ஐந்து மாதக் குழந்தையின் ஆபத்தான ரத்த பாதிப்பை சரி செய்ய ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை!

கே.எம்.சி.ஹெச் மருத்துவக் குழு சாதனை!!

மேற்குத் தமிழகத்திலேயே முதல்முறையாக பல மருத்துவ சாதனைகளைச் செய்திருக்கிறது கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை. அந்த சாதனைப் பட்டியலில் இன்னொரு மைல்கல், ஐந்து மாதக் குழந்தையான சிறுவன் வியனுக்கு 17.04.2021 அன்று செய்யப்பட்ட அறுவை சிகிச்சை. உயிருக்கு ஆபத்தான பிரச்சனையுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வியன், ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு பூரண நலம்பெற்று வீடு திரும்பியிருக்கிறான்.

ஒருவரின் எலும்பு மஜ்ஜை, தொப்புள் கொடி போன்ற உறுப்புகளிலிருந்து ஸ்டெம் செல்கள் எடுத்து சேகரிக்கப்படுகின்றன. சில வகை புற்றுநோய்கள், தாலசீமியா போன்ற ஆபத்தான பாதிப்புகளுடன் வரும் நோயாளிகளுக்கு ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை செய்து இவை செலுத்தப்படுகின்றன. இந்த சிகிச்சையால் அவர்கள் நலம் பெறுகிறார்கள். ஒரே ரத்தப்பிரிவு இருப்பவரிடம் தானம் பெற்றே சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளைச் செய்ய முடியும். ஆனால், வேறு ரத்தப்பிரிவு இருப்பவரின் ஸ்டெம் செல்களை செலுத்தியும் ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு மருத்துவத் தொழில்நுட்பம் மேம்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட ஓர் அரிதான அறுவை சிகிச்சையே வியனுக்கு செய்யப்பட்டது.

பிறந்து 2 மாதம் 19 நாட்கள் ஆகியிருந்த பச்சிளம் குழந்தையாக கே.எம்.சி.ஹெச் குழந்தைகள் தீவிர சிகிச்சைப்பிரிவில் வியன் கொண்டுவந்து சேர்க்கப்பட்டான். அப்போது குழந்தைக்கு ரத்த அணுக்கள் அபாயகரமான அளவில் குறைவாக இருந்தன. தீவிர நோய்த்தொற்றும் இருந்தது. உயிருக்கு ஆபத்தான அதிர்ச்சி நிலையில் குழந்தை இருந்தது.

குழந்தைக்குப் பரிசோதனைகள் செய்தபோது, Hemophagocytic lymphohistiocytosis (HLH) எனப்படும் பிறவிக் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இது நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும் குறைபாடு. நம் உடலில் தொற்றும் நோய்க்கிருமிகளை அழிப்பது, நோய் எதிர்ப்பு செல்களின் வேலை. இந்தக் குறைபாடுள்ள குழந்தைக்கு நோய் எதிர்ப்பு செல்கள் அளவுக்கு அதிகமாக உருவாகும். அவை பலவீனமாகவும் இருக்கும். இவை கிருமிகளை எதிர்க்காமல், நம் உடலில் இருக்கும் அணுக்களையே எதிர்க்கும். இவற்றில் இருக்கும் ஃபாகோசைட்ஸ் (phagocytes) என்ற பகுதி, நம் ரத்தத்தில் இயல்பாக இருக்கும் சிவப்பணுக்கள், வெள்ளை அணுக்கள், தட்டணுக்கள் ஆகியவற்றையும் சூழ்ந்துகொள்ளும். இதனால் ரத்த அணுக்களை உற்பத்தி செய்யும் எலும்பு மஜ்ஜை செயலிழக்கும். உரிய நேரத்தில் சிகிச்சை தராவிட்டால், இது உயிருக்கே ஆபத்தாக முடியும்.

மருத்துவ சிகிச்சை மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை இயல்பாக மாற்றுவதும், அதைத் தொடர்ந்து ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதுமே இந்தப் பிறவிக் குறைபாட்டுக்குத் தீர்வு.

குழந்தைக்கு சிகிச்சையை ஆரம்பித்தபோது ஒரு திடீர் பிரச்சனை ஏற்பட்டது. வியனின் வலது தொடை இடுக்கில் நோய்த்தொற்று இருந்து, அது வயிற்று உட்புறச்சுவர் வரை பரவியது. அதற்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை பற்றி குழந்தையின் பெற்றோரிடம் டாக்டர் ராஜசேகர் திருஞானம் விவரித்தார். ஆரோக்கியமான கொடையாளரிடமிருந்து ஸ்டெம் செல்களை தானமாகப் பெற்று, குழந்தைக்குப் பொருத்த வேண்டும். பொருத்தமான கொடையாளரிடம் இருந்து ஸ்டெம் செல்களைத் தானமாகப் பெற்று இதைச் செய்யலாம். இதற்கு பிலிகி (Human Leukocyte Antigens) பொருத்தமாக இருக்கிறதா என்பது சோதிக்கப்படும். துரதிர்ஷ்டவசமாக 30 சதவிகித நோயாளிகளுக்கே இப்படிப் பொருத்தமான கொடையாளர்கள் கிடைக்கிறார்கள்.

மற்றவர்களுக்கு, பொருத்தமில்லாத கொடையாளியின் ஸ்டெம் செல்களே செலுத்தப்படும். இந்தப் பொருத்தமின்மையை ஈடுசெய்ய சில மருந்துகள் செலுத்தப்படும். இது மிகவும் சிக்கலான சிகிச்சை முறை. இதில் புதிய ஸ்டெம் செல்களை உடல் ஏற்றுக்கொள்ளாமல் நிராகரிக்கும் அபாயமும் உண்டு; நோய்த்தொற்றும் ஏற்படக்கூடும். உடலில் ஏற்கெனவே இருக்கும் ஸ்டெம் செல்கள், புதிய ஸ்டெம் செல்களை கிருமிகளாகக் கருதி எதிர்த்து அழிக்கவும் கூடும்.

குழந்தை வியனுக்கு சகோதர, சகோதரிகள் இல்லை. பொருத்தமான ஸ்டெம் செல்களைத் தருவதற்குக் கொடையாளர்களும் இல்லை. வேறு வழியின்றி, அவரின் தந்தையுடைய ஸ்டெம் செல்களை சேகரித்து செலுத்த முடிவு செய்யப்பட்டது. இதை வியனின் உடல் நிராகரிக்காமலும் எதிர்க்காமலும் இருக்க வேண்டும். நோய்த்தொற்றும் ஏற்படக்கூடாது. அதற்கு, ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்பும் பின்பும் சில மருத்துவ நடைமுறைகள் செய்ய வேண்டும். ஆனால், பச்சிளம் குழந்தையின் உடல் இதைத் தாங்காது.

எனவே, மருத்துவர்கள் வேறு நடைமுறையைப் பின்பற்ற முடிவு செய்தனர். வியன் தந்தை உடலிலிருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம் செல்களில் டி லிம்போசைட்ஸ் மற்றும் பி லிம்போசைட்ஸ் ஆகியவை அகற்றப்பட்டன. இப்படி மாற்றம் செய்யப்பட்ட ஸ்டெம் செல்களைக் குழந்தைக்குச் செலுத்தினால், எந்த பாதிப்பும் ஏற்படாது. சிக்கலான இந்த நடைமுறை மிக நேர்த்தியாகச் செய்யப்பட்டு, 2021 ஏப்ரல் 17 அன்று வியனுக்கு ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மிக அரிதான இந்த சிகிச்சையை கே.எம்.சி.ஹெச் மருத்துவர்கள் குழு வெற்றிகரமாகச் செய்து முடித்தது.

மூன்று மாத தீவிர சிகிச்சைக்குப் பிறகு நலம்பெற்று வீடு திரும்பினான் குழந்தை வியன். கே.எம்.சி.ஹெச் செயல் இயக்குநர் டாக்டர் அருண் பழனிசாமி, ரத்த சிகிச்சை மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜசேகர் திருஞானம், குழந்தைகள் நல நிபுணர் டாக்டர் அஸ்வத் துரைசாமி, குழந்தைகள் நல அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். நாக குமரன், குழந்தைகள் நல தீவிர சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் முல்லை பாலாஜி, டாக்டர் விக்னேஸ்வரன், டாக்டர் கவிதா ஜோசப், மதிப்புக்குரிய செவிலியர்கள் ஆகியோர் குழந்தையை அன்புடன் வழியனுப்பி வைத்தனர்.

மேற்குத் தமிழகத்திலேயே முதல்முறையாக இதேபோன்ற பல சாதனைகளைச் செய்துள்ளது கே.எம்.சி.ஹெச். கடந்த 2012 செப்டம்பரில், தாலசீமியா நோயால் பாதிக்கப்பட்டிருந்த தனுஷ் என்ற சிறுவனுக்கு ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை தரப்பட்டது. தமிழகத்தின் மேற்கு மண்டல மருத்துவமனை ஒன்றில், பிலிகி (human leukocyte antigens) பொருத்தமாக உள்ள கொடையாளரிடமிருந்து பெறப்பட்ட ஸ்டெம் செல்களைச் செலுத்தி செய்யப்பட்ட முதல் ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை அது. 2015 ஜூன் மாதம் ரத்தப் புற்றுநோய் தாக்கிய லோகநாதன் என்பவருக்கு, ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை தரப்பட்டது. பொருத்தமில்லாத கொடையாளரிடமிருந்து ஸ்டெம் செல் தானம் பெற்று செய்யப்பட்ட முதல் ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை அது. 2016 ஏப்ரல் மாதம் இதேபோன்ற ஆபத்தான சிகிச்சை, யுகன் என்ற குழந்தைக்கும் முதல்முறையாக செய்யப்பட்டது.

அரிதான பிரச்சனைகளுக்கும் உலகத்தரமான சிகிச்சை தந்து குணப்படுத்தும் நேர்த்தியான மருத்துவ நிபுணர்கள் குழு கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் இருப்பது பாராட்டிற்குரியது.