பிளஸ் 2 தேர்வும், பெருங்குழப்பமும்!

தமிழகத்தில் உள்ள அனைத்து பிளஸ் 2 படிக்கும் மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும், ஆசிரியர்களும் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். முன்பு பிளஸ் 2 தேர்வு எப்போது என்ற கேள்வி இருந்து வந்தது. இப்போது மத்திய அரசின் சிபிஎஸ்சி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன. ஆனால் எந்த அடிப்படையில் என்ற முழு தெளிவும் இல்லாத நிலை தான் நீடிக்கிறது. அவர்களின் மதிப்பெண் குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன. உயர்கல்வி நிலையங்களில் சேர்வதற்கான தகுதிகள், சேர்க்கை முறை குறித்து பலருக்கும் பல ஐயங்கள் உள்ளன.

இந்த நிலையில் தமிழக அரசின் சார்பில் பல்வேறு வகையான நிலைகளில், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் கருத்து கேட்பு கூட்டங்கள் நடை பெற்று வருகின்றன. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது இங்கு கோவிட் பெருந்தொற்றின் தாக்கம் இன்னும் அதிகமாகவே இருக்கிறது. இந்த நிலையில் தமிழக அரசு பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு நடத்துவதா வேண்டாமா என்று முடிவு செய்ய வேண்டும். நடத்தினால் இப்போதுள்ள நிலையில் என்னென்ன நடவடிக்கைகளை கையாள வேண்டும் என்று யோசித்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

அத்தோடு மத்திய அரசின் உயர்கல்வி நிலையங்களில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு குறித்த ஒரு தீர்க்கமான முடிவு செய்து கொள்ள வேண்டும். பிளஸ் 2 தேர்வு நடத்தவில்லை என்றால் மதிப்பெண்கள் கொடுப்பது, உயர்கல்வி நிலையங்களில் சேர்க்கை என்பது குறித்து தெளிவான முடிவு எடுத்து நடைமுறைப்படுத்த வேண்டும். ஏனெனில் இது வெறும முடிவாக இருக்கப் போவதில்லை. இந்த கொள்கை முடிவு ஒன்பது லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முடிவாக அமையப் போகிறது.

குறிப்பாக அரசுப் பள்ளிகளில் பன்னிரண்டு ஆண்டுகள் படித்து விட்டு இப்போது நடைபெறும் சிக்கல்களால் உயர்கல்வி வாய்ப்பை இழந்தால் அது அவர்களின் வீட்டுக்கும், நாட்டுக்கும் பேரிழப்பு ஆகும். கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ன முடிவு செய்யப் போகிறது என்பதை தேசமே உற்று கவனித்துக் கொண்டு இருக்கிறது.