குற்றாலத்தில் வாரநாட்களில் 750 பேருக்கு மட்டுமே அனுமதி

கோவை குற்றாலத்தில் இனி வாரநாட்களில் 750 சுற்றுலா பயணிகளுக்கும், விடுமுறை நாட்களில் 1000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவையில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கும் கோவை குற்றாலத்தில் சித்திரை முதல்  நாளில் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் திரண்டனர். ஆனால், கொரோனா பரவலை தடுக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

இனிமேல் விடுமுறை நாட்களில் கோவை குற்றாலத்தில் 1,000 பேரும் மற்ற வார நாட்களில் தினமும் 750 பேரும் அனுமதிக்கப்படுவர். இவ்வாறு வருபவர்களை 5 குழுக்களாக தினமும் உள்ளே அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

காலை 9 மணி முதல் 10 மணி வரை 150 பேர், அதேபோல காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை, நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை, பிற்பகல் 1.30 மணி முதல் 2.30 மணி வரை, பிற்பகல் 3 மணி முதல் 3.30 மணிவரை தலா 150 பேர் அனுமதிக்கப்படுவார்கள்.

இதே விடுமுறை நாட்களில் ஒரு குழுவிற்கு 200 பேர் அனுமதிக்கப்படுவார்கள். இங்கு வரும் ஒவ்வொரு சுற்றுலாப் பயணிக்கும் நுழைவுக்கட்டணம் செலுத்தும் முன்பு வெப்பநிலைமானியைக் கொண்டு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும்.

சுற்றுலா பயணிகள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும். முகக்கவசம் இல்லாமல் வருபவர்கள் முகக்கவசத்தை வாங்கி அணிந்த  பிறகே உள்ளே  அனுமதிக்கப்படுவார்கள். சாடிவயலில் இருந்து கோவை குற்றாலம் செல்லும் வாகனத்தில் ஏறும் முன்பு, அங்கேயும் ஒவ்வொரு பயணிக்கும் வெப்பநிலைமானியைக் கொண்டு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும்.

பின்பு சானிடைசரைக் கொண்டு கைகளை சுத்தம் செய்து கொண்டு வாகனத்தில் ஏற வேண்டும். இந்த விதிகளை கடைப்பிடித்து சுற்றுலா பயணிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வனத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

இதேபோல், கோவை மேற்குதொடர்ச்சி மலையில் பில்லூர் அணைக்கு அருகில் அமைந்துள்ள பரளிக்காட்டுக்கு சூழல் சுற்றுலா வர சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தலா 120 சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

பரளிக்காடு செல்ல விரும்புவோர் https://coimbatorewilderness.com/என்ற இணையதளத்தில் ஆன்லைனில் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். கடந்த மார்ச் 13-ம் தேதி மீண்டும் தொடங்கிய சூழல் சுற்றுலாவுக்கு இதுவரை 1,000 பேர் வருகை புரிந்துள்ளனர்.