ராமேஸ்வரத்தில் செயற்கைக்கோள் ஏவும் நிகழ்ச்சி: கேபிஆர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் விண்வெளி ஆய்வு மற்றும் ஏவுகணை தொழில் நுட்ப பயிற்சி மையத்தின் சார்பில் ராமேஸ்வரத்தில் நடைபெற்ற பெம்டோ செயற்கைகோள்கள் ஹீலியம் பலூன்கள் மூலம் விண்வெளியில் நிலைநிறுத்தும் கின்னஸ் உலக சாதனை நிகழ்வில் கோவை கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியை சேர்ந்த 10 மாணவர்கள் பங்கேற்றனர்.

கே.பி.ஆர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.பி.ராமசாமி வழிகாட்டுதலில் கல்லூரியின் முதன்மை செயலர் ஏ.எம்.நடராஜன் மற்றும் முதல்வர் அகிலா ஒருங்கிணைப்பில் இரண்டு வாரங்களுக்கு முன் நடைபெற்ற மாணவர் பயிற்சி தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த மாணவர்கள் கடந்த இரண்டு நாட்களாக ராமேஸ்வரத்தில் நடைபெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான சிறிய ரக செயற்கை கோள்களை உருவாக்கும் பயிற்சியில் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த காணொளி நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி, அண்ணா, எம்ஜிஆர் பல்கலைக் கழகங்களின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் திருவாசகம், ஸ்பேஸ் ஜோன்,  இந்திய நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஆனந்த் மேக லிங்கம், இஸ்ரோ அமைப்பின் செயற்கைக்கோள் ஆராய்ச்சி வல்லுநர்கள் அறிவியலாளர் சிவதாணுப்பிள்ளை குழுவைச் சேர்ந்த ராவ் மற்றும் செயற்கைக்கோள் மைய இயக்குனர் கிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்தினர். இதைத் தொடர்ந்து முழுவதும் மாணவர்களால் உருவாக்கப்பட்ட 100 சிறிய ரக செயற்கைகோள்கள் இரண்டு ஹீலியம் பலூன்கள் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட இந்த செயற்கைக்கோள்கள் இஸ்ரோ விஞ்ஞானியும் எஸ்எஸ்எல் வி திட்ட மேலாளர் கோகுல் வழிகாட்டுதலில் உருவாக்கப்பட்டு சுமார் 38 ஆயிரம் மீட்டர் உயரம் வரை பறந்து பூமியின் தட்ப வெட்ப நிலை, கதிர்வீச்சு, ஓசோன் படலம் குறித்த தகவல்களை அனுப்பி கணினியில் பதிவு செய்யப்பட்டது.