முடி திருத்தும் தொழிலாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தக்கோரி மனு

சிறப்பு தடுப்பூசி முகாம் மூலம் கோவையில் முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு உடனடியாக தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று கோரி தமிழ்நாடு முடிதிருத்துவோர் தொழிலாளர்கள் நலச்சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கால் நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்த சலூன் கடைகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில், சலூன் தொழிலாளர்களுக்கு என பிரத்யேக முகாம் ஏற்பாடு செய்து கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முடிதிருத்துவோர் தொழிலாளர்கள் நலச்சங்கத்தினர் கொரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யக்கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் கூறுகையில், “கொரோனா ஊரடங்கால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளோம். சலூன் கடைகள் மூலமாக கொரோனா அதிகம் பரவுவதாக கூறினார்கள். இந்த சூழலில் தான் தற்போது கடைகள் திறந்துள்ளோம். எங்கள் வாழ்வாதாரத்திற்காக அச்சத்திலும் உழைக்கிறோம். கோவை மாவட்டத்தில் சுமார் 3 ஆயிரம் பேர் உள்ளோம். எங்களுக்காக பிரத்யேக தடுப்பூசி முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்”. என்றார்.

மனு அளிக்கும் போது சங்கத்தின் தலைவர் சசிகுமார், துணை செயலாளர் சதீஷ்குமார், கிளை செயலாளர் நந்தகுமார், இளைஞரணி அமைப்பாளர்கள் சரவணக்குமார், மோகன்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.