திமுகவின் தொண்டனாக பயணத்தை துவங்கியுள்ளேன்!

டாக்டர் மகேந்திரன் பேச்சு

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் நீதி மய்யத்தின் பலமான தூணாக திகழ்ந்த டாக்டர் மகேந்திரன் இப்போது திராவிட முன்னேற்ற கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

ஜூலை 8 ஆம் தேதி சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் மற்றும் மூத்த அமைச்சர்கள் முன்னிலையில் டாக்டர் மகேந்திரன் இணைந்ததுடன் அவர் தலைமையில் 78 நிர்வாகிகள், 11000க்கும் மேலான ம.நீ.ம மற்றும் பல கட்சி உறுப்பினர்களும் இணைய விருப்பம் தெரிவித்தனர்.

அவர்கள் முழு விவரங்கள் அடங்கிய ஒரு தொகுப்பு புத்தகத்தையும் மகேந்திரன் முதல்வரிடம் வழங்கினார்.

கழகத்திற்கு வலுசேர்ப்பது என் கடமை:

டாக்டர் மகேந்திரன் பேசும்போது, தான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் அத்தியாயத்தை பற்றி சிந்தித்து வந்த போது, அரசியலில் கொள்கையும் சித்தாந்தமும் சரியானதாக இருக்க வேண்டும் என்று உணர்ந்ததாகவும், 2 ஆண்டுகளுக்கு முன்பே திமுகவில் முக்கிய பொறுப்பில் உள்ள தன் நண்பர் ஒருவரிடம் “நான் இருக்கும் கட்சியின் எழுத்துக்கள் வேறாக இருந்தாலும், என் மனதில் உள்ள கொள்கை திமுகவின் கொள்கை தான்” என்று பேசியதை குறிப்பிட்டார்.

மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்பட வேண்டும் என எண்ணி 2 ஆண்டுகள் முன் அரசியலில் கால்பதித்ததையும், அதில் அண்மையில் ஏற்பட்ட இடர்பாடுகள் பற்றியும் குறிப்பிட்ட அவர், தான் எதிர்பார்த்த மாற்றத்தை இன்று மக்களுக்கு திமுக வழங்கி வருகிறது, எனவே அதில் ஒரு தொண்டனாக இணைந்து பணிசெய்ய தன்னை இணைத்துக்கொண்டதாக பேசினார்.

10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாவிட்டாலும், நாம் என்னவெல்லாம் கனவு கண்டோமோ அதை மிக சிறப்பாக முதல்வர் இந்த 2 மாதங்களில் செய்துவருகிறார் என பாராட்டி பேசினார்.

பத்திரிக்கையாளர்களிடம் மகேந்திரன் பேசுகையில், திமுகவில் மக்கள் பணி செய்வதற்கான சூழலும், செய்யும் பணிக்கு பாராட்டும் கிடைத்தால் போதும் எனவும், தமக்கு பொறுப்பு தருவது குறித்து தலைவர் முடிவெடுப்பார், அப்போது பார்த்து கொள்வோம் எனவும் பேசினார்.

கழகம், தலைவர் மக்களுக்கு செய்ய நினைக்கும் விஷயங்களை அவர்களுக்கு சென்று சேர்க்க வேண்டியது தன் கடமை, கழகத்திற்கு ஆதரவை தேடித்தர வேண்டியது தன் பணி என கூறினார்.

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வந்திருக்கிறார்:

மகேந்திரன் மற்றும் புது உறுப்பினர்கள் வருகை குறித்து முதலமைச்சர் பேசுகையில், “…தேர்தலுக்கு முன் இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் கோவையில் ஒரு மிகப்பெரிய வெற்றியை நாம் பெற்றிருக்க முடியும். கொங்கு மண்டலத்திலேயே மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்க முடியும்“

“ஆட்சி அமைக்கும் அளவுக்கு நாம் வெற்றி பெற்று இருந்தாலும், கொங்கு மண்டலத்தில் கோவை, சேலம் மாவட்டத்தில் எதிர்பார்த்த அளவுக்கு நாம் வெற்றியை பெற முடியாத அளவுக்கு போனதை எண்ணி நான் இன்னும் வருத்தப்படுகிறேன். நீங்கள் எல்லாம் இருந்து இருந்தால், மகேந்திரன் அப்பொழுதே வந்து சேர்ந்து இருந்தால், அந்த கவலையும் இப்போது இல்லாமல் போயிருக்கும். இப்போது ஒன்றும் குறைந்து போகவில்லை. வந்தாச்சு. இனி உங்கள் வேலையை பார்க்க போகிறீர்கள், மகேந்திரன் வேலையை பார்க்கப்போகிறார், இந்த கழகத்திற்கு பெருமை வந்து சேர போகிறது, இன்னும் செல்வாக்கு வரப்போகிறது” என கூறினார்.