கோவையில் தடுப்பூசிக்காக விடிய விடிய காத்திருக்கும் மக்கள்

கொரோனா தொற்றின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகின்ற நிலையில் தற்பொழுது தான் அனைவரும் தடுப்பூசி செலுத்து கொள்ள விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்தநிலையில் தான் தடுப்பூசிக்கான தட்டுப்பாடும் நிலவி வருகிறது. காலையில் 10 மணிக்கு போடப்படும் தடுப்பூசிக்கு முதல் நாள் இரவு 10 மணி முதல் வரிசையில் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஒன்றிய அரசின் தரப்பில் தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து முழுமையான விளக்கமளிக்காமல் தற்போது மவுனம் சாதித்து வருகின்றன.  கோவையை பொறுத்தவரை ஒருவாரத்திற்கு மேலாக தடுப்பூசி செலுத்தும் பணியை நிறுத்தும் அளவுக்கு கடுமையான தடுப்பாடு ஏற்பட்டது.

கடந்த 2 தினங்களாக மீண்டும் தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு முகாமில் 300 முதல் 500 தடுப்பூசியே செலுத்தப்படுகிறது. இந்த தடுப்பூசிக்கு தினமும் 500 முதல் 800 பேர் வரை விடிய விடிய காத்திருக்கின்றனர்.

ஒரு வார கால இடைவெளிக்கு பிறகு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியதாலும், பணி செய்யும் நிறுவனங்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திய பிறகே பணிக்கு வர வேண்டும் என்று நிர்ப்பந்திப்பதாலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

மாவட்டத்தில் நேற்று அமைக்கப்பட்ட மையங்களில் இரவு 12 மணி முதலே குவியத்தொடங்கிய மக்கள், விடிய விடிய சாலையில் அமர்ந்து தடுப்பூசிக்காக காத்திருக்கின்றனர்.

ஏற்கனவே முகாமில் இருக்கும் சுகாதாரத்துறையினர் முறையா வழிகாட்டுதல் இல்லாமல் வாய்க்கு வந்த உத்தரவுகளை பிறப்பிப்பதாகவும், இதில் பல முறைகேடுகள் நடப்பதாகவும் குற்றம் சாட்டி ஆங்காங்கே போராட்டம் மற்றும் மறியலில் மக்கள் ஈடுபட்டு வரும் சூழலில், விடிய விடிய மக்களை சாலைகளில் நிற்க வைப்பது தேசிய அளவிலான பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.