அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை !

கோவை: மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணி நிரந்தரம், கால முறை ஊதியம் மற்றும் பணிக்கொடை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் இன்று (22.2.2021) கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதுகுறித்து அங்கன்வாடி பணியாளர்கள் கூறியதாவது: அங்கன்வாடி பணியாளராக கடந்த 30 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறோம் எங்களுக்கு கால முறை ஊதியத்தை அரசு வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதைப் போல அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பணி ஓய்வு பெறும்போது ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு பணி கொடையாக குறைந்தபட்சம் ரூ 10 லட்சம் வழங்க வேண்டும். என்றனர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடர்வதால் ஆட்சியர் அலுவலகம் முன்பு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.