேண்டும் என்று திட்டமிட்டு முதல்வர் பணியாற்றி வருகிறார்.  அவருடைய செயல்பாட்டை ஒட்டி நிச்சயமாக நங்கள் தலைவரின் வழியில் பணியாற்றி அவரைப் பின்பற்றி நடப்போம்.

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ செயல்பாட்டின் மூலமாக பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வேகமாக நடைபெற்று கொண்டிருக்கின்றன. தொழில்துறையில் உதவிக் கரத்தை நீட்டும் வகையில் சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள், அதைப்போலவே பெரும் தொழிற்சாலைகள் போன்றவற்றின் தொழில் முன்னேற்றத்திற்கு வித்திட்டு தொழிலாளர் நலனைப் பேணி பாதுகாப்போம்.

இந்த கொங்கு மண்டலம் எங்கள் கழக தலைவரின் உடைய ஆட்சியில் ஒரு ஒளிமயமான எதிர்காலத்தைப் பெறும் என்பதை நாங்கள் ஆணித்தரமாக நம்புகிறோம். மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கி கொங்கு மண்டலம் செல்லும். அதோடு உள்ளாட்சித் தேர்தலில் திமுக கோவையில் 100 சதவீதம் வெற்றியைப் பெறும்.

திமுக கொங்கு மண்டலத்தில் பல தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளதோடு, 2019 பாராளுமன்ற தேர்தலில் இங்கு அதிமுகவின் கோட்டை தகர்க்கப்பட்டுள்ளது. அதே போல இனி வரக்கூடிய தேர்தல்களில் திமுகவின் கோட்டையாக இந்த கொங்கு மண்டலம் மாறும்”. என நா.கார்த்திக் கூறினார்.