யோகமும் மனித மாண்பும்: 2 நாள் இணைய வழி கருத்தரங்கம்

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியும் ஆழியார் அறிவுத் திருக்கோயிலும் இணைந்து  “யோகமும் மனித மாண்பும்” எனும் தலைப்பில் இரண்டு நாள் இணைய வழி பன்னாட்டுக் கருத்தரங்கம் (5.3.2021 – 6.3.2021) ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் சென்னை, மீனாட்சி அறக்கட்டளை உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் யோக அறிவியல் மற்றும் சிகிச்சைத் துறையின் தலைவர் மற்றும் பேராசிரியர் இளங்கோவன் அவர்கள் இணைய வழியில் கலந்து கொண்டு கருத்தரங்கைத் துவக்கி வைத்து சிறப்புரை வழங்கினார்.

இக்கருத்தரங்கில் ஆழியார் அறிவுத் திருக்கோயில், உலக சமுதாய சேவா சங்கத்தின் இயக்குநர் பெருமாள் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். அவர் பேசுகையில், மனித வாழ்வின் நோக்கம் ஆறாவது அறிவில் உயர்ந்து இயற்கை இன்பங்களைத் துய்த்து நிறைவும் அமைதியும் பெறும் என்பதை எடுத்துரைத்தார். அறிவின் முழுமையை நோக்கிய பயணமே மனித வாழ்வாகும். இயற்கையின் மூலத்தை உணர்ந்து, இயற்கை நியதியை உணர்ந்து, இயற்கைக்கு இணக்கமாக வாழ்ந்து வாழ்க்கைக்கு ஓர் எடுத்துக்காட்டாய் ஒவ்வொருவரும் வாழ வேண்டும் என்பதை எடுத்துக்கூறி வாழ்த்தினார். மேலும், யோகா பட்டயக் கல்வி குறித்தும் விளக்கினார். இதில் சென்னை ஆரோக்கிய நல மையத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை சித்த மருத்துவர் சிவராமன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்கள்.

இரண்டாம் நாள் நிகழ்வில் இரண்டு அமர்வுகள் நடைபெற்றது. உடல் நலம் பேணுவதில் யோகா எனும் தலைப்பில் பாரதியார் பல்கலைக்கழகத்தின் உடற்கல்வித் துறை உதவிப் பேராசிரியர் வள்ளிமுருகனும் மன ஆரோக்கியம் மற்றும் உணர்வுகளைப் பேணுவதில் யோகாவின் பங்கு எனும் தலைப்பில் உலக சமுதாய சேவா சங்கத்தின் ஸ்மார்ட் இயக்குநரகத்தின் இயக்குநர் தாமோதரனும் சிறப்புரை வழங்கினார்கள். மஸ்கட், யோக சாலையின் நிறுவனர் மார்க்சியம்கார்க்கி அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். வணிகவியல் துறை முதன்மையர் குமுதா தேவி அவர்கள் ஒருங்கிணைத்து வழங்கிய கருத்தரங்கில் கல்லூரி பேராசிரியர்கள் பல்வேறு கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள் ஆராய்ச்சியாளர்கள் மாணவர்கள் என 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கட்டுரை வழங்கினார்கள்.