திருநங்கைகளின் குறைகளை தீர்க்க சிறப்பு முகாம்

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளியில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் திருநங்கைகளுக்கான நலவாரிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, மாதாந்திர ஓய்வூதியம், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு பெயர் சேர்த்தல் நீக்குதல் மற்றும் கொரோனா தடுப்பூ சிறப்பு குறை தீர்க்கும் முகாம் சித்தாபுதூர் அரசு பள்ளியில் நடைபெற்றது.

இந்த சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் துவக்கி வைத்து பேசுகையில் திருநங்கைகள் வாழ்வாதாரம் மேம்படவும் அவர்களது சிரமங்களை களைய தமிழக அரசு சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். இதன் பின்னர் திருத்தம் செய்யபட்ட ஆவணங்கள் 10 திருநங்கைகளுக்கு வழங்கபட்டது.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து அவர் பேசியதாவது: திருநங்கைகளின் அடையாளம் புகைப்படங்கள் மாற்றம் செய்ய வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சிறப்பு முகாம் நடத்தப்படுவதாகவும், இந்த முகாம் மூலம் திருநங்கைகள் ஒரே இடத்தில் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, நலவாரிய கார்டு பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் முடியும் எனவும் தெரிவித்தார்.

திருநங்கைகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவும், ஏற்கனவே வழங்கப்பட்ட வீட்டுமனைகள் ஆக்கிரமிப்பில் இருந்தால் அதை மீட்டுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இந்த சிறப்பு முகாமில் பயிற்சி ஆட்சியர் சரண்யா மாவட்ட வருவாய் ஆய்வாளர் ராமதுரை முருகன் சமூக நலத்துறை அலுவலர் தங்கமணி ஆகியோர் உடன் இருந்தனர்.