விருதுக்கு பெருமை சேர்ப்பவர் கே.பி.ஆர்

நாணயம் விகடன் சார்பில் செல்ஃப் மேட் ஆந்த்ரபிரனார்விருது வழங்கி கௌரவிப்பு

நவீன இந்தியாவின் கோவில்கள், தொழிற்சாலைகள் என்றார் ஜவஹர்லால் நேரு. அதற்குக் காரணம் இரண்டாயிரம் ஆண்டுகளாக வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்த உலகம், இருபதாம் நூற்றாண்டில் தொழிலை அடிப்படையாக கொள்ளத் தொடங்கியது. அதுவரை ஏராளமான பேருக்கு வாழ்வும், வளமும், வேலைவாய்ப்பும் வழங்கிய வேளாண்மையைப் போல தொழிற்துறை எனும் புதிய துறை தோன்றியது. தொழிலாளர் எனும் புதிய சமுதாயம் உருவானது. புதிய வகை வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணமாக இருப்பவர்கள் தொழில்முனைவோர் எனப்படும் ஒரு இனம். இந்த தொழில்முனைவோர் என்ற இனம் மட்டும் இல்லாவிட்டால், புதிய சிந்தனைகள் தொழில் வடிவம் பெறாது. பல தொழில்கள் தோன்றி இருக்காது. தொழில் நகரங்களும் உருவாகி இருக்காது.

அந்த வகையில் கோயம்புத்தூர் ஒரு தொழில் நகரமாக உருவாக பல தொழில்முனைவோர் பெரும் பங்காற்றி வந்துள்ளனர்; வருகின்றனர். அந்த வரிசையில் தற்போதுள்ள தொழில்முனைவோர் பட்டியலில் சிறப்பிடம் பெறுபவர் கே.பி.ஆர் என அழைக்கப்படும் கே.பி.ராமசாமி ஆவார். அவரது தொழிற்துறை சாதனைக்காக அவருக்கு பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. சமீபத்தில் தமிழ் கூறும் நல்லுலகின் தலைசிறந்த பத்திரிகையான ஆனந்த விகடன் குழுமத்தின் நாணயம் விகடனின் ‘செல்ஃப் மேட் ஆந்த்ரபிரனார்’ விருது கே.பி.ராமசாமிக்கு வழங்கப்பட்டது.

சிலருக்கு விருதுகள் சிறப்பு. சில பேர் விருதுக்கு பெருமை சேர்ப்பார்கள். கே.பி.ராமசாமி இரண்டாம் வகையைச் சேர்ந்தவர்.

ஒரு குக்கிராமத்தில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து சில ஆயிரம் ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்கி இன்று ஐந்தாயிரம் கோடி ரூபாய் அளவில் தொழில் நடத்துவதும் பல நூறு பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவது என்பதும் சாதாரணமானது அல்ல. அதிலும் அவரின் நிறுவனங்களில் பணிபுரிவோரில் மிகப் பெரும்பாலானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படி இந்த மாயம் நிகழ்ந்தது?

கே.பி.ராமசாமி கோவை பெருந்துறைக்கு அருகில் கள்ளியம்புதூர் என்ற ஒரு சின்னஞ்சிறு கிராமத்தை சேர்ந்தவர். சாதாரண விவசாயக் குடும்பம். வாழ்வில் முன்னேற வேண்டும். அந்த முன்னேற்றத்தால் தானும். இந்த சமுதாயமும் பயன்பெற வேண்டும் என்ற நேர்மறை எண்ணமும், ஊக்கமும் கொண்டவர் தான் கே.பி.ராமசாமி இந்த எண்ண ஓட்டம் கொண்டவர் வயல்வெளியில், தோட்டத்தில் காலம் கழிக்க முடியுமா?

விவசாயத்தை விட்டு தொழிற்துறைக்கு வர எண்ணிய போது எண்ணிய தொழிலுக்கு தேவையான முதலீடு இல்லை. ஆனால் தன்னம்பிக்கையை மூலதனமாகக் கொண்ட கே.பி.ஆருக்கு தனியாக பெரிய மூலதனம் தேவைப்படவில்லை. கையில் இருந்த சில ஆயிரம் ரூபாய் முதலீட்டுடன் தொழில் தொடங்கினார். உற்சாகமாக பணியாற்றுதல், ஊக்கத்தை கை விடாமல் இருத்தல் இரண்டும் தான் அவரின் கொள்கைகள். உழைப்பு ஊதியம் தந்தது, வெற்றி அவர் வாசல் தேடி வந்தது.

கேபிஆர் நிறுவனங்களின் வளர்ச்சியில் கே.பி.ஆர் அவர்களின் சகோதரர்கள் சிகாமணி மற்றும் நடராஜ் ஆகியோரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதும், குறிப்பிடத்தக்கதது ஆகும்.

தான், தன் குடும்பம், தன் சுற்றத்தார் என்று இருப்பவர் அல்ல கே.பி. ஆர் அவர்கள். தான் பிறந்த மண்ணுக்கும், தன்னைச்சுற்றி இருப்பவர்களுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ண ஓட்டம் உடையவர். மனம் போல வாழ்வு என்பதற்கேற்ப சமூக சேவை செய்யும் சிறப்பு வாய்ப்புகள் அவரைத்தேடி வந்தன. அதற்கு முன்பாகவே அவர் ரோட்டரி கிளப் போன்ற சமூக சேவை நிறுவனங்கள் மூலமாக பல சேவைப்பணிகளில் ஈடுபட்டு வந்தார். இவரின் சமூகப்பணிகளில் இரண்டை குறிப்பாக சொல்ல வேண்டும். ஒன்று அவரின் தொழில் நிறுவனங்களில் பணி புரியும் பல நூறு பெண்களை படிக்க வைப்பது. அடுத்தது, அடுத்த தலைமுறை மாணவர்கள் இந்திய அளவில் உயர்வு பெறும் வகையில் ஒரு ஐ.ஏ.எஸ். பயிற்சி நிலையத்தை எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் நடத்தி வருவதாகும்.

பொதுவாக பெரிய தொழில் நிறுவனங்களில் பணிபுரிவோர் தங்கள் வாழ்நாளில் பெரும்பாலும் பணியாளர்களாகவே இருந்து ஓய்வு பெறுவார்கள். முன்னேற்றம் என்பது அவர்கள் வாழ்வில் பெரிய அளவில் இருக்காது. அதற்குக்காரணம் அவர்கள் தங்கள் தகுதியை மேம்படுத்திக்கொள்ள வாய்ப்புகள் கிடைக்காததுதான். எந்த ஒரு தொழில் நிறுவனமும் தங்கள் பணியாளர் தொழில் உற்பத்தியை விட்டு விட்டு  சொந்த காரியங்களில் கவனம் செலுத்துவதை பெரிய அளவில் ஆதரிப்பதில்லை. அதற்கான எந்த வித சிறப்பு உதவிகளையோ, வழிகாட்டுதல்களையோ வழங்குவதில்லை. ஆனால் கே.பி.ஆர் நிறுவனங்களின் வழியே தனி. தொழிலாளர் முழு உற்சாகத்துடன் பணியாற்ற வேண்டும். தங்கள் தனி வாழ்க்கையிலும் குடும்ப வாழ்க்கையிலும் உயர்வு பெற வேண்டும். அதற்கான கல்வி உள்ளிட்ட உதவி தேவைப்பட்டால் தயங்காமல் வழங்குவோம் என்று முன் நிற்பதுதான் இதன் சிறப்பு.

அதற்கு எடுத்துக்காட்டுதான் இங்கு பணிபுரியும் போதே படித்து பட்டம் பெற்ற பல நூறு பெண்கள். இவர்கள் எல்லோரும் இங்கு வரும் போது பள்ளிப்படிப்பு முடித்து பணிக்கு வந்தவர்கள். ஒரு வகையில் மேற்கொண்டு படிக்க வாய்ப்பு இல்லாமல் வசதி இல்லாமல் பணிக்கு வந்தவர்கள். ஆனால் அவர்களுக்கு பணியும் கொடுத்து படிக்கவும் உதவும் தாயுள்ளத்துடன் கே.பி.ஆர் நிறுவனங்கள் நடந்து வருகின்றன என்பது  பாராட்டுக்குரியது. இந்த மகத்தான வாய்ப்பு கே.பி.ஆர் அவர்களின் மனதில் உதித்த எண்ணம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

“உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்” என்பது திருவள்ளுவர் வாக்கு. அதைப்போலவே ஒரு உயர்வான சிந்தனையில் பிறந்தது தான் கே.பி.ஆர் அவர்களின் ஐ.ஏ.எஸ். பயிற்சிக்கூடம். கோவையை மையமாகக்கொண்டு நடத்தப்பட்டு வரும் இங்கு பல மாணவ, மாணவியர் தங்கிப்பயிலும் வசதி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இங்கு ஐ.ஏ.எஸ். பயிற்சி பெறும் மாணவர்கள், சுற்றிலுமுள்ள மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு பாடம் சொல்லித்தருவது ஒரு விளக்கு, இன்னொரு விளக்கிற்கு ஒளி ஏற்றுவது போலாகும்.

ஒவ்வொரு தனிமனிதருக்கும் நிறுவனத்துக்கும் சமூகத்துக்கும் திருப்பி செலுத்த வேண்டிய கடமை சில உண்டு. அந்த வகையில் ஒரு தனிமனிதராகவும், நிறுவனமாகவும் தனது சமூகப்பொறுப்புணர்ச்சியை காட்டும் வகையில் கே.பி.இராமசாமி அவர்கள் செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் இவர் எந்த விருதுக்கும் சிறப்பு சேர்க்கும் பெருமை மிக்கவராகிறார். அவரை வாழ்த்துவதில் கோவை மெயில் பெருமை கொள்கிறது.

படங்கள்: நாணயம் விகடன்.