உள்ளாட்சித் தேர்தல்: திமுகவின் புதிய வியூகம்

உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. புதிதாக மாவட்டங்களாக பிரிக்கப்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்க வேண்டியுள்ளது.

ஏற்கனவே, ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தும்போது விடுபட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையும் சேர்த்து நடத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. ஆனால், 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் மட்டுமே முதல்கட்டமாக நடத்தப்படுமா? அல்லது விடுபட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலும் சேர்த்து நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

முன்பு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்கும்போது அதிமுக ஆளும்கட்சி, திமுக எதிர்க்கட்சி. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறி திமுக ஆளும் கட்சி, அதிமுக எதிர்க்கட்சி. பொதுவாக ஊரகப் பகுதிகள் அதிமுகவுக்கு சாதகமாகவே இருக்கும் நிலையிலும், அதிமுக ஆளும் கட்சியாக இருந்தபோதும், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கையில் 50 சதவீதத்தை நெருங்கி திமுக வெற்றிப்பெற்றது.

தங்களுக்கு சாதகம் இல்லாத பகுதியில், எதிர்க்கட்சியாக இருக்கும்போதே திமுக அதிக வெற்றிகளை குவித்துள்ள நிலையில், இப்போது ஆளும் கட்சியாக இருக்கும்போது மீதமுள்ள 7 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தினால் திமுகவுக்கு மேலும் சாதகமாகவே இருக்கக்கூடும். மேலும், நகர்ப்புறங்கள் திமுகவுக்கு எப்போதும் சாதகமாக இருக்கும் நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலும் திமுகவுக்கு சாதகமாகவே இருக்கக்கூடும்.

நடந்து முடிந்த பேரவைத் தேர்தல் முடிவுகளை ஒப்பிட்டு பார்க்கும்போது 9 மாவட்டங்களில் திருநெல்வேலி, தென்காசி தவிர பிற மாவட்டங்களில் திமுக கை ஓங்கியுள்ளது தெளிவாக தெரிகிறது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 13 தொகுதிகளில் மூன்று தொகுதிகளிலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 11 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டும், அதேபோல விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 11 தொகுதிகளில் 4 தொகுதிகளை மட்டுமே அதிமுக கைப்பற்றியுள்ளது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 10 தொகுதிகளில் 4 தொகுதிகளை மட்டுமே அதிமுக கைப்பற்றியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் மட்டுமே அதிமுக பலமான நிலையில் உள்ளது. காரணம், அங்கு கணிசமாக வாழும் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் தங்களுக்கு 7 உள்பிரிவுகளையும் சேர்த்து தேவேந்திரகுல வேளாளர் என பெயர் மாற்றம் செய்து உதவிய பிரதமர் மோடி மீதான அபிமானத்தால் அதிமுகவுக்கு வாக்களித்துள்ளனர்.

அதேபோல பிற 7 மாவட்டங்களில் திமுகவுக்கு, பாமக துணையின்றி அதிமுகவால் போட்டி கொடுப்பது சிரமமான விஷயம் தான். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரலாற்றை ஆய்வு செய்தால் அதிமுக மோசமான தோல்வி அடைந்த 1996 பேரவைத் தேர்தல், அதிமுக ஆட்சியை இழந்தபோதும் கணிசமாக தொகுதிகளை பெற்றிருந்த 2006 பேரவைத் தேர்தல் ஆகியவற்றுக்குப் பிறகு நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் திமுகவுக்கு பெரிதாக போட்டியை அதிமுகவால் கொடுக்க முடியவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.

இந்த தேர்தல்களில் மதிமுக, தேமுதிக கட்சிகள் பலம் பெற்றன. இப்போது அதிமுக ஆட்சியை இழந்தபிறகும் 66 தொகுதிகளை கைப்பற்றியிருக்கும் நிலையில், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக எப்படி சாதிக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

நடந்துமுடிந்த பேரவைத் தேர்தலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் நாம் தமிழர் கட்சிக்கு, உள்ளாட்சித் தேர்தலில் கூடுதல் பலம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த தேர்தலைப் பொறுத்தவரை திருநெல்வேலி, தென்காசியில் பாஜக உதவியும், பிற 7 மாவட்டங்களில் பாமக உதவியும் தேவை. ஆனால், அதிமுக, பாஜகவை தாக்கும் நோக்கில் பாமக பேசி வருகிறது. அதேபோல முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சால் அதிமுக – பாஜக இடையே உரசல் தொடங்கியிருக்கிறது. இருப்பினும் கூட்டணி தொடரும் என ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் தயவு தேவை என்பதை மனதில் கொண்டுதான் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

குறிப்பாக சமீபத்தில் மருத்துவர் ராமதாஸ், பாஜக கூட்டணியில் இருந்ததால் இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் வாக்குகள் தங்கள் அணிக்கு கிடைக்கவில்லை என கருத்து தெரிவித்திருந்தார். அதேபோல அன்புமணி ராமதாஸ், ஓ.பன்னீர்செல்வத்தை விமர்சித்திருந்தார்.

அதேபோல அண்மையில் பேசிய தமிழக முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன், உள்ளாட்சித் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை முடிவு செய்யும் உரிமை மாநில பாஜகவுக்கு உள்ளது என கூறியிருந்தார். இதை வைத்து பார்க்கும்போது பேரவைத் தேர்தலோடு இல்லாமல், உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவும் கூடுதல் இடங்களை கேட்டு கடினமாக பேரம் பேசும் எனத் தெரிகிறது. இவ்வாறாக அதிமுக கூட்டணியில் தொடர்ந்து புகைச்சல் எழுந்துகொண்டே இருக்கிறது.

மாறாக, திமுக கூட்டணி பொறுத்தவரை வெற்றிக்கூட்டணி என்பதால் திமுக தலைமையின் கருத்துக்களை கூட்டணி கட்சிகள் அப்படியே செவிமடுத்து கேட்கின்றன. எந்த கூட்டணிக் கட்சியாக இருந்தாலும், திமுக தலைமை கொடுக்கும் இடங்களை விருப்பு, வெறுப்பு இன்றி பெற்றுக்கொள்ளும் மனப்போக்கில் தான் உள்ளன. பேரவைத் தேர்தலுக்கு முன்பு திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய இந்திய ஜனநாயக கட்சி கூட மீண்டும் திமுக கூட்டணியில் இணையவே அறிவாலய வாசலில் காத்துகிடக்கிறது.

இதை வைத்து பார்க்கும்போது 9 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் அதில் பெரும்பாலான இடங்களை திமுகவே கைப்பற்றும் சூழல் உள்ளது. மேலும், அதிமுக கூட்டணியில் பாமக நீடிக்குமா அல்லது தனித்து களமாட போகிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். பாஜகவை பொறுத்தவரை திருநெல்வேலி, தென்காசி, தவிர பிற மாவட்டங்களில் வேட்பாளர்களை நிறுத்துவது கடினம் என்பதால் அதிமுக கூட்டணி நீடிக்கும் வாய்ப்பு அதிகம்.

புதிய வியூகம்:

திமுகவை பொறுத்தவரை முதலில் விடுபட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி அதில் 90 சதவீத வெற்றியை பெற்றுவிட்டு, அடுத்த கட்டமாக நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தவே விரும்புவதாக தகவல்கள் வருகின்றன. பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தாலும், கொங்கு மண்டலத்தில் மொத்தமுள்ள 64 தொகுதிகளில் 22 தொகுதிகளை மட்டுமே வெற்றி பெற முடிந்தது. கோவை, சேலம், தருமபுரி மாவட்டங்களில் மிகப்பெரிய தோல்வியை திமுக சந்தித்துள்ளது.

எனவே, கொங்கு மண்டலத்தில் இருக்கும் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய 4 மாநகராட்சிகளையும் கைப்பற்றி தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு உருவாகியுள்ளது. மேலும், மேயர் பதவிக்கு நேரடி தேர்தலை நடத்தி கொங்கு மண்டலத்திலும் திமுக சாதித்துவிட்டது என்பதை உணர்த்த வேண்டிய நிலைக்கு திமுக தள்ளப்பட்டுள்ளது. இதனால், கொங்கு மண்டலத்தில் புதிய வியூகம் அமைத்து திமுக செயல்படத் தொடங்கியுள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களில் அதிமுகவில் இருக்கும் முக்கியப் புள்ளிகளையும், ம.நீ.ம. போன்ற கட்சிகளில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளையும் திமுகவில் இணைக்கும் பணியை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வசம் திமுக தலைமை ஒப்படைத்துள்ளதாக தெரிகிறது.

ஈரோடு மாவட்டத்தில் கோபியை சேர்ந்த அதிமுக முன்னாள் மாவட்டச் செயலர் சிந்து ரவிச்சந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் மரகதமணி தங்கவேல் உள்ளிட்டோரும், சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் தேர்தல் பொறுப்பாளராக பணியாற்றிய அதிமுக நிர்வாகி செல்லத்துரை உள்ளிட்டோர் திமுகவில் அண்மையில் இணைந்துள்ளனர்.

ம.நீ.ம.வில் இருந்து விலகிய மகேந்திரன் திமுகவில் இணைந்துள்ளார். அதேபோல கோவையில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஒருவர் திமுகவில் விரைவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இதுபோல இணைப்புப் படலம் முடிந்தபின்னர் தான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த திமுக வியூகம் அமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒருவேளை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை, ஊரக உள்ளாட்சித் தேர்தலுடன் சேர்த்து நடத்தினால் பாஜக தனித்து போட்டியிடக்கூட வாய்ப்பு கிடைக்கும். பாஜகவால் சென்னை, ஆவடி, ஓசூர், வேலூர், கோவை, ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகியவற்றில் வேட்பாளர்களை நிறுத்த முடியும் என்பதால் தனித்து களமாடும் வாய்ப்பு உள்ளது.

அதேநேரத்தில், பாமகவை பொருத்தவரை சென்னை, ஆவடி, வேலூர், சேலம் ஆகிய மாநகராட்சிகளில் மட்டுமே வேட்பாளர்களை நிறுத்த இயலும். அதிமுகவும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. ஒன்றிய அளவிலான நிர்வாகிகளுடன், அந்தந்த மாவட்டச் செயலர்களை கூட்டம் நடத்தி ஆலோசனை செய்யும்படி அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறாக திமுக, அதிமுக கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலுக்காக ஆயத்தமாகி வருகின்றன. மேலும், நாம் தமிழர் கட்சி உள்ளாட்சியில் அனைத்து உள்ளாட்சி பதவிகளுக்கும் வேட்பாளர்களை தயார்ப்படுத்திவிட்டது. குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி பகுதிகளில் நாம் தமிழர் கட்சிக்கு 8 சதவீத வாக்கு வங்கி உள்ளது. அதேபோல நகர்ப்புறங்களில் நாம் தமிழர் கட்சிக்கு கணிசமான செல்வாக்கு இருப்பதால் அனைத்து இடங்களிலும் போட்டியிடும் வாய்ப்பு உள்ளது.

அதேபோல மக்கள் நீதி மய்யத்தை பொருத்தவரை 9 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளில் செல்வாக்கு இல்லை. என்றாலும் நகர்ப்புற உள்ளாட்சி இணைந்து நடந்தால் அதில் போட்டியிடும் வலிமை ம.நீ.மவுக்கு உள்ளது. 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் நடந்தாலும் அதில் போட்டியிடும் மனநிலையில் தான் நடிகர் கமல் உள்ளார்.

அமமுக எவ்வித அரசியல் நகர்விலும் ஈடுபடவிலை என்றாலும், ஆடியோ அரசியல் நடத்தும் சசிகலா, சசிகலா பேரவை என்ற பெயரில் வேட்பாளர்களை நிறுத்தும் சூழல் உள்ளது. குறிப்பாக வன்னியர்களுக்கு எதிரான ஒருங்கிணைப்பை உருவாக்க சசிகலா முயற்சி செய்து வருவதால் இந்த 7 மாவட்டங்களில் சசிகலா பிற சமூகத்தினரை ஒருங்கிணைத்து வேட்பாளர்களை அறிவிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

மேலும், திருநெல்வேலி, தென்காசி பகுதியில் தனது சொந்த சமூகமான முக்குலத்தோர் சமூகத்தை வேட்பாளராக அறிவிக்கும் வாய்ப்பு உள்ளது. சசிகலா, சீமான் போன்றவர்களால் அதிமுகவின் வாக்குகள் மேலும் சிதறக்கூடிய வாய்ப்பும் உள்ளது. இதுவும் திமுகவுக்கு சாதகமாகவே மாறக்கூடும். கொரோனாவால் சிக்கித்தவிக்கும் தமிழகத்தில் இன்னும் சில வாரங்களில் உள்ளாட்சித் தேர்தல் திருவிழா களைகட்டப் போகிறது.

நேரடி தேர்தலே திமுகவுக்கு சாதகம்

இது குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கூறும்போது, கொங்கு மண்டலத்தில் 15 சதவீதமாக வாழும் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த எல்.முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவியும், 30 சதவீதமாக வாழும் கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்தை சேர்ந்த வானதி சீனிவாசனுக்கு தேசிய மகளிர் அணி பதவியை ஏற்கனவே அளித்ததுடன், இப்போது கே.அண்ணாமலைக்கு மாநிலத் தலைவர் பதவியை அளித்து முக்கிய அரசியல் நகர்வை பாஜக செய்துள்ளது.

இதனால், கொங்கு மண்டலத்தில் பாஜகவின் தயவு அதிமுகவுக்கு நிச்சயம் தேவை. ஒருவேளை பாஜகவை, அதிமுக கழற்றிவிட்டால் அதிமுகவுக்கு பக்கபலமாக இருக்கும் கொங்கு வேளாளர் கவுண்டர்கள் சமூக வாக்குகளை பிரிப்பதுடன், பிற சமூக வாக்குகளை அதிமுகவுக்கு எதிராக பாஜக திருப்பி விடக்கூடும். இதையெல்லாம் நன்கு உணர்ந்து தான் பேரவைத் தேர்தல் கூட்டணி தொடரும் என பாஜக விஷயத்தில் அதிமுக தலைமை மிகவும் கவனமாக உள்ளது.

மறைமுக தேர்தல் நடத்துவதை விட நேரடி தேர்தல் நடத்துவது தான் திமுகவுக்கு சாதகமாக இருக்கும். மறைமுக தேர்தல் நடத்தினால் 2006 பேரவைத் தேர்தலுக்குப்பின் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவின் பலவீனம் தெரியாமல் இருந்ததுபோல இப்போதும் தெரியாமல் போய்விடும். தேமுதிகவின் பலம் வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி அப்போது மறைமுக உள்ளாட்சித் தேர்தலை நடத்தினார்.

1996 பேரவைத் தேர்தலுக்குப்பின் நடந்த நேரடி உள்ளாட்சித் தேர்தல் போல நடத்தினால் அதிமுகவின் பலவீனம் நன்றாகவே தெரிந்துவிடும். இப்போது நேரடி தேர்தல் நடத்தும்போது நாம் தமிழர் கட்சி மிகப்பெரிய எழுச்சியைப் பெறும். சசிகலா, கமல் போன்றவர்கள் தங்களது பலத்தை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்கும். அதிமுகவின் பலவீனம் எளிதாக தெரிந்துவிடும். திமுக அரசு என்ன முடிவு எடுக்கிறது என்பதை பொறுத் திருந்து தான் பார்க்க வேண்டும் என்றார் ரவீந்திரன் துரைசாமி.