டாப்சிலிப் யானைகள் முகாமில் அமைச்சர் ஆய்வு

கோவை மாவட்டம், ஆனைமலை டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில் யானைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் வனத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது, தமிழகத்தில் பாகன்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்ட முதல் யானைகள் முகாமாக கோழிகமுத்தி உள்ளது. அதன்படி நேற்று யானை பாகன்ங்கள், உதவியாளர்கள் என 60 பேருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாகன்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வனத்துறையில் வேட்டை தடுப்பு பாதுகாவலர் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு வனப்பகுதியில் வனவிலங்குகள் தினசரி நடமாட்டத்தை கண்காணித்து வனத்தினை ஒட்டியுள்ள குடியிருப்பு வாசிகளுக்கு தகவல் அளித்து வருகின்றது. இதனால் மனித வனவிலங்கு மோதல்கள் ஏற்படுவது தவிர்க்கப்பட்டு வருகின்றது என அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், ஆனைமலை டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில் வனவிலங்கால் பாதிக்கப்பட்டுள்ளவருக்கு ரூ.3.50இலட்சம் நிவாரண நிதியும், வேட்டை தடுப்பு பாதுகாவலருக்கான உடைகளையும் மற்றும் வன அலுவலர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களையும் வழங்கியும், வனத்துறை பாதுகாவலர்களுக்கு தடுப்பூசி போடப்படுவதையும், டாப்சிலிப் அரசு வன உண்டு உரைவிடப் பள்ளியும் வனத்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

இவ்ஆய்வின்போது பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், கூடுதல் முதன்மை வன பாதுகாவலர் அன்வர்தீன், பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியலிங்கம், மாவட்ட வன அலுவலர் ஆரோக்கிய சேவியர், உதவி வன பாதுகாவலர் (பயிற்சி) திரு.பிரசாந்த், உதவி வன பாதுகாவலர் செல்வம் மற்றும் வனத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.