தென்னிந்திய வர்த்தக சபை அரங்கில் சட்டமன்ற வேட்பாளர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி

கோவை அவினாசி சாலையில் உள்ள தென்னிந்திய வர்த்தக சபை அரங்கில் சட்டமன்ற வேட்பாளர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தெற்கு சட்டமன்ற காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், அமுமுக வேட்பாளர் சேலஞ்சர் துரை, சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் நா.கார்த்திக், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மகேந்திரன், வடக்கு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜூனன் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் பேசுகையில், மக்களின் அடிப்படை தேவைகளான சாலை, குடிநீர் வசதி தீர்த்து வைக்கபடும் எனவும் பாதுகாப்பு நலன் கருதி தொகுதி முழுவதும் சிசிடிவி அமைக்க நடவடிக்கைகள் எடுக்கபடும் என்றார். மேலும், தொழில்துறையினருக்கு முக்கியதுவம் அளிக்கும் வகையில் டெக் பார்க் அமைக்கப்படும் எனவும் இங்கு ஏராளமானோர் தங்க நகை பட்டறை தொழிலில் ஈடுபட்டு உள்ளனர். டெக் பார்க்  அமைக்கபட்டால் தங்க நகை தொழிலை மேம்படுத்த முடியும் என்றும் இதற்கான போதிய இடவசதி உள்ளதாகவும் தெரிவித்தார். கோவையில் உள்ள அரசு மருத்துவமனை 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். போதிய அளவு இடவசதி இல்லாமல் இருக்கிறது. ஆகையால் இரண்டாவது அரசு மருத்துவமனை அமைய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்றார்.

இதன் பின்னர் பேசிய சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்தி கோவையில் ஏற்படுத்தபட்டுள்ள அனைத்து கட்டமைப்பு வசதிகள் திமுக ஆட்சி காலத்தில் செய்யபட்டது என தெரிவித்தார். 2007ம் ஆண்டு 62 ஏக்கர் பரப்பளவில் டைடல் பார்க் அமைக்கபட்டு பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகவும் இந்த நிறுவனங்களில் 12,000க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருவதாக தெரிவித்தார். பல்லடம் பகுதியில் ஜவுளி பூங்கா, உலக செம்மொழி மாநாட்டின் போது அவினாசி சாலையில் திட்ட சாலைகள் என ஏராளமான பணிகள் மேற்கொள்ளபட்டதாக கூறிய அவர் திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர் என கூறினார். திமுக ஆட்சி அமைந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வானால் கிடப்பில் போடப்பட்டு உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படும் எனவும் சூயட் ஒப்பந்தம் ரத்து செய்யபடும் எனவும் தெரிவித்தார். சிறு குறு தொழில் புரிபவர்கள் பயன் பெறும் வகையில்  பாலமாக இருந்து 24 மணி நேரமும் செயல்படுவேன் எனவும் இங்குள்ள வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து தேவைகளை கிடைக்க பாடுபடுவேன் என்றார்.

மக்கள் நீதி மய்ய வேட்பாளர் மகேந்திரன் பேசும்போது, போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணமே இங்கு விவசாயம் செழிக்கவில்லை எனவும் இங்கு விவசாயம் சிறக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன எனவும் தெரிவித்தார். இங்கு ஆளும் அரசுகளும் ஆண்ட அரசுகளும் குளங்களை பரமரிக்கவில்லை என்றும் குறைந்த அளவு பணத்தை செலுத்தி மீன் பிடித்து வருவதாக கூறினார். தொகுதியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த தனக்கு ஒரு வாய்ப்பு வழங்குமாறும் தொழில் துறையினரிடம் கேட்டு கொண்டார்.

தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி பேசுகையில், கடந்த 2011ல் மைலாப்பூரில் போட்டியிட்டாலும் எனக்கு சொந்த ஊர் என்பது கோவை தான் என்றார். கடந்த முறை கோவையில் போட்டியிட்டபோது 23% வாக்குகள் பெற்றேன் எனவும் கடந்த ஐந்து வருடங்களாக மக்கள் சேவை மையம் துவங்கி அனைத்தும் மக்களுக்கும் பல்வேறு சேவைகள் செய்து வருவதாக தெரிவித்தார். ஜி.எஸ்.டி வரி பதிவு செய்வதில் சிரமம் இருந்த தொழில்துறையினர் 300 பேருக்கு இலவசமாக பதிவு செய்து கொடுத்ததாகவும், நீட் தேர்வு கொண்டு வரப்பட்டபோது எதிர்ப்பு கிளம்பிய நேரத்தில் மாநகராட்சி பள்ளியில் பயின்ற மாணவர்களை தயார்படுத்தியதாகவும், ஒரே நாளில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தி 1600 பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்ததாகவும் கூறினார். தொகுதியில் தந்தை இல்லாத 100 பெண் குழந்தைகளை தத்து எடுத்து அவர்களுக்கு தேவையான அனைத்தும் செய்து வருவதாகவும் கோவையில் டிபன்ஸ் காரிடர் அமைய தனது பங்கும் சிறிது உள்ளது என்றவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டால் தொழில்துறையின் வளர்ச்சிக்கு மத்திய மாநில அரசின் பாலமாக செயல்படுவேன் எனவும் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலின் போது கோவையை சேர்ந்த பல்வேறு தொழில் துறையினர் கலந்து கொண்டனர்.