தேவைப்பட்டால் ஊரடங்கு நீட்டிக்கப்படும் – முதல்வர் மு.க ஸ்டாலின் `

தேவைப்பட்டால் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்றும் ஊரடங்கினால் தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதாகவும் முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் நேமம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

உலகளாவிய டெண்டர் கோரப்பட்டு நேரடியாக தடுப்பூசி வாங்க உள்ளதால் இன்னும் சில மாதங்களில் தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசி கிடைக்கும். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் கொரோனாவினால் ஏற்படும் பாதிப்பு பெரிய அளவில் இருக்காது எனவே தடுப்பூசி போடுவதை மக்கள் இயக்கமாக மாற்ற திட்டமிட்டுள்ளோம். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 2.84 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 2 வாரத்தில் தடுப்பூசி வீணாக்குவது ஒரு சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றை தடுப்பதற்காக தான் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும். மக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். முழு ஊரடங்கினால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் குறையும் தொற்று குறைந்து வருகிறது. எனக் கூறியுள்ளார்.