வெவ்வேறு வெப்பநிலைகளுக்கு ஏற்ப மாறும் மனித உடலமைப்பு!

மனித உடல்கள் கால சூழலுக்கேற்ப மாற்றம் பெறத்தக்க வகையில் உள்ளன என்றும், ஒரே அளவாய் இல்லை என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

300 க்கும் மேற்பட்ட பழங்கால மனிதர்களின் உடல், மூளையின் புதைபடிவங்களை ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். கடந்த மில்லியன் ஆண்டுகளில், மனித உடல் ஒரே அளவாய் இல்லை என்றும், கால சூழலுக்கேற்ப ஏற்ற மாற்றம் பெறத்தக்க வகையில் உள்ளன என்றும் கண்டறிந்துள்ளனர். உதாரணமாக, துருவப் பகுதிகளில் காணப்படும் குளிர்ந்த வெப்பநிலையை சமாளிக்கும் விதமாக பெரிய உடல் அமைப்பு தோன்றியிருக்கலாம் என மதிப்பிட்டுள்ளனர்.

ஹோமோ சேப்பியன்ஸ், ஆப்பிரிக்காவில் சுமார் 3,00,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது. 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நியாண்டர்தால் மனிதர்கள் அழிந்து போனதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. ஆனாலும், அந்தக் காலத்தில் வாழ்ந்த நமது மனித மூதாதையர்களுடன் ஏற்பட்ட போரில் அவர்கள் அழிந்திருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக பரிணாம உயிரியல் வல்லுநர் நிக்கோலஸ் லாங்ரிச் தெரிவித்துள்ளார். நன்கு நிமிர்ந்து நடந்த ஹோமோ எரெக்டஸ் ( Homoerectus) என்னும் மனித இனச் சான்றுகள் ஜாவா தீவில் கிடைத்துள்ளன.

ஆரம்பகால ஹோமோ ஹபிலிஸ் மனித இனத்தோடு ஒப்பிடுகையில், சேப்பியன்ஸ் 50% கூடுதல் கனம் பொருந்தியதாகவும், மூன்று மடங்கு மூளையளவு பெரியதாகவும் உள்ளது. எனவே, உடல்வடிவமைப்பு மற்றும் மூளையின் அளவை அதிகரிக்கும் போக்கு மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியை வரையறுக்கும் பண்புகளில் ஒன்றாக உள்ளது என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், இத்தகைய மாற்றங்களுக்குப் பின்னால் உள்ள காரணங்கள் இன்றளவும் விவாதத்திற்கு உட்பட்டதாக உள்ளது என்றும் தெரிவித்தனர்.

கடந்த மில்லியன் ஆண்டுகளாக உடல் அளவு மாற்றங்களில்  காலநிலை மாற்றம், குறிப்பாக புவிவெப்பமயமாதலின் தாக்கங்கள் அதிகமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். மூளையின் அளவை தீர்மானிப்பதில் சுற்றுச்சூழல்  அற்ற காரணிகளின் பங்கு குறித்தும் மதிப்பிட்டுள்ளனர். எவ்வாறாயினும், பரிணாம வளர்ச்சியில் மிகவும் சிக்கலான பணிகளை (வேட்டையாடுதல்) மேற்கொள்ளும் போது மூளையளவு பெரிதாகும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மனித உடல் மற்றும் மூளையின் அளவு தொடர்ந்து பரிணாமம் பெற்று வருகிறது. மனித உடலமைப்பு இன்னும் வெவ்வேறு வெப்பநிலைகளுக்கு ஏற்ப மாறிவருகிறது. குளிர் பகுதிகளில் வாழும் மனிதர்களின் உடல்கள் பெரிதாக உள்ளது. தற்போதைய மனித இனத்தின் மூளை அளவு சுமார் 11,650 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனித இனத்தை விட குறைந்து காணப்படுகிறது என்றும் ஆய்வில் தெரிவிக்கப்படுகிறது.