கொரோனா கட்டுப்பாடுடன் திறக்கப்பட்ட பள்ளி, கல்லூரிகள்

கொரோனா காரணத்தால் கடந்த 10 மாதங்களாக மூடப்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் நீண்ட இடைவெளிக்குப்பின் மீண்டும்  இன்று (08.02.2021) திறக்கப்பட்டன.

பள்ளி,கல்லூரி திறப்பு மாணவ, மாணவிகளிடேயே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டது.  இதனால் தற்காலிகமாக ஆன் லைன் வகுப்புகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு தொடர்ந்து சுமார் 10 மாதங்களாக மாணவ, மாணவிகள் வீட்டில் இருந்தவாறு செல்போன் மூலம் படிப்பை தொடர்ந்தனர். இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் குறைந்ததை அடுத்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பட்டது. இன்று 8 ஆம் தேதி முதல் 9, 11 வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.  மாணவர்கள் பயன்படுத்தக்கூடிய நூலகம், பொது இடங்கள், உணவு கூடங்களும் தயார் செய்யப்பட்டு வருகிறது. பொது கழிவறைகள் கிருசி நாசினிகள் கொண்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் கல்லூரி வரும் மாணவ, மாணவிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் உடல் வெப்ப பரிசோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.