அரசு கலைக் கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையம்

கோவை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கைகள் அனைத்தும் நிரம்பி உள்ளதால் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் 138 ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கைகளுடன் சிறப்பு கொரோனா சிகிச்சை பிரிவு அமைக்கும் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.

கோவையில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து, தினசரி மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் பெரும்பாலானோருக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளுக்கு தட்டுப்பாடு தொடர்ந்து வருகிறது.

பெரும்பாலான மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் அனைத்தும் நிரம்பிய நிலையிலேயே காணப்படுகின்றன. அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை பிரிவில் உள்ள 717 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் நிரம்பிய நிலையிலேயே உள்ளன. இதனால் மருத்துவமனை வளாகத்தில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் காத்திருப்பதை தவிர்க்க அமைக்கப்பட்ட ஜீரோ டிலே வார்டில் உள்ள 15 படுக்கைகளும் நிரம்பி உள்ளதால், கோவை அரசு மருத்துவமனைக்கு தனியார் தொண்டு நிறுவனங்களால் வழங்கப்பட்ட ஆக்சிஜன் வசதி கொண்ட 2 பேருந்துகளில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகின்றன.

இருப்பினும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் நோயாளிகளின் எண்ணிக்கையை விட வைரஸ் தொற்று பாதித்து மூச்சுத் திணறலுடன் சிகிச்சைக்கு வருவோர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், நோயாளிகள் ஆம்புலன்ஸ் வாகனங்களில் காத்திருக்கும் நிலை தொடர்ந்து வருகிறது. காத்திருப்பை தவிர்க்க மருத்துவமனைக்கு, அருகில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் 138 ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பு கொரானா சிகிச்சை பிரிவு அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

விரைவில் அனைத்துப் படுக்கைகளும் ஆக்சிஜன் வழங்குவதற்கான பணிகள் நிறைவடைந்து, மூச்சுத் திணறலுடன் வரும் நோயாளிகள் இங்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.