தொடங்கியது தேர்தல் திருவிழா

தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வந்து, கூட்டணிகள் அமைந்து தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டது. சென்ற ஆண்டு இதே மார்ச் மாதம் கொரோனா நோய்த் தொற்று பரவத் தொடங்கி, உலகமே பாதிக்கப்பட்டு பல்வேறு சம்பவங்கள் நடந்து முடிந்து விட்டன. தமிழகம் உட்பட இந்தியா முழுவதும், மேலும் உலகம் முழுவதும் இன்னும் கோவிட் 19 பாதிப்பில் இருந்து முழுமையாக மீளவில்லை என்றாலும் மிகக் கடுமையான பாதிப்புகள் இன்றி, இந்தியா குறிப்பாக தமிழகம் அதிலிருந்து மீண்டு வந்திருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கும் ஒரு செய்தி. அதிலும் சட்டமன்றத் தேர்தல் நடத்தும் அளவு, நிலைமை மேம்பட்டு இருப்பது கூடுதல் மகிழ்ச்சி தரும் விஷயம்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் இந்த முறை பல புதிய நிலைமைகளுடன் நடைபெறுகிறது. முதலாவதாக வெகு விமர்சையாக, வண்ண மயமாக நடைபெறும் இந்த ஜனநாயகத் திருவிழா, கோவிட் 19 எச்சரிக்கை காரணமாக சிறிது அடக்கி வாசிக்கப்படுகிறது. இரண்டாவதாக கடந்த  பத்தாண்டுகளாக தமிழக அரசியலில் இருபெரும் ஆளுமைகளாக இருந்த கருணாநிதியும், ஜெயலலிதாவும் இல்லாமல் நடைபெறும் தேர்தல் மூன்றவதாக இளைஞர்கள் அதிகம் பேர் வாக்களிப்பார்கள், அதுவும் பெரிய அளவில் அரசியல் ஈடுபாடு இல்லாதவர்கள் என்பது ஒரு செய்தி. நான்காவதாக இப்போது அமைந்திருக்கும் கூட்டணியில் கட்சிகள் இடம் பெற்றிருக்கும் விதம். அதாவது இருபெரும் கட்சிகளான அதிமுகவும், திமுகவும் எதிரும், புதிருமாக இந்த சட்டமன்றத் தேர்தலில் மோதுகின்றன. வழக்கம்போல, அதன் ஆதரவு கட்சிகள் கூட்டணியில் உள்ளன. ஆனால் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகள் அடக்கி வாசிக்கும்படி தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் அதிமுக, திமுக இரண்டுமே தங்கள் ஆளுமையை நிரூபித்து உள்ளன. தேசிய கட்சிகளான பாஜகவும், காங்கிரசும் 25 தொகுதிகளைத் தாண்டவில்லை. மற்ற பல்வேறு கட்சிகளுக்கும் கிடைத்தது ஒற்றை இலக்கம் தான். இதன் மூலம் அவர்களின் எதிர்கால ஆதரவு இல்லாமலே, சொந்தமாக தொகுதிகளை வென்றெடுக்கும் முனைப்பு அதிமுக, திமுக என்ற இரண்டு கட்சிகளிடமும் தெரிகிறது. கடந்த காலத்தில் நடைபெற்ற அரசியல் குழப்பங்களை வரும் காலத்தில் தவிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதைப் போலவே இந்த முறை கிட்டத்தட்ட ஐந்து (தேமுதிக தனியாக நின்றால் ஆறு) அணிகள் தேர்தல் களத்தில் இறங்கி உள்ளன. அதிமுக, திமுக என்ற இருபெரும் கூட்டணி கட்சிகளைத் தவிர நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்ய கட்சிக் கூட்டணி, டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி கூட்டணி, சீமானின், நாம் தமிழர் கட்சி ஆகியவை வேட்பாளர்களை அறிவித்து களத்தில் உள்ளன. விஜயகாந்தின் தேமுதிகவின் நிலை முழுமையாக தெரியவில்லை.

என்ன தான் ஜனநாயகத் திருவிழாவாக இருந்தாலும், மக்களே  தேர்ந்தெடுத்தாலும் எதிர்காலத்தில் அமையும் அரசின் திட்டங்கள் மற்றும் நடைமுறைகளால் பாதிக்கப்படப் போவதும், பயனடையப் போவதும் மக்கள் தான். அந்த வகையில் அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்து வாக்களிக்க வேண்டியது மக்களின் கடமை.

மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் இரண்டு கட்சிகளான பாஜகவும், அதிமுகவும் ஒரணியில் உள்ளன. அவர்கள் தங்கள் சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டு வருகிறார்கள். அதேபோல நிறைவேறாத திட்டங்கள் மற்றும்  குறைகளைச் சுட்டிக்காட்டி திமுக வாக்கு கேட்டு வருகிறது. ஆனால் மக்கள் மத்தியில் பெரிய அளவில் சமூகப் பணியில் ஈடுபடாத மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் கட்சி போன்றவை தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவது ஜனநாயக உரிமை என்றாலும் நடைமுறை சாத்தியம் எவ்வளவு தூரம் பயனளிக்கும் என எண்ணிப்பார்க்க வேண்டும். அவர்கள் பெறும் வாக்குகள் அவர்களின் கட்சி வளர்ச்சிக்கு கண்டிப்பாக பயனளிக்கும், மக்களுக்கு பயனளிக்குமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இது குறித்த ஒரு சிந்தனை மக்களிடம் பரவ வேண்டும். பல ஆண்டுகள் களப்பணியில், சமூகப் பணியில் ஈடுபட்ட பிறகு, தேர்தல் களத்தில் இறங்குவதற்கும், கட்சி தொடங்கி சில மாதங்களில் முதலமைச்சர் கோஷம் போடுவதற்கும் பெரிய வேறுபாடு உள்ளது. இதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

அதைப் போலவே தேர்தல் காலத்தில் செலவழிக்கப்படும் பணம் பல கோடி ரூபாய் புரளும் ஒரு திருவிழாவாக நமது தேர்தல் மாறி வருகிறது. அதன் எதிரொலியாக பல கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும், வாக்குறுதிகளும் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக இல்லத்தரசிகளுக்கு மாத உதவித் தொகை உள்ளிட்ட இலவசங்கள், கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி போன்றவை உள்ளன.

அறிவார்ந்த முறையில் சிந்திக்கும் மக்களைக் கொண்ட நாடு தான் முன்னேற முடியும். அந்த வகையில் மக்கள் சிந்தித்து முடிவெடுத்து செயலாற்ற வேண்டும். எந்த கட்சி அல்லது கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும் மக்கள் நலன் பாதுகாக்கப்பட வேண்டும், வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்பதே கொள்கையாக இருக்க வேண்டும்.

பல வகையிலும் சாதனை படைத்த நம் தமிழ்நாடு, வரும் காலத்தில் அனைத்திலும் முதன்மை பெறுமளவு ஆட்சி அமைய வேண்டும். இன்று சுமார் ஐந்து லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையால் தள்ளாடும் தமிழகம் அதிலிருந்து மீண்டு சாதனை படைக்க வேண்டும். அதற்கான நுழைவாயிலாக இந்த தேர்தல் அமைய வேண்டும்.

ஏனென்றால் எப்போதும், “மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!